செய்திகள்

ஶ்ரீல.சு.க. பிரதிநிதிகளுடன் ரணில் பேச்சு: முரண்பாடுகளுடன் இழுபறியில் முடிவு

அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேசிய அரசாங்கத்தை அமைத்துக்கொள்வது போன்ற விடயங்களை ஆராய்வதற்காக அரசாங்கத்துக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உயர் மட்டக்குழு ஒன்றுக்கும் இடையே அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுக்கள் இழுபறியில் முடிவடைந்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கக் ழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஶ்ரீல.சு.க. உயர்மட்ட குழுவுக்கும் இடையிலான இந்தப் பேச்சுக்கள் அலரி மாளிகையில் நேற்றிரவு நீண்ட நேரம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திரக் கட்சியின் தூதுக்குழுவில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜோன் செனிவிரட்ண ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர். அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.

ஜனாதிபதிக்கு தற்போதுள்ள அதிகாரங்களில் பலவற்றை இல்லாதொழிக்கக்கூடாது என சுதந்திரக் கட்சியினர் இதன்போது வலியுறுத்தியதாகத் தெரிகின்றது. குறிப்பாக மாகாண சபைகள் தொடர்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் தொடர்ந்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்தினார்கள்.

இருந்த போதிலும், அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒத்துவராவிட்டால் பாராளுமன்றத்தைக் கலைத்து மற்றொரு தேர்தலுக்குச் செல்வதைவிட தமக்கு மாற்று வழி இல்லை என அரசாங்கத்தின் சார்பில் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இவ்விடயத்தை இருதரப்பினருக்கும் இடையில் முரண்பாடு மேலோங்கியதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது. இந்த நிலையில் முடிவு எமுவுமின்றி இழுபறியில் சந்திப்பு முடிவடைந்ததாகத் தெரிகின்றது.