செய்திகள்

அச்சத்தின் பிடியில் அமெரிக்க மக்கள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம்

இந்த உலகின் மிகக்கொடூரமான, மதவாத, மத அடிப்படைவாத ஒரு நாடு உண்டென்று சொன்னால் அது அமெரிக்காதான் என்று உலகப்புகழ்பெற்ற அறிஞரும் அமெரிக்க அரசியல் விமர்சகருமான பேராசிரியர் நோம் சாம்ஸ்கி கடுமையான முறையில் விமர்சித்துள்ளார்.“அமெரிக்கா உருவானதிலிருந்தே இதுதான் உண்மை” என்று கூறியுள்ள அவர், அமெரிக்காவின் மதவாத முகம் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் எப்படியெல்லாம் பிரதிபலிக்கிறது என்று விளக்கியிருக்கிறார்.

“தி வயர்” எனும் இணைய இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மத அடிப்படைவாதிகள் ஒரு அரசியல் சக்தியாக சமீபகாலத்தில் மிகவேகமாக மாறி வருகிறார்கள் என்றும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களில் மதரீதியாக மக்களை அணிதிரட்டுவது என்பது முதல்முறையாக உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது என்றும், அமெரிக்காவின் குடியரசு கட்சி வேட்பாளரான பெரும் கார்ப்பரேட் தொழிலதிபரான டொனால்டு டிரம்ப் மத அடிப்படையிலேயே தனது கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் விவரித்துள்ளார்.87 வயதாகும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, அமெரிக்காவின் மஸ்ஸாசூஸெட்ஸ் பல்கலைக்கழகத்தின் மொழியியல் மற்றும் தத்துவவியல் துறையில் நூல்கள் நிரம்பி வழியும் அலமாரிகள் நிறைந்த தனது அறையில் அமர்ந்தவாறு மெல்லிய குரலில் இந்த கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார்.கடந்த ஆறுமாத காலமாகவே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக நடந்துவரும் பிரச்சாரங்கள் குறித்து பேராசிரியர் சாம்ஸ்கி கடும் விமர்சனக் கணைகளை தொடுத்து வருகிறார்.

பல சுற்று போட்டிகள் நடந்து தற்போது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பெர்னி சாண்டர்ஸ் பற்றியும், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் பற்றியும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைக்கிறார்.பெர்னி சாண்டர்ஸ், இதுவரை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களையெல்லாம் விட மிக மிக அதிக அளவு – அதாவது சுமார் 33 மில்லியன் டாலர் அளவிற்கு தனிப்பட்ட முறையில் நிதி திரட்டி செலவழித்திருக்கிறார். டொனால்டு டிரம்ப்பை பொறுத்தவரை சாண்டர்சை விட கூடுதலாக செலவு செய்ய முயற்சித்தார்.“ஐரோப்பாவிலும் இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்க்க முடியும். நவீன தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே தேர்தல்களில் ஜனநாயகப்பூர்வ பங்கேற்பு என்பது தொடர்ந்து மலினப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியினர் செல்வத்தை அளவில்லாமல் குவிக்கிறார்கள். அவர்களே அரசியல் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

Donald-Trump

அதுவே தேர்தலில் பிரதிபலிக்கிறது” என்று சாம்ஸ்கி கூறினார்.ஆனால் மறுபுறத்தில் மிகப்பெருவாரியான மக்கள் பிரிவினரிடையே கடும் கோபம் இருக்கிறது. அந்தக் கோபம், தாங்கள் கண்ணால் பார்க்கும் அரசு நிறுவனங்கள் – ஜனநாயகப்பூர்வ கட்டமைப்புகள் மீதான வெறுப்பாக மாறுகிறது என்றும் சாம்ஸ்கி சுட்டிக்காட்டினார்.

ஏழைகளுக்கு எதிரான பிரச்சாரம்

எல்லோரும் வியக்கும் அமெரிக்காவிலேயே கூட பெரும்பான்மை இனத்தவர் என்று சொல்லப்படுகிற வெள்ளை இனத்தைச் சேர்ந்த மக்களிடையே கூட எழுத்தறிவு குறைவான விகிதமே எட்டியிருக்கும் சமூகங்களில் குழந்தை இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய சாம்ஸ்கி ஒரு முன்னேறிய சமூகத்தில் இப்படி நடப்பது எதைக்காட்டுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.“கடுமையான மன அழுத்தம், நம்பிக்கையின்மை, நமது வாழ்வில் அனைத்தையுமே இழந்துகொண்டிருக்கிறோம் என்ற கவலை, எதிர்காலம் இல்லை என்ற அச்சுறுத்தல்- இவை அனைத்தும் பெருவாரியான மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன” என்று கூறிய சாம்ஸ்கி, இந்த பிரச்சனைகளைப் பேசுவதற்கு பதிலாக – அமெரிக்காவிலும் சரி, பிரிட்டனிலும் சரி, ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளிலும் சரி – பிரச்சனைகள் திசைதிருப்பப்படுகின்றன; வெளிநாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து அகதிகளாக குடியேறுபவர்களால்தான் பிரச்சனை என்றும் அவர்கள் நமது மக்களின் நலத்திட்டங்களை ஏமாற்றி பறித்துக் கொள்கிறார்கள் என்றும், நமக்கு அரசாங்கத்தால் கிடைக்க வேண்டிய பல நலத்திட்டங்கள் தொழிற்சங்கங்களால் தடுக்கப்படுகின்றன என்றும் திட்டமிட்டு அவதூறான – மோசடியான பிரச்சாரம் நடந்துகொண்டிருக்கிறது என சுட்டிக்காட்டினார். இதுதான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிரச்சாரக் கட்டமைப்பாகவே இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் மக்களின் கோபம், அதிகாரப் பசிகொண்ட தனியார் துறைகளுக்கு எதிராகவோ அல்லது மக்களின் வசதிகளையெல்லாம் உறிஞ்சி அவர்களை ஓட்டாண்டிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் மிகப்பெரும் கார்ப்பரேட் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவோ திரும்பும் விதத்தில் எதுவும் பேசப்படுவதில்லை;

மாறாக, “உங்களுக்கும் கீழே இருக்கிற மக்களைப் பாருங்கள்; தனது அன்றாட வயிற்றுப் பாட்டிற்கு மகன்களையோ மகள்களையோ நம்பியிருக்கும் ஒரு தாய்க்கு நாங்கள் உணவுக்கான முத்திரை சீட்டுகளை தந்துகொண்டிருக்கிறோமே அதைப் பாருங்கள்; மத்திய அமெரிக்காவிலிருந்து அகதிகளாக இங்கே ஓடி வந்திருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புவதற்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறதே அதைப் பாருங்கள் – என்று தான் டொனால்டு டிரம்ப் தனது பிரச்சாரத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்” என்று பேராசிரியர் சாம்ஸ்கி விளக்கினார்.

விஷத்தைக் கக்கிய டிரம்ப்

தனது பிரச்சாரத்தில் பெருவாரியான கூட்டங்களில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், சிறுபான்மையினர் மற்றும் அகதிகளைப் பற்றி மிகவும் தரம் தாழ்ந்த விதத்திலும், வெறுப்பை விதைக்கும் விதத்திலும் வெறிபிடித்தவாறு பேசியதை அமெரிக்க ஊடகங்கள் மிகப்பெரிதாக ஊதின. இவரது பேச்சுக்கு அமெரிக்காவில், உள்ளூர் இனவாதம் பேசுகிற ஒரு சாரார் மட்டுமே ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் அந்த ஆதரவை அமெரிக்காவே தெரிவித்தது போன்று ஊடகங்கள் ஊதின. “அவர்கள் நமது நாட்டை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று டொனால்டு டிரம்ப் எல்லா இடங்களிலும் பேசினார்.

இங்கே `அவர்கள்’ என்று டிரம்ப் குறிப்பிட்டது சிறுபான்மையினர், அகதிகள் மற்றும் இதர சமூகங்களை சேர்ந்த மக்களைத்தான்.இப்படி மதரீதியாகவும் இனரீதியாகவும் மக்களின் உணர்வுகள் இந்த தேர்தல் பிரச்சாரங்களில் கடுமையாக தூண்டிவிடப்பட்டுள்ளன. இன்றைய நிலையில் மிகக்கடுமையாக தங்களது தலைவர்களாலேயே அச்சுறுத்தப்பட்ட மக்களாக, இன்னும் சொல்லப்போனால் இந்த உலகிலேயே கடும் அச்சத்தின் பிடியில் சிக்கியிருக்கும் மக்களாக அமெரிக்கர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும் எனவும் சாம்ஸ்கி விளக்கினார். “உலகில் மிக நீண்டகாலமாக மிக மிகப்பாதுகாப்பான நாடாக அமெரிக்காதான் இருந்தது. ஆனால் இன்றைக்கு மிகப்பெரும் அச்சம் சூழ்ந்திருக்கிறது.

துருக்கியை விட ஐஎஸ் பயங்கரவாதிகள் அமெரிக்காவைத்தான் அதிகம் தாக்குவார்கள் என்று அஞ்சுகிறேன்“ என டொனால்டு டிரம்ப் போகிற இடமெல்லாம் பேசினார்.அடிப்படையில் பெரும் வங்கியாளர்கள், கார்ப்பரேட் கம்பெனிகளின் இயக்குநர்கள் போன்றவர்களால் நடத்தப்படுகிற குடியரசு கட்சியானது டொனால்டு டிரம்ப் போன்ற வேட்பாளர்களை வெளியில் தள்ளிவிட முடியவில்லை. இதற்கு முன்பும் டொனால்டு டிரம்ப் போன்ற வெறியர்கள் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்ட வரலாறு உண்டு.

மக்கள் மனங்களில் கனன்று கொண்டிருக்கும் கோபம்

வாஷிங்டனில் கோலோச்சும் அரசாங்கத்திற்கு எதிராக பொதுவாக அமெரிக்க மக்களின் மனங்களில் இருக்கும் கோபத்தை தனது லாபத்திற்காக கையாளுகிறார்கள் டிரம்ப் போன்றவர்கள் எனக் குறிப்பிடும் சாம்ஸ்கி, “ஒவ்வொரு மனிதரும் தனித்தனியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒரு சமூகமாக அமெரிக்க மக்கள் சமூகம் மாறி நிற்கிறது. அவரவர் தனது ஐ-போனிலும், தொலைக்காட்சிகளிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள். என்ன நடக்கிறது என்றே அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அமெரிக்காவில் இந்த விதத்தில் நடப்பது, ஐரோப்பாவில் வேறு வழியில் நடக்கிறது. ஆனால் உண்மை ஒன்றுதான், ஒட்டுமொத்த மக்களும் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்” என்றும் விவரிக்கிறார்.

சாண்டர்ஸின் முகமூடி

டொனால்டு டிரம்ப்பை போன்றே பெர்னி சாண்டர்சும் பேசுகிறார்; பாரம்பரியமாக முற்போக்கான மக்கள் சமூகங்களைக் கொண்ட அமெரிக்காவில் அவர், சோசலிசம் என்பதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி தனது நோக்கத்தை புதுவிதமாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறார் என பேராசிரியர் சாம்ஸ்கி சுட்டிக்காட்டினார். ஒரு இடதுசாரி சார்பான சிந்தனை உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் இன்றைய உலக அரசியல் சூழலில், அமெரிக்க மக்களிடையே புது விதமான வழிகளில் வாக்கு சேகரிக்க முயற்சிக்கும் சாண்டர்ஸ், ஒரு காலத்தில் ஜனாதிபதி ஐசனோவர் எப்படி பேசினாரோ அதுபோல பேச முயற்சிக்கிறார் என சுட்டிக்காட்டும் பேராசிரியர் சாம்ஸ்கி, ஐசனோவரின் காலத்தில் உலகப்பெரும் பொருளாதார மந்தத்தை எதிர்கொள்ள அமெரிக்க அரசு 1930களில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை அமலுக்கு கொண்டுவந்தது;

ஆனால் இப்போது அதை சாண்டர்ஸால் செய்ய முடியுமா என்ற மக்களின் கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.சாண்டர்ஸின் பிரச்சாரங்களில் மிக முக்கியமான பொருளாதார பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டாலும், அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கு தீர்வுகாண முடியுமா என்பது இன்றுவரை தெரியவில்லை என்றும் சாம்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்காவிலும் உலக அளவிலும் அரசியல் ரீதியான உணர்வுகள் விரிவான அளவில் பெரும் மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் பின்னணியில், அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினர் முன்பிருந்த கிளிண்டன் பாணி ஜனநாயக வாதிகளாக தொடர்ந்து நீடிக்க முடியாது; அவர்கள் தங்களை மிதவாத குடியரசுக் கட்சியினர் போல பாவித்துக் கொள்ளுமாறு மக்களிடம் சொல்கிறார்கள். மறுபுறத்தில் குடியரசு கட்சியினரோ ஏற்கெனவே பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் விட்டுவிலகி எங்கோ போய்விட்டார்கள். அவர்கள் முற்றிலும் பெரும் கார்ப்பரேட் மற்றும் பெரும் பணக்காரர்களுக்கான சேவர்களாக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதாக பகிரங்கமாக அறிவிக்கிறார்கள். அந்த அடிப்படையில் தங்களது வாக்குச் சேகரிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் விவரிக்கிறார் நோம் சாம்ஸ்கி.

(தி வயர் இணைய இதழில் மீரா சீனிவாசன் எழுதியதிலிருந்து)