செய்திகள்

ஶ்ரீல.சு.க பிரதமர் வேட்பாளர் நிமல் அல்லது ராஜிதவே : மஹிந்த புதிய அணியில்?

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக  எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அல்லது அமைச்சர்  ராஜித சேனாரட்ன  களமிறக்கப்படலாம் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சூழ்நிலையில்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அந்த கட்சியில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் சந்தர்ப்பங்கள் குறைந்துள்ளது. இதனால் அவரை வேறு அணியொன்றில் களமிறக்குவதற்காக தற்போது முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டுமென கூட்டங்களை நடத்தி வரும் அவருக்கு ஆதரவான தரப்பினர் புதிய அணியொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக அடிக்கடி கூடி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அதிருப்தியில் இருக்கும் மஹிந்த ஆதரவு தரப்பினரும் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான தினேஷ் குணவர்தன , வாசுதேவ நாணயக்கார , விமல் வீரவன்ச , திஸ்ஸ விதாரன மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்டவரக்ளும் இது தொடர்பாக தற்போது ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.