செய்திகள்

​சபரிமலையில் ஆண்களின் தூய்மை பரிசோதிக்கப்படுகிறதா?: உச்சநீதிமன்றம் கேள்வி

பெண்களின் தூய்மையை அவர்களின் உடல் சார்ந்த விஷயங்களுடன் தொடர்புப்படுத்தி பார்க்கிறீர்களா? என சபரிமலை கோவில் நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கோரிய வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஷ்ரா,கோபால் கெளடா, குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்களின் மாதவிடாய் காலங்களில் கோவிலுக்குள் வரக்கூடாது என்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் பல்வேறு முக்கியமான கேள்விகளை முன்வைத்தனர். குறிப்பாக மாதவிடாய் பிரச்னையை காரணம் காட்டி வயது வந்த பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? இவர்கள் கோவிலுக்குள் வருவதால் கோவிலின் தூய்மை கெடும் என எப்படி சொல்கிறீர்கள் ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் பெண்களின் தூய்மையை மாதவிடாயுடன் தொடர்புப்படுத்தி பார்கிறீர்களா ? என்றும், உடலியல் சார்ந்த விஷயங்கள், ஆண், பெண் இன பாகுபாட்டிற்கு வழிவகுக்குமா ? என்றும் அடுத்தடுத்து நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர். மேலும் பெண்களுக்கு விதிக்கப்படும் இந்த கட்டுப்பாடுகள், சோதனைகள் ஆண்களுக்கும் விதிக்கப்படுகிறதா? எனவும், ஆண்களின் தூய்மை பரிசோதிக்கப்படுகிறதா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

N5