செய்திகள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள மஹிந்தவுக்கு எதிரான புத்தகம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை விமர்சித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரால் புத்தகமொன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக கட்சிக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அந்த புத்தகம் யரால் அச்சிடப்பட்டதெனவும் எவ்வாறு வெளியிடப்பட்டதெனவும் தனக்கு எதுவும் தெரியாது என கட்சிக்குள் ஒவ்வொருவரும் கையை விரிப்பதாகவும் தெரிய வருகின்றது.

முகப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படத்துடன் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவின் வெளியீடு என குறிப்பிட்டு இது பற்றியும் சிந்தியுங்கள் கட்சியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் அந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் அதில் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை விமர்சித்தும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியை போற்றியும் எழுதப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் நேற்று ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு விநியோகிக்கபட்டமைக்கு யாரும் பொறுப்பேற்கவில்லையென்பதுடன் அந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த அந்த புத்தகம் தொடரபாக தனக்கு எதுவும் தெரியாதெனவும் அந்த புத்தகத்தில் உள்ள விடயங்கள் தொடர்பாக தனது எதிர்ப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த புத்தக விவகாரம் கட்சிக்குள் குழப்ப நிலைமையொன்றை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.