செய்திகள்

ஸ்ரீலங்கா சு.கட்சியை தேசிய அரசாங்கத்தில் இணைத்ததன் மூலம் தீவிர சிங்களத் தேசியவாதிகளும் மகிந்த ராஜபக்ஷவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

தற்போது எழும் கேள்வி இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கம் நீடிக்குமா? என்பதே. இது நீடிக்கும் என்பதை விட மேற்குலக இந்தியக் கூட்டு எப்படியாவது நீடிக்க வைக்க முயற்சிக்கும்.

இதற்கேற்ற வகையில் அனைத்துப் பக்கங்களினாலும் காய்களை நகர்த்தும். குறிப்பாகத் தீவிர சிங்கள தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும். அதனூடாக மஹிந்தராஜபக்ஷ தனிமைப்படுத்தப்படுவார்.

ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தேசிய அரசாங்கத்தில் இணைத்ததன் மூலம் தீவிர சிங்களத் தேசிய வாதிகளும், மஹிந்த ராஜபக்ஷவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை மைத்திரி ஏற்றமையும் இத் தனிமைப்படுத்தலை ஊக்குவித்துள்ளது.எனவே தற்போதைக்கு தேசிய அரசாங்கத்துக்கு நெருக்கடிகள் வராது என்றே கூறலாம்.

இவ்வாறு தெரிவித்தார் இலங்கையின் பிரபல அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம்.

இலங்கையில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து அண்மையில் உருவாக்கிய தேசிய அரசாங்கம் தொடர்பில் கருத்துக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய அரசாங்கம் அமைக்கத் தவறுகின்ற ஒவ்வொரு நிமிடமும் சீனாவின் செல்வாக்கினை அகற்றுதல் என்ற தமது இலக்கிற்கு ஆபத்து வரும் எனக் கருதியமையே அமெரிக்கா தலைமையிலான மேற்குலக இந்தியக் கூட்டு அவசர அவசரமாகத் தேசிய அரசாங்கம் உருவாக்கியதற்கான காரணம்.இதன் மூலம் மகிந்தரின் முயற்சிகளுக்குத் தற்காலிக அணை போடப்பட்டுள்ளது.அதனூடாகச் சீனாவின் முன்னெடுப்புக்களுக்கும் தடை போட்டுள்ளது.

இந்திய-மேற்குலகக் கூட்டுத் தான் இந்தத் தேசிய அரசாங்க முயற்சிகளுக்குப் பின்னால் நின்றிருக்கிறது. இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து இந்தத் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டமைக்கு அது உதவியுள்ளது. இந்தத் தேசிய அரசாங்கம் உருவாக்கத்திற்கான காரணம் சீனா மீண்டும் செல்வாக்குச் செலுத்ததாத வகையில் பலமான அடித்தளத்தைப் போடுவதாகும்.

அண்மைக்காலமாக இந்திய மேற்குலகக் கூட்டுப் பல வேலைத்திட்டங்களை இதற்காக நகர்த்தி வருகின்றது.சர்வதேச விசாரணை அறிக்கை வெளியிடுதலைப் பிற்போடுதல்,இராணுவ ரீதியாக சீனாவிற்குப் பயன்தரக் கூடிய துறைமுக அபிவிருத்தியை நிறுத்துதல், நிறுத்தி வைக்கப்பட்ட ஜி.எஸ்.பி சலுகையை மீள வழங்குதல்,சீனாவை மேவும் வகையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தல், மைத்திரியின் இந்தியா,பிரித்தானியாப் பயணங்களும் அங்கே இடம்பெற்ற பிரம்மாண்டமான வரவேற்புக்களும் (இந்தியாவின் பிரதமரும், ஜனாதிபதியும் இணைந்து வரவேற்றமை, பிரித்தானியப் பிரதமர் மைத்திரியின் வாகனத்தடிக்கே வந்து தானே கதவைத் திறந்து வரவேற்றமை, மகாராணியாரும் சந்தித்துக் கையுறை கழட்டிக் கைலாகு கொடுத்தமை)என்பவையெல்லாம் சீனச் செல்வாக்கினை அகற்றுவதற்காகவே முன்னெடுக்கப்பட்டன.

முன்னர் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும்,இந்தியாவும் தங்களுக்குச் சார்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தன. இதனால், அவை பெருமளவுக்கு நடைமுறைச் சாத்தியப்பாடுகளை எட்டவில்லை. புலிகளுடனான யுத்த நிறுத்த நடவடிக்கைகள் இதனால் தான் தோல்வியுற்றன.இந்தியா அதனை விரும்பாமையே பிரதான காரணமாகும்.இந்தியா தன்னை மேவி எதுவும் இலங்கையில் நடைபெறுவதை விரும்பவில்லை.

2005 ஆம் ஆண்டு மகிந்தர் ஜனாதிபதியான பின்னர் இந்தப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவம் காரணமாகச் சீனாவின் செல்வாக்கினை அகற்ற வேண்டிய தேவை இரண்டு தரப்புக்குமே தேவையாக இருந்தது.

இரண்டு தரப்பும் இணைந்த வேலைத்திட்டம் இல்லாமல் இவை சாத்தியமாகாது என்கிற விடயமும் இரண்டு தரப்புக்கும் நன்றாகவே தெரியும்.இதனால்,இணைந்த வேலைத்திட்டத்தினைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்றன.ஆட்சி மாற்றத்துடன் அதனை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றன.

சீனாவிற்கும் கேந்திர இடத்தை விட்டுக் கொடுக்க முடியாதாகையால் அது அண்மைக்காலமாக மகிந்த ராஜபக்ஷவின் மீள் எழுச்சியை ஊக்குவித்தது. மகிந்தரும் ஆரம்பத்தில் தான் அரசியலுக்கு வரப் போவதாகக் கூறவில்லை. ஆனால் தனக்குச் சார்பான நுகேகொட, கண்டிக் கூட்டங்கள் கையெழுத்துப் போராட்டம்,அவரது இல்லத்திற்கான மக்கள் படையெடுப்பு என்பவற்றிற்குப் பின்னர் அவர் பகிரங்கமாகவே அரசியலுக்கு வரப் பொவதை அறிவித்திருந்தார்.

அதனுடன் மட்டும் நின்று விடாது சுதந்திரக் கட்சியின் மேல்மாகாண உள்ளுராட்சிச் சபை உறுப்பினர்களை வரவழைத்துக் கூட்டமொன்றையும் நடாத்தியிருந்தார்.

மேல்மாகாண உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் 528 பேரில் 409 பேர் இதில் கலந்து கொண்டனர்.இதன் பின்னர் தான் கட்சிப் பணிகளுக்கு வருமாறு மகிந்தருக்கு மைத்திரி பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இவ்வாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் மைத்திரிக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக இந்தியக் கூட்டு மேலும் விழித்துக் கொண்டது. தேசிய அரசாங்கம் உருவாக்கத் தவறுகின்ற ஒவ்வொரு நிமிடமும் சீனாவின் செல்வாக்கினை அகற்றுதல் என்ற தமது இலக்கிற்கு ஆபத்து வரும் எனக் கருதியது. அவசர அவசரமாக முயற்சி செய்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மகிந்தரின் முயற்சிகளுக்குத் தற்காலிக அணையைப் போட்டுள்ளது. அரசியல் வாதிகளுக்குத் தடையைப் போட்டு விட்டால் மக்களுக்கு உள்@ர்த் தலைமை இல்லாமல் போய்விடும். மக்களும் சற்று அமைதியாகி விடுவார்கள். இது மக்களிடம் மனமாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் உதவியாக அமைந்து விடும். மக்களின் மனங்களை மாற்றுவதற்கு ஐரோப்பிய அரசு சார்பற்றவர்களை, நிறுவனங்களைக் களமிறக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

இன்னோர் பக்கத்தில் இராணுவத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கும் தேசிய அரசாங்கம் அவசியமாகின்றது. இராணுவத்திற்குரிய அரசியல் பலத்தினை இல்லாமல் செய்வதே இதற்குப் பின்னாலுள்ள நோக்கம்.

இதற்கப்பால் இராணுவம் பறித்த காணிகளில் சிலவற்றையாவது தமிழ்மக்களிடம் கையளிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இந்திய மேற்குலகத்துக்கு இருக்கின்றது.இல்லையேல் தமிழ்த் தேசிய மீளெழுச்சியைத் தடுக்க முடியாத நிலை ஏற்படும். இந்தக் காணி கையளிப்பதற்கும் இராணுவம் தடையாகவிருக்கின்றது. வசாவிளான் நிகழ்வுகள் இதற்குச் சிறந்த உதாரணம்.அங்கு மக்களின் மீள்குடியேற்றத்தைத் தடுக்கக் கற்தூண்களைக் கொண்ட பாதுகாப்பு வேலியைப் படையினர் அமைக்கின்றனர்.

தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளமையினால் பாராளுமன்றத் தேர்தலும் பிற்போடப்படலாம். மக்கள் தீர்ப்புத் தேர்தலை நடாத்திப் பாராளுமன்றத்தின் காலவெல்லையை இன்னோர் பதவிக் காலத்திற்கு நீடிக்கச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தேர்தலில் மகிந்தர் தரப்பு வெற்றி பெறக் கூடிய சூழல் இருந்தால் இந்திய மேற்குலகக் கூட்டு தேர்தலை நடாத்த விடப் போவதில்லை.

இவற்றை விட தமிழ்மக்களுக்கத் தேசிய அரசாங்கம் பயன்கள் தரக் கூடியதா?என்கிற இன்னோர் கேள்வி எழுகின்றது.தமிழ்மக்களின் விவகாரம் ஆட்சி செய்யும் அரசாங்கத்துடன் மட்டும் தொடர்புடைய விவகாரமல்ல.

அது இலங்கை அரசு உருவாக்கத்துடன் தொடர்புடைய பிரச்சினை.அரச அதிகாரக் கட்டமைப்பைப் பன்மைத் தன்மை ஆக்குவதுடனும் அதில் தமிழ்மக்கள் ஒரு தேசமாக இணைவதுடனும் தொடர்புடைய பிரச்சினை.

இந்தப் பிரச்சினை தேசிய அரசாங்கத்தினால் நிறைவேறும் எனக் கூற முடியாது.தேசிய அரசாங்கத்திற்குப் பின்னால் நிற்கும் மேற்குலக-இந்தியக் கூட்டமைப்பு நிர்ப்பந்தம் வந்தால் ஒழிய இது விடயத்தில் எந்த அழுத்தங்களையும் கொடுக்கப் போவதில்லை.

யாழ்.நகர் நிருபர்-