செய்திகள்

அமரர். மருத்துவ நிபுணர் அத்துல காந்த லியனகே அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

இலங்கையின் மருத்துவ நிர்வாகத்துறையில் நீண்டகாலம் மருத்துவ நிர்வாக நிபுணராகக் கடமையாற்றி உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகராகவும் கடமையாற்றிய மருத்துவ நிபுணர் அத்துல காந்த லியனகே அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கின்றது. மிகவும் அன்பாக வாஞ்சையுடன் மகனே என்று விழித்து என்போன்ற இளம் மருத்துவர்களை இற்றைக்கு 23 ஆண்டுகளுக்கு முன் வரவேற்று மதிப்பளித்தமை அன்னார் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னரும் என்னுள் எதிரொலித்தது. மிகப்பெரிய மனிதநேயம் உள்ள உன்னத மருத்துவரை நாம் இன்று இழந்துள்ளோம். இத்தகைய சிறந்த மருத்துவ நிர்வாக நிபுணரின் ஆளுமைத் திறமையை அறியாத எமது இளம் மருத்துவச் சந்ததி மிகவும் அதிஸ்டம் அற்றவர்கள்.

அமரத்துவம் அடைந்த எமது மருத்துவ நிபுணர் அத்துல காந்த லியனகே அவர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியபோது 2002ம் ஆண்டு சுகாதார அமைச்சின் உயர் மட்டச் செயலாளருடனும், சுகாதார அமைச்சருடனும் வந்து யாழ். குடாநாட்டின் மருத்துவ சேவையின் விரிவாக்கலை நேரடியாகவே ஆராய்ந்தார். அத்தருணத்தில் நான் சாவகச்சேரி மாவட்ட வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலையிலும் பதில் மாவட்ட வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். தெல்லிப்பளை வைத்தியசாலை 8ம் கட்டையில் கூட்டுறவு வைத்தியசாலையில் தற்காலிகமாக இயங்கியது. சாவகச்சேரி வைத்தியசாலை யுத்த இடிபாடுகளுக்கு இடையே சுகாதார அதிகாரி பணிமனையில் இயங்கியது.

தெல்லிப்பளை வைத்தியசாலையை அதன் தற்போதைய இடத்திற்கு மீளவும் இயங்க வைக்க உயர் பாதுகாப்பு வலயத்திற்கு இராணுவ அனுமதியுடன் கூட்டிச்சென்று சுகாதார சேவை பணிப்பாளருக்கு வைத்தியசாலையை மீளவும் புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய அவசியத்தையும், மீள்குடியேற்றத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கினேன். சுகாதார சேவைகள் பணிப்பாளர் 10 ஆண்டுச் செயல்திட்டத்தில் அதனைச் செயற்படுத்தி ஆதார வைத்தியசாலையாக அதனை வெற்றி கண்டார்.

அவ்வாறே சாவகச்சேரி மாவட்ட வைத்தியசாலையிலும் கட்டடங்கள் சேதமடைந்த போதும் அவ் வைத்தியசாலையினையும், ஆதார வைத்தியசாலையாக 10 ஆண்டுச் செயற்றிட்டத்தை தனது திட்டமிடல் அதிகாரிகள் மூலம் நிறைவேற்றினார்.

மேலும் யுத்த நெருக்கடியில் மருத்துவர்களின் இடமாற்றம், வடபகுதிக்குத் தேவையான மருந்துகளின் விநியோகம் என்பவற்றில் மிகவும் சிரத்தையுடன் செயற்பட்டார். இவரது சேவைகளுக்கு வடபகுதி மக்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளனர். இளம் மருத்துவர்களுக்குச் சிறந்த மருத்துவத் தந்தையாக மிளிர்ந்த மருத்துவ நிபுணர் இன்று எம்மைவிட்டுப் பிரிந்து இறையடி சேர்ந்து விட்டார். இந்நிலையில் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். மேலும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மருத்துவர். சி. யமுனாநந்தா, பிரதிப் பணிப்பாளர், யாழ். போதனா வைத்தியசாலை.