செய்திகள்

வேளாண் அதிகாரி கொலை வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் கைது

நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (57). இவர் நெல்லை வேளாண்மை பொறியியல் துறையில் உதவி செயற் பொறியாளராக பணியாற்றினார். இந்த ஆண்டு பணியில் இருந்து ஓய்வுபெற இருந்த இவர் பிப்ரவரி 20ம் தேதி மர்மமான முறையில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான விசாரணையில், அவரது துறையில் புதிதாக ஏழு டிரைவர்கள் பணிநியமனம் செய்யப்பட்டதாகவும், இதில் மேலிடத்தில் இருந்து தந்த பட்டியலை நியமிக்காமல் அவரே நியமனம் செய்ததாகவும், இதனை மேலிடம் கண்டித்ததால், மனமுடைந்த அதிகாரி தச்சநல்லூரில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிய வந்தது. இதனால் முத்துகுமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை துவக்கினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் குதித்தன.

முத்துகுமாரசாமி தற்கொலை தொடர்பாக கடுமையான கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால், வழக்கு விசாரணை சிபிசிஐடி.,யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் வேளாண் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மிரட்டியதாலேயே முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாக புகார்கள் எழுந்தன. இதன் எதிரொலியாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி மற்றும் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. இதற்கிடையில் சிபிசிஐடி போலீசார் நடத்தி வந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. முத்துகுமாரசாமி தற்கொலை தொடர்பான வழக்கை வாபஸ் பெறுமாறு அதிமுக.,வினர் மிரட்டியதாகவும் புகார்கள் எழுந்தன. ஆனால், முத்துகுமாரசாமியின் குடும்பத்தினர் அந்த புகார்களை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

முத்துகுமாரசாமி தற்கொலைக்கு மிரட்டலை காரணம் என்பதை உறுதி செய்யும் வகையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பிப்ரவரி மாதத்தில் முத்துகுமாரசாமியின் தொலைபேசி பயன்பாடு குறித்த விபரங்களை கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் டிவி ஒன்று வெளியிட்டது. அதில் பிப்ரவரி முதல் தேதியில் இருந்து பிப்ரவரி 20ம் தேதி முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வரை மொத்தம் 600 அழைப்புக்கள் அவருக்கு வந்துள்ளதாகவும், அதில் கடைசியாக வந்த தொலைப்பேசி அழைப்பிற்கும் முத்துகுமாரசாமியின் தற்கொலைக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வழக்கு விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி போலீசார் நேற்று இரவு அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் விடியவிடிய விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து இன்று அதிகாலை 5 மணியளவில் அவரை கைது செய்து நெல்லை அழைத்துச் சென்றனர். அவருடன் வேளாண் துறை பொறியாளர் செந்தில் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து, நெல்லை அழைத்துச் செல்கின்றனர். அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், மிகச் சரியான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.