செய்திகள்

அடுத்தவர்களின் பெயர்களில் சொத்துக்களை வாங்கிக்குவித்த பசில் ராஜபக்ச

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது சொத்துக்களை அடுத்தவர்களின் பெயரில் வாங்கிக் குவித்திருப்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

முந்திய ஆட்சியின்போது பசில் ராஜபக்ச முறைகேடான வகையில் கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் பதினாறு ஏக்கர் கொண்ட காணியொன்றை வாங்கி ஆடம்பர மாளிகையொன்றை நிர்மாணித்துள்ள விவகாரம் தொடர்பில் பூகொட நீதிமன்றத்தில் வழக்கொன்று நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ராஜபக்சவினரின் நம்பிக்கைக்குரிய கட்டிடக்கலை நிபுணர் முதித ஜயகொடி நீதிபதியிடம் இரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார்.

குறித்த வாக்குமூலத்தில் தொம்பே காணி தன் பெயரில் பதியப்பட்டுள்ளதாகவும், ஆனாலும் குறித்த சொத்துக்களின் உண்மையான உரிமையாளர் பசில் ராஜபக்ச என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காணியில் அமைக்கப்பட்டுள்ள ஆடம்பர மாளிகைக்கான அடிக்கல் பசில் ராஜபக்சவின் மனைவியினால் நடப்பட்டதாகவும், வீட்டின் உள் அலங்காரங்களை பசில் ராஜபக்சவின் ஒரு புதல்வி மேற்கொண்டதாகவும் முதித ஜயகொடி தெரிவித்துள்ளார்.

அண்மையில் பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்ட மாத்தறை பிரவுன்ஸ் ஹில் மாளிகை தொடர்பான வழக்கிலும் குறித்த காணி மற்றும் பங்களா ராஜபக்சவினரின் உறவினரான திரு. நடேசனின் பெயரில் பதியப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள முதித ஜயகொடி, ராஜபக்சவினரின் அனைத்துச் சொத்துக்களும் அடுத்தவரின் பெயர்களில் வாங்கிக் குவிக்கப்பட்டதாகவும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிற்சில சொத்துக்கள் இரகசியமான முறையில் குறைந்த தொகைக்கு வேறு நபர்களுக்கு கைமாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

N5