செய்திகள்

அதிகாரப் பரவலாக்கம் மலையக மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்: மனோ கணேசன்

அதிகாரப் பரவலாக்கம் மலையக மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்ற காரணத்தால் தமக்கு ஏற்ற முறையில் அந்த அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியுடனான சந்திப்பின் போது வலியுறுத்தியமாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.
00
பத்து நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 10 ஆம் திகதி ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா நேற்று மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களை சந்தித்தார்.

இதன்போது மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அவர்களின் உரிமைகள் உட்பட பல விடையங்கள் குறித்து ஐ.நா அதிகாரிக்கு தெளிவுபடுத்தியதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதேவேளை புதிதாக கொண்டுவரப்படவுள்ள தேர்தல் முறை மாற்றத்தால் மலையகத் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களுமே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்த மனோ கணேசன், வடக்கு கிழக்கிற்கு வெளியே சிதறி வாழும் தமிழர்கள் தொடர்பாகவும் அக்கறை செலுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.:06