செய்திகள்

அதிகரித்து வரும் ரப்பர் தேவையினால் சுற்றுச் சூழல் பாதிக்குள்ளாகும்!

அதிகரித்து வரும் டயர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக, ஆசியாவில் உள்ள பல மில்லியன் கணக்கான ஹெக்டேர் நிலம், ரப்பர் மரங்கள் வளர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டால், அது ஒரு சுற்றுச் சூழல் பேரழிவை ஏற்படுத்தும் என இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கை எச்சரிக்கிறது.

அடுத்த பத்தாண்டுகளில் டயர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில், கூடுதல் ரப்பர் மரங்களை வளர்ப்பதற்காக கிட்டத்தட்ட 8.5 மிலியன் ஹெக்டேர் நிலப்பரப்பு, தேவைப்படும் என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

இந்த அளவுக்கு நிலம் ரப்பர் தோட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டால், அழிந்து வரும் உயிரினங்களான, கிப்பன் வகைக் குரங்குகள், வெளவால்கள், பறவைகள் மற்றும் சில பூச்சியினங்களுக்கும் அது பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனவும், நிலத்தடி நீர் மற்றும் ஆறுகளையும் மாசுபடுத்தும் எனவும் அவர்களின் அறிக்கை கூறுகிறது.

சற்றே உயரமான பகுதிகளில் வளரும் ரப்பர் மரங்களில் இருந்து எடுக்கப்படும் பால் போன்ற திரவத்தைக் கொண்டு ரப்பர் தயாரிக்கப்படுகிறது. ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப்படுவதற்காக பல இடங்களில் மலைக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.