செய்திகள்

அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதே எமது பொறுப்பு : ஜனாதிபதி

அன்று தேசிய சுதந்திரப் போராட்டத்தில் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் செயற்பட்டு தமது யுகப்பணியை நிறைவேற்றியது போன்று இப்போதும் நாட்டை அபிவிருத்தி அடையச்செய்து, நாட்டை கட்டியெழுப்பும் காலத்தின் தேவையை நிறைவேற்றுவதற்கு அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (17) பிற்பகல் இடம்பெற்ற முஸ்லிம் சமய விவகார, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்குரிய புதிய பண்பாட்டு மையத்தை திறந்து வைக்கும் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களனைவரும் ஒன்றிணைந்தே இன்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்தனர் என தெரிவித்த ஜனாதிபதி , மீண்டும் போர் ஏற்படுவதனைத் தவிர்த்து அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவது தனது தலைமையிலான தற்போதய அரசாங்கத்தின் பொறுப்பாகுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர் சக்திகள் இது தொடர்பில் தொடர்ச்சியாக தவறான அர்த்தங்களை வெளிப்படுத்தி இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்த ஜனாதிபதி இந்த பிற்போக்குவாத சக்திகளுக்கு இடமளிக்காமல், நாட்டில் தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதற்கு அனைத்து மத தலைவர்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். -(3)