செய்திகள்

ஹெளத்தி அமைப்பிற்கு எதிராக பாதுகாப்புசபை ஆயுத தடை

யேமனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹெளத்தி போராளிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஆயுத தடையைவிதித்துள்ளது.
செவ்வாய்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தில் குறிப்பிட்ட அமைப்பிற்கு எதிரான ஆயுத தடைகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யேமனில் குறிப்பிட்ட அமைப்பின் சார்பாகவும், அவர்களுடைய நோக்கத்திற்காகவும் செயற்படும் சகலருக்கும் இந்த ஆயுத தடைபொருந்தும் எனவும் பாதுகாப்புசபை தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அமைப்பின் தலைவர் மற்றும் இரு முக்கிய தளபதிகள் மற்றும் அவர்களுக்கு சார்பாக செயற்படும் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே மற்றும் அவரது மகனிற்கு எதிராக சர்வதேச போக்குவரத்து தடையையும்,அவரது சொத்துக்களை முடக்கும் அறிவிப்பையும் பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ளது.
ஹெளத்தி போராளிகள் தலைநகர் சனா உட்பட தாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளிலிருந்து விலகவேண்டும்,பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் பாதுகாப்புசபை கோரியுள்ளது.
பாதுகாப்புசபையின் 14 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன, ரஸ்யா இது குறித்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
அமெரிக்கா இந்த தீர்மானத்திற்கு தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது.