செய்திகள்

ஹரிஷ்ணவி படுகொலை ; சந்தேக நபருக்கு மறியல் நீடிப்பு

வவுனியா – விபுலானந்தா வித்தியாலய மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் உத்தரவிட்டார்.

விபுலானந்தா பாடசாலையில் கல்விகற்றுவந்த 14 வயதுடைய உக்குளாங்குளத்தைச் சேர்ந்த ஹரிஷ்ணவி என்ற மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தூக்கிலிடப்பட்டவாறு அவரது வீட்டில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பாலசிங்கம் ஜனதன் என்ற நபரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைது செய்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரின் இரத்தமாதிரியை மரபணு பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளதாக பொலிஸார் மன்றில் அறிவித்தனர்.

அதேவேளை மாணவி ஹரிஷ்ணவியின் கொலை தொடர்பில் அவசர மரண விசாரணையை நடத்திய அதிகாரி எஸ். கிஷோர், நீதிமன்றத்தில் வழங்கிய அறிக்கையின்படி மாணவி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில் விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் திரட்டப்பட்டிருப்பதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

 

நேற்றைய வழக்கு விசாரணையின்போது சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

 

N5