அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார் பஷில்
சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுதலை செய்யவேண் டும் எனக் கோரி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினைத் நேற்று தாக்கல் செய்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரம சிங்க, அமைச்சரவை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார, மெகசின் சிறை அத்தியட்சர், சட்ட மா அதிபர் யுவஞ்சன வணசுந்தர உள்ளிட்ட 45 பேர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்ற சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்துள்ள இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், ராஜபக் ஷ குடும்பத்தை பழிவாங்கும் படலத்தின் கீழேயே தான் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்துடன் தனக்கும் திவி நெகும நிதி மோசடி விவகாரங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் உடல் நலக் கோளாறு காரணமாக அவதிப்படும் தன்னை இவ்வாறு விளக்கமறியலில் வைத்து வதைப்பது தனது அடிப்படை உரிமையை மீறுவதாக அமைந்துள்ளது என பஷில் ராஜபக் ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




