செய்திகள்

‘ஸ்பரிட் ஒப் சென்னை’ இயக்குனரானார் நடிகர் விக்ரம்

நடிகர்கள் இயக்குநராவது புதிதல்ல. கடந்த காலங்களில் எத்தனையோ ஹீரோக்கள் இயக்குநராகி இருக்கிறார்கள். இந்த பட்டியலில் நடிகர் விக்ரமும் இடம் பிடித்துவிட்டார்.

ஆனால், விக்ரம் இயக்கியது திரைப்படத்தை அல்ல, ஸ்பிரிட் ஒப் சென்னை (Spirit Of Chennai) என்ற குறும்படத்தை (இசை அல்பத்தை) இயக்கியுள்ளார். அதில் சூர்யா, நயன்தாரா, விஜய் சேதுபதி, கார்த்தி, நித்யா மேனன், மும்தாஜ், சிவகார்த்திகேயன், விக்ரம் என தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி கன்னட, தெலுங்கு, மலையாள, ஹிந்தி முன்னணி நட்சத்திரங்கள் பலர் தோன்றியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன், ஓம்பிரகாஷ் இருவரும் இந்த இசைப்படத்துக்கு ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றி உள்ளனர். பிஸி நடிகராக இருக்கும் விக்ரம் திடீரென இப்படியொரு முயற்சியில் இறங்கியது ஏன்? ‘உலகம் இதுவரை கண்டிராத பெரு வெள்ளம் சென்னையை சூழ்ந்த அந்த நாட்கள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தன.

உயிர் வாழ அத்தியாவசிய தேவையான உணவு, குடிக்க தண்ணீர் இது போல எதுவுமே கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டது சென்னை. சில இடங்களில் உயிரைக் கூட விட்டு வைக்கவில்லை இந்த அடைமழை. இந்தப் பெரு வெள்ளம் தேங்கிக் கிடந்ததைப் போல, மக்கள் தேங்கவில்லை. மனிதநேயம் உள்ள அனைவரும் வெளியே வந்தார்கள். அவர்களால் முடிந்தவரை அத்தனை பேரையும் வெளியே இழுத்து வந்தார்கள். வெள்ளத்தைத் தாண்டி, உலகில் இருக்கும் அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது.

வெள்ளத்துக்கு எதிராக இறங்கி, என் நகரத்தினை மீட்டெடுப்பேன் என சபதமேற்று வந்தவர்கள் அவர்கள். சென்னை மக்களுக்கிடையே இருந்த அந்த ஒற்றுமை என்னையும் அவர்களோடு ஏதோ ஒரு வழியில் இணைத்துக் கொள்ளத் தூண்டியது. உதவும் மனப்பான்மையுடன் இருக்கும் இந்த மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த இயற்கைப் பேரிடர்தானா? என்ற கேள்வி என்னுள் வந்தது.

எந்தவித வெறுப்பும், தயக்கமுமின்றி, ஒற்றுமையாகக் களமிறங்கிய, அந்த ஆயிரக்கணக்கான நல்உள்ளங்களை என் கேள்விக்கு பதிலாக, நான் பார்த்தேன். மனிதநேயத்தின் மீதான மதிப்பு என்னுள் இப்போது இன்னும் அதிகமானது. அதன் வெளிப்பாடுதான் ஸ்பிரிட் ஒப் சென்னை.’ என்று விவரிக்கின்றார் விக்ரம். பல நாட்கள் சாப்பாடு உறக்கம் இல்லாமல் பல நட்சத்திரங்களை ஒருங்கிணைத்து இதை இயக்கியுள்ளார். ஸ்பிரிட் ஒப் சென்னையை பார்த்தவர்கள் விக்ரமை பாராட்டி தள்ளுகிறார்கள். அதேநேரம், விக்ரமை சிலர் கடுமையாக விமர்சனமும் செய்கிறார்கள். அதாவது இப்படி ஒரு படத்தை எடுப்பதால் என்ன நன்மை? அதற்கு செலவு செய்த பணத்தை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, வெள்ளத்தால் வீட்டை இழந்தவர்களுக்கு உதவி செய்திருந்தால் அவர்களின் கஸ்டம் ஓரளவுக்கு நீங்கி இருக்குமே என்கின்றனர்.

N5