அநுராதபுரம் சிறையில் இரு கைதிகள் நீர் ஆகாரமின்றி உண்ணாவிரதம் ஆரம்பம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்து இன்று திங்கட்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். சிறைச்சாலை வட்டாரங்கள் இன்று காலை இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
யாழ்ப்பாணம், கரவெட்டி வடக்கு, கரணவாய் ஆவாரம்பிட்டியைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன் (28), நாவலப்பிட்டி, மக்கும்பரவைச் சேர்ந்த கணேசன் சந்திரன் (25) ஆகியோரே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி, பிரதமர், நீதிஅமைச்சர், சட்டமா அதிபர், சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோருக்கு இது குறித்து இவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளார்கள்.
மதியரசன் சுலக்ஷன் 2009 மே 18 ஆம் திகதி ஓமந்தை தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டார். பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு பூசா முகாமுக்கு அனுப்பப்பட்டார். 2013 இல் இவர் மீது கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதிலும், பின்னர் அந்த குற்றப்பத்திரிகை வாபஸ்பெறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 32 தடவைகள் நீதிமன்றத்துக்கு இவர் கொண்டுவரப்பட்ட போதிலும், விசாரணைகள் எதுவும் இடம்பெறாமல் அடுத்த தவணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டே வருகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் ஒன்று மட்டும்தான் இவர் தொடர்பான சாட்சியமாக பொலிஸாரிடம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கணேசன் சந்திரனும் 2009 மே 18 ஆம் திகதியே வட்டுவாகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் ஓமந்தை முகாமில் தடுத்துவைக்கப்பட்ட இவர், 2010 இல் வவுனியா நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் வீட்டிலிருந்தபோது 2010 ஜூன் 19 இல் கைதான இவர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார். இவர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை பின்னர் வாபஸ் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தம்மை விசாரணை எதுவும் இல்லாமல் தடுத்து வைத்திருப்பதை எதிர்த்தும், தமது விடுதலையை வலியுறுத்தியும் இவர்கள் இருவரும் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் பதில் கிடைக்காத நிலையிலேயே இந்தப் போராட்டத்தை அவர்கள் இன்று ஆரம்பித்திருக்கின்றார்கள்.
R-06




