அடுத்த இரு வாரங்களில் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு : ஹர்ஷ டி சில்வா
அடுத்த இரண்டு வாரங்களில் பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும். எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத்தயாராகவுள்ளோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பந்துல குணவர்த்தனவின் சவாலை ஏற்றுக்கொள்வதாகவும் நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமையை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகும் என்றும் அரசு தெரிவித்தது.
கொழும்பு கிருலப்பனையிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்கள் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இவ்வறிவிப்பை விடுத்தார். பிரதியமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். அதன் பின்னர் நாட்டில் ஸ்திரமான ஆட்சி உருவாகும். அதன்போது நாட்டின் அபிவிருத்திக்காக குறைந்த வட்டியில் எமக்கு கடன்களை பெற முடிவதோடு மட்டுமல்லாது சர்வதேசத்தின் முழுமையான ஆதரவும் எமக்கு கிடைக்கும்.
கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் நாம் பொதுத்தேர்தலுக்குத் தயாராகவே உள்ளோம். எப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பொதுத்தேர்தலுக்கு முகம்கொடுக்க நாம் தயார்.
அரசியல் ரீதியாக அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதை விட நாட்டின் நலன் கருதி நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தத்திலுள்ள அரசியலமைப்பு சபையை அமைத்து அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
அதற்கமையவே கட்சித்தலைவர்க ளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சபாநாயகரினால் எதிர்வரும் 3ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. பந்துல குணவர்த்தன எம்.பி. என் நல்ல நண்பர். சிறந்த கல்விமான். அவருடன் தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான விவாதம் நடத்த எப்போதும் தயாராகவே இருக்கிறேன்.
சேறு பூசாத அநாவசிய பேச்சுக்கள் அற்ற நாட்டின் உண்மையான பொருளாதாரத்தின் நிலைமைகள் தொடர்பாக பகிரங்கமான விவாதத்திற்கு நான் தயார். அதற்கு அவருக்கான கால அவகாசத்தையும் எனக்குள்ள கால அவகாசத்தையும் கருத்தில் கொண்டு திகதியை நிர்ணயிக்கலாம்.
இதுபோன்ற விவாதங்கள் நாட்டுக்கு அவசியமாகும். மக்களை நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமைகளை தெரிந்துகொள்ள வேண்டும். அது மக்களின் கடப்பாடாகும். அதேவேளை முன்பு பெற்றோர்கள் தேர்தலில் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்களுக்கு தான் பிள்ளைகளும் வாக்களிப்பார்கள்.
இன்று அந்த நிலைமை மாறிவிட்டது. மக்கள் சிந்தித்து வாக்களிக்கும் நிலைமை உருவாகியுள்ளது என்றும் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.




