செய்திகள்

ஷங்கர் பதில் சொல்லும் வரை ஓயமாட்டோம்: திருநங்கைகள்

இயக்குநர் ஷங்கர் பதில் சொல்லும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று ‘ஐ’ படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் எச்சரித்தனர்.

‘ஐ’ படத்தை எதிர்த்து திங்கள்கிழமை காலை சென்னையில் தணிக்கைக் குழு அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா, பானு, ரோஸ் உள்ளிட்ட திருநங்கைகள் பலர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

‘திருநங்கை என்ன உங்களுக்கு கேலிக்கூத்தா? திருநங்கை காதல் என்ன உங்களுக்கு வக்கிரமா? திருநங்கைகள் ஆதரவற்றவரா? குரலற்றவரா? இயக்குநர் ஷங்கரை கைது செய்’ என்ற முழக்கங்கள் இடப்பட்டன.

02 (1)திருநங்கை பானு செய்தியாளர்களிடம் பேசினார். ”இயக்குநர் ஷங்கர் உருவாக்கிய ‘ஐ’ படம் உலக அளவில் வெளியாகி இருக்கு. இந்த ‘ஐ’ படத்தில் திருநங்கையரை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை எதிர்த்து தணிக்கைத் துறையை நாங்கள் முற்றுகையிட்டுள்ளோம்.

இந்தப் படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’ என்று திருநங்கையரைக் கிண்டல் செய்த, கேலி செய்த காட்சிகள் இடம்பெறக் காரணமாக இருந்த ஷங்கர் மீது தணிக்கை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், இந்திய அரசும் இதில் தலையிட வேண்டும்.

திருநங்கைகள் மதிப்புடனும், மரியாதையுடனும் தற்போதுதான் வளர்ந்து வருகிறார்கள். வளர்ந்து வரும் இந்தப் பொது சமூகத்தை, இந்த சிறுபான்மையின மக்களை மீண்டும் ஒடுக்கி, அடக்கி பழைய நிலைக்குத் தள்ளுகிறார்கள். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தணிக்கை வாரியத்தில் ஒரு திருநங்கையை உறுப்பினராக நியமிக்க வேண்டும். ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஷங்கர் மீது குற்ற வழக்கைப் பதிவு செய்ய வேண்டும்.

இது முதற்கட்டப் போராட்டம்தான். ஷங்கரும், தணிக்கை வாரியமும் உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ திருநங்கை குறித்த தவறான சித்தரிப்புக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். அதுவரை ஓயமாட்டோம்” என்று பானு கூறினார்.

இதையடுத்து, தணிக்கைக் குழு அதிகாரி பக்கிரிசாமியிடம் பேசிய பிறகு பானு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, ” ‘திருநங்கைகளை இழிவு படுத்தும் காட்சிகள் விரைவில் நீக்கப்படும். இனிமேல், இது போன்ற காட்சிகள் இடம்பெறாது. திருநங்கைகள் குறித்து படத்தில் காட்சி வருமாயின், அது குறித்து படம் பார்க்க திருநங்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்’ என பக்கிரிசாமி உறுதி அளித்துள்ளார்” என்று பானு தெரிவித்தார்.

இதனிடையே, லிவிங் ஸ்மைல் வித்யா பேசுகையில், ”திரைப்படங்களில் திருநங்கைகளை கண்ணியமாகக் காட்ட வேண்டும். கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. ஒரு பால் ஈர்ப்பினர், திருநங்கைகளை தாக்கும் வசனங்களுக்கு இடம் தரக்கூடாது’

‘ஐ’ படத்தின் கதையைப் பாதிக்காமல், திருநங்கைகளை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை மட்டும் நீக்க வேண்டும்.

மிருகங்கள் துன்புறுத்தப்படவில்லை, மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என டைட்டிலில் அறிவிக்கிறார்கள். ஒரு நாய் மேல காட்டும் மரியாதையை மனிதர்களாகிய எங்கள் மீது காட்டாதது ஏன்? இது குறித்து வழக்கு போட முயற்சித்து வருகிறோம்” என்று ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா தெரிவித்தார்.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள இயக்குநர் ஷங்கரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.