செய்திகள்

அதிவேக இணைய சேவைக்காக இலங்கையிலும் கூகுள் பலூன் திட்டம்

அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்காக கூகுள் பலூன் செயற்திட்டம் இலங்கையில் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதிவேக இணைய சேவைகள் தொடர்பாக, அமைச்சரிடம் வினவிய போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில் ; மேற்படி இணைய சேவைகள் குறித்து, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றையும் செய்துள்ளோம். இத் திட்டத்தின் பிரகாரம், நாட்டின் பல பாகங்களிலும் பாரிய ஹிலியம் பலூன்கள் பறக்க விடப்பட்டு, சோதனைகள் நடத்தப்படவுள்ளன. இதன் முதலாவது சோதனை, இம் மாத இறுதியில் இரத்மலானையில் நடைபெறும். இக் கூட்டுச் செயற்றிட்டத்தில்  25 சதவீத பங்குகளை நாம் கொண்டிருக்கின்றோம்.
இந்த அதி நவீன திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் உலக நாடுகளின் கவனம் எமது நாட்டின் மீது திரும்பியுள்ளது. அத்துடன், தகவல் தொடர்பாடல் துறையிலுள்ள உலகின் மிகச் சிறந்த வல்லுனர்கள் பங்கேற்கும் டிஜிட்டல் மகாநாடு ஜூன் மாதத்தில் எமது நாட்டில் நடைபெறவுள்ளது.
 தகவல் தொடர்பாடல் தொடர்பான பெரும்பாலான வேலைத் திட்டங்கள் இவ் வருடத்துடன் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்வது மிகவும் இலகுவானதாக அமையும்.
 கூகுள் பலூன்கள் விமானங்கள் பறக்கும் உயரத்தை விட இரு மடங்கு உயரத்தில் பறக்கவிடப்படும். இந்த பலூன்களின் ஆயுட்காலம் ஆறு மாதங்கள் எனவும் ஆனால், அவற்றை மீள் சுழற்சிப் பதற்கும், உட்படுத்தலாம்.
இந்த பலூன் செயற்திட்டமானது எமது நாட்டின் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல்களாக அமையாது.
உலகின் பிரதான கோடீஸ்வரர்களின் ஒருவரான கூகுள் நிறுவனத்தின் இணைய ஸ்தாபகர் சேர்ஜி பிரின்  போன்றவர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளமை எமது நாட்டிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
n10