செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியில் ஊழியர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே மோதல்

ஹம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியில் ஊழியர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்த நிலையில் அங்கு சென்ற பொலிஸ் வாகனமொன்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை மோதியதால் பொலிஸாருக்கும் துறைமுக ஊழியர்களுக்குமிடையே முறுகல் நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துறைமுகத்தில் இடம்பெறும் திருட்டு சம்பவங்கள் மற்றும் ஊழியர்களுக்கு உள்ளே பைகளை கொண்டு செல்ல முடியாமை போன்ற விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் ஊழியர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அங்கு நிலைமைகளை அவதானிக்க சென்ற பொலிஸார் பயணித்த ஜீப் வண்டியொன்று அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரரின் காலின் மீது ஏறியுள்ளது. இதன்போது கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த ஜீப் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் . இவ்வேளையில் இரு தரப்பினருக்குமிடையே முறுகல் நிலையேற்பட்டு அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ் ஜீப் மோதி காயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.