செய்திகள்

ஶ்ரீலங்கா சுதந்திக் கட்சி மத்திய குழுவிலிருந்து மகிந்தவின் ஆட்கள் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவுக்கு நியமிக்கப்பட்ட சில உறுப்பினர்களை நீக்கிவிட்டு அந்த இடங்களுக்கு புதியவர்களை நியமிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சுதந்திரக் கட்சியினுள் ஒரு தரப்பினர் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதுடன், அவருக்கு சார்பான வகையில் பிரசாரங்களையும் முன்னெடுத்துவரும் நிலைமையிலேயே இந்த நகர்வுகள் கட்சியின் தலைமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சி தீர்மானங்களை கட்சிக்குள்ளேயே தடங்கல்கள் இன்றி சுமுகமாக முன்னெடுத்துச் செல்லும் பொருட்டே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு அமைய அக்கட்சியின் தலைவரால் மத்திய குழுவுக்கு 25 உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள அதிகாரம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.