செய்திகள்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அவசரமாகக் கூடுகிறது: முக்கிய பதவிகளில் மாற்றம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் செய்வது குறித்து இன்று நடைபெறும் கட்சி விசேட மத்திய குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய அமைப்பாளர், செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகளுக்கு இதன்போது புதியவர்கள் நியமிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நியமிக்கப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற பேச்சுவார்த் தையில் ஏற்பட்ட இனக்கப்பாட்டையடுத்து தலைமை பதவியில் மாற்றம் செய்யப் பட்டது.

கட்சி தேசிய அமைப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேர்தலின் பின்னர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தேசிய அமைப்பாளர் பதவிக்கு வெற்றிடம் காணப்படுகிறது. இது தவிர கட்சி செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கும் இன்று புதியவர்கள் நியமிக்கப்பட இருப்பதாக அறிய வருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் விசேட மத்திய குழுவில் எடுக்கப்படும் முடிவுக்கு நாளை நடைபெறும் கட்சி நிறைவேற்றுக் குழு மற்றும் அகில இலங்கை செயற் குழுவின் அனுமதியும் பெறப்படவுள்ளது.