அமெரிக்காவும் கால நிலை மாற்றமும்
வீரகத்தி தனபாலசிங்கம்
காலநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி பாரதூரமான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. உலகில் தொழிற்சாலைகளும் வாகனங்களும் வெளியிடும் கரியமிலவாயு வளிமண்டலத்தின் வெப்பதைத் தடுக்கும் திறனைக் குறைத்து பூமியின் வெப்பத்தை அதிகரித்து வருவதால் அண்டார்டிகா பனிமண்டலம் உருகி கடலின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாகவும் சில ஆண்டுகளில் தாழ்வான நிலப்பரப்புக்களை கடல் கொள்ளும் பேராபத்து இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்துகொண்டு வருகிறார்கள். காலநிலை மாற்றத்தின் விளைவாக அருகிக் கொண்டு போகும் மூலவளங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்படுகின்ற தகராறுகள் போர்களுக்கு வழிவகுக்கப் போகின்றன என்று நிபுணர்கள் அபாய அறிவிப்புச் செய்கிறார்கள். அடிக்கடி உலகின் பல பாகங்களிலும் ஏற்படுகின்ற வரட்சியும் வெள்ளப்பெருக்கும் எதிர்காலத்தில் நிலத்துக்கும் நீருக்கும் மனித குலத்தின் மத்தியில் ஏற்படக்கூடிய போட்டாபோட்டி மேலும் கூடுதலான பதற்ற நிலையைத் தோற்றுவிக்கப்போகின்றது என்று அஞ்சப்படுகிறது. வெப்பநிலை அதிகரிப்பின் விளைவான இயற்கை அனர்த்தங்கள் காலப்போக்கில் பெரும் எண்ணிக்கையான உயிரின வகைகளை அழித்துவிடப் போகின்றன. அதனால், கால நிலை மாற்றத்தைத் தீவிரப்படுத்தும் மனித செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த உண்மையை இன்று பாடசாலைப் பிள்ளைகள் கூட தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால், உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவின் இன்றைய ஜனாதிபதி கால நிலை மாற்றம் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்றும் வதந்தி என்றும் கூறிக் கொண்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 2015 பாரிஸ் கால நிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக பத்துத் தினங்களுக்கு முன்னர் அறிவித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. விஞ்ஞானத்தையே அவர் கிண்டல் செய்கிறார். பூமியின் வெப்பநிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் தங்கள் தொழிற்சாலைகள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவைக் குறிப்பிட்ட அளவுக்குக் கட்டுப்படுத்த உலக நாடுகள் 2015 டிசம்பர் 12 பாரிஸில் இணங்கிக் கொண்டதே இந்த உடன்படிக்கையாகும். அதில் இதுவரையில் 195 நாடுகள் கைச்சாத்திட்டிருப்பதுடன் 148 நாடுகள் அங்கீகரித்து மிருக்கின்றன.

பாரிஸ் கால நிலை மாற்ற உடன்படிக்கை என்பது ஏதோ திடீரென்று செய்து கொள்ளப்பட்டதொன்றல்ல. கால நிலை மாற்றத்தின் விளைவான பாதிப்புக்களைச் சாத்தியமானளவு குறைப்பதற்காக பூமியின் வெப்பநிலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய பசுமைத் திட்டங்கள் தொடர்பில் உலக நாடுகள் மத்தியில் கருத்தொருமிப்பைக் காண்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் கால் நூற்றாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட அயராத முயற்சிகளின் விளைவானதே அந்த உடன்படிக்கையாகும். கால நிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் வரைவுச் சாசனம் (United Nations Framework Convention on Climate Change) என்ற சர்வதேச உடன்படிக்கையில் 1992 மே 9 ஆம் திகதி நாடுகள் இணைந்து கொண்டன. பிரேசிலின் றியோடி ஜெனீரோ நகரில் 1992 ஜுன் 3–14 நடைபெற்ற பூமி உச்சி மகாநாட்டில் ( Earth Summit) அந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்காக முன்வைக்கப்பட்டது. பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பை மட்டுப்படுத்துவதன் மூலமாக காலநிலை மாற்றத்தின் விளைவான பாதிப்புக்களை தடுப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவதே அதன் நோக்கமாகும். போதுமான எண்ணிக்கையான நாடுகள் ஏற்றுக் கொண்டதையடுத்து 1994 மார்ச் 21 உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது.
இதையடுத்து கால நிலை மாற்றத்துக்கு உலகின் எதிர்வினையைப் பலப்படுத்துவற்கான பேச்சுவார்த்தைகளை 1995 ஆம் ஆண்டில் நாடுகள் ஆரம்பித்தன. இருவருடங்கள் கழித்து ஜப்பானின் கியோட்டோ நகரில் நடைபெற்ற மகாநாட்டில் கரியமிலவாயுவை வெளியிடுவதைக் குறைக்கும் இலக்குகள் தொடர்பில் அபிவிருத்தியடைந்த நாடுகளை சட்ட ரீதியாகக் கட்டுப்படுத்தும் உடன்படிக்கையொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 1997 கியோட்டோ உடன்படிக்கை என்று அழைக்கப்பட்டது. இதன் பிரகாரம் கரியமில வாயுவை வெளியிடுதலை அபிவிருத்தியடைந்த நாடுகள் குறைப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கால கட்டமாக 2008–2012 நிர்ணயிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் மெக்சிக்கோவின் கன்குன் நகரில் நடைபெற்ற சர்வதேச காலநிலை மகாநாட்டில் உலகின் எதிர்கால வெப்ப நிலை அதிகரிப்பு, கைத்தொழில்புரட்சி கால கட்டத்தில் இருந்த மட்டத்துடன் ஒப்பிடும் போது 2 சதமபாகைக்குக் குறைவானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பின்னர் டோஹாவில் நடைபெற்ற 2012 மகாநாட்டில் அபிவிருத்தியடைந்த நாடுகள் கரியமில வாயுவை வெளியிடுதலைக் குறைப்பதற்கு உறுதியான திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கால கட்டமாக 2013–2020 நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் டோஹாவில் செய்யப்பட்ட இந்த மாற்றம் 2015 டிசம்பர் மாதமளவில் கூட நடைமுறைக்கு வரக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. இது காலநிலை மாற்றத்துக்கு எதிரான செயற்திட்டங்களுக்கு உலகநாடுகளின் குறிப்பாக கைத்தொழில்மய -– அபிவிருத்தியடைந்த நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறுவதில் உள்ள சிக்கல்களை வெளிக்காட்டியது. இறுதியாக பாரிஸ் மகாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை 1992 கால நிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் வரைவுச் சாசனத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த சர்வதேச முயற்சிகளினதும் ஐக்கிய நாடுகளின் கால நிலைமாற்ற உடன்பாடுகளினதும் படிமுறை வளர்ச்சியின் மிகவும் பிந்திய கட்டத்தைக் குறிப்பதாக அமைந்திருக்கிறது. இந்த உடன்படிக்கை 2016 டிசம்பர் 4 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வந்திருக்கிறது. 2020 தொடக்கம் 5 அல்லது 10 வருடங்களில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தங்கள் திட்டங்கள் குறித்து நாடுகள் விபரங்களை சமர்பித்திருக்கின்றன
இந்த பாரிஸ் உடன்படிக்கையின் இலக்கு பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை கைத்தொழில்புரட்சிக்கு முன்னர் இருந்ததை விட 2 சதமபாகைக்கு குறைவானதாக மட்டுப்படுத்துவதேயாகும். கைத்தொழில் புரட்சி யுகத்திற்கு முன்னரான காலகட்டம் பற்றி ஐக்கிய நாடுகள் உடன்படிக்கைகளில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இவ்வாறாக படிமுறை வளர்ச்சி கண்டுவந்திருக்கும் கால நிலைமாற்ற உடன்படிக்கைகளைப் பொறுத்தவரை அமெரிக்காவின் ஒத்துழைப்பைப் பெறுவதென்பது ஆரம்பம் முதல் சிக்கலானதாகவே இருந்து வந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் கியோட்டோ உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட போதிலும் அமெரிக்க காங்கிரஸின் இரு சபைகளினதும் ஆதரவுடன் அதை அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அவருக்கு பிறகு ஜனாதிபதியாக வந்த ஜோர்ஜ். டபிள்யூ. புஷ் கியோட்டோ உடன்படிக்கையில் இருந்து வெளியேறினார். அந்த உடன்படிக்கை அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது என்பது புஷ்ஷினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளில் முக்கியமானது. அந்த உடன்படிக்கையின் பிரகாரம் அமெரிக்கா செயற்படுவதாக இருந்தால் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு நிலக்கரி தொழில்துறையைப் படிப்படியாக குறைக்கவேண்டியிருக்கும். அதைச் செய்வதற்கு புஷ் தயாரில்லை என்பதனால்தான் அவர் உடன்படிக்கையில் இருந்து விலகினார்.ஏனைய கைத்தொழில் மயநாடுகளும் கூட அந்த உடன்படிக்கையின் பிரகாரம் செயற்படத் தவறின.
கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பராக் ஒபாமா மாத்திரமே கால நிலை மாற்றத்தின் விளைவான பாதிப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகளுக்கு உற்சாகமான ஒத்துழைப்பை வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தையடுத்து உடனடியாகவே தனது கண்டனத்தை வெளியிட்ட ஒபாமா அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி எதிர்காலத்தையே நிராகரிக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். ஒபாமா நிருவாகத்தின் கீழ் அமெரிக்கா சீனாவுடன் காலநிலை மாற்ற நெருக்கடியில் ஒரு பொதுநிலைப்பாட்டுக்கு வரக்கூடியதாக இருந்ததனால்தான் பாரிஸ் உடன்படிக்கை சாத்தியமாயிற்று. கரியமிலவாயு உட்பட பசுமை இல்லத்தாக்க வாயுக்களை (Green House Gases) வெளியிடுவதைக் குறைப்பதற்கு தனவந்த நாடுகளும் வறிய நாடுகளும் இணங்கிக் கொண்டன. பாரிஸ் உடன்படிக்கை எந்தவொரு நாட்டையும் கட்டாயப்படுத்தவில்லை. அந்த உடன்படிக்கையின் கீழ் சகல நாடுகளுமே தன்னிச்சையாக உறுதிமொழிகளை வழங்கியிருந்தன. காலநிலை மாற்றத்தைக் கையாளுவது தொடர்பில் உலகின் சகல நாடுகளையும் வரலாற்றில் முதற்தடவையாக ஒன்றுபடுத்திய இந்த உடன்படிக்கைக்கு சீனாவினதும் இந்தியாவினதும் முழுமையான ஆதரவைப் பெறக்கூடியதாக இருந்ததை தனது பதவிக் காலத்தின் மிக முக்கியமான இராஜதந்திர வெற்றியாக ஒபாமா உலகிற்கு காட்டினார். ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவின் வெளியேற்றத்தை அறிவித்து வெள்ளைமாளிகையில் நிகழ்த்திய உரையில், உடன்படிக்கை அமெரிக்கா மீது சுமைகளை ஏற்றுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். உடன்படிக்கையை பொறுத்தவரை அவர் வெளிப்படுத்தி வந்திருக்கும் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணானவையாகவும் இருக்கின்றன. கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் அவர் அமெரிக்காவுக்கு பாதகமானவையென்று தான் கருதுகின்ற வெளிநாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கைகளில் இருந்தும் சீனாவினால் பரப்பப்பட்ட வதந்தி என்று அவர் வர்ணித்த காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் இருந்தும் விலகப்போவதாக வாக்குறுதியளித்திருந்தார். கால நிலைமாற்றத்தை முதலில் வதந்தி என்று கூறிய அவர் இப்போது உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கு பொருளாதாரக் காரணங்களையே முன் வைத்திருக்கிறார். அதேவேளை, அமெரிக்காவுக்கு நியாயம் செய்யக்கூடிய நிபந்தனைகளின் அடிப்படையில் பாரிஸ் உடன்படிக்கையில் மாற்றங்களை செய்து மீண்டும் இணைந்து கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராயிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

பாரிஸ் உடன்படிக்கை தொடர்பில் சீனா மீதும் இந்தியா மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி பில்லியன் கணக்கில் வெளிநாட்டு நிதியைப் பெற்றுக்கொண்டே இந்தியா உடன்படிக்கையில் பங்கேற்றுள்ளதாகவும் கூடுதலாக நூற்றுக்கணக்கான நிலக்கரிச் சுரங்கங்களைக் கட்டுவதற்கு சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டளவில் சீனாவும் இந்தியாவும் அவற்றின் நிலக்கரி சுரங்கங்களை இரண்டு மடங்காக்கிக் கொள்ள அனுமதிக்கப்படவுள்ளதாகவும் அதேவேளை தனது நாட்டிடம் நிலக்கரி ஆலைகளை முற்றாகவே இல்லாமல் செய்யுமாறு கேட்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை, பாரிஸ் உடன்படிக்கை என்பது காலநிலை மாற்றத்துடன் பெரிதாகச் சம்பந்தப்பட்டதல்ல, பதிலாக அமெரிக்காவைவிடவும் ஏனைய நாடுகள் நிதிவளத்தில் கூடுதல் அனுகூலத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு ஏற்பாடுதான் என்று அமெரிக்கர்களுக்கு கூற முயற்சிக்கிறார். உடன்படிக்கை அமெரிக்காவின் செல்வம் ஏனைய நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவும் அமெரிக்காவின் வேலைவாய்ப்புக்கள் வெளிநாட்டவர்களைச் சென்றடையவும் வழிவகுக்கும் என்று அச்சமூட்டுகிறார். உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் அடுத்த 13 வருடங்களில் மலைப்பைத் தருகிற அளவுக்கு சீனாவினால் கரியமில வாயுவை வெளியிடக்கூடியதாக இருக்கும். ஆனால், அமெரிக்கா அவ்வாறு செய்ய முடியாது என்றும் கூட அவர் தனது நிலைப்பாட்டுக்கு நியாயம் கற்பிப்பதற்கு உடன்படிக்கையை திரிபுபடுத்தி அர்த்தம் சொல்கிறார். சீனாவுடனும் இந்தியாவுடனும் சேர்த்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் கடுமையாகச் சாடியிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பாவில் உள்ள தலைவர்களோ ஆசியாவின் உள்ள தலைவர்களோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலும் உள்ள நாடுகளின் தலைவர்களோ அமெரிக்கப் பொருளாதாரம் பற்றிப் பேசக்கூடாது. அமெரிக்கப் பிரஜைகளுக்கும் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகளுக்கும் மாத்திரமே அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி பேசுவதற்கான அதிகாரமும் உரிமையும் உண்டு என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் தீர்மானம் பாரிஸ் உடன்படிக்கையின் இலக்குகளை உலகம் அடைவதை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்பதுடன் பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாட்டுடன் ஏனைய நாடுகளை ஒத்துழைக்கச் செய்வதிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று அவதானிகள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். என்றாலும், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் துரித வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாரங்களைக் கொண்ட சீனா, இந்தியாவின் தலைவர்களும் பாரிஸ் உடன்படிக்கை மீதான பற்றுறுதியை மீளவும் வலிமையாக வெளிக்காட்டியிருக்கிறார்கள். உடன்படிக்கையில் மாற்றங்களைச் செய்வற்கு பேச்சுவார்த்தைகளை நடத்துவதென்ற கேள்விக்கே இடமில்லை என்று ஜேர்மன் அதிபர் அஞ்செலா மெர்கலும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் உறுதிப்படத் தெரிவித்துவிட்டார்கள்.
பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் அமைக்கப்பட்ட பசுமைக் கால நிலை நிதியத்துக்கான (Green Climate Fund) பங்களிப்பை அமெரிக்கா நிறுத்தியிருக்கிறது. உடன்படிக்கையின் பிரகாரம் செயற்படும் போது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார இழப்புகளை ஈடு செய்வதற்கு அந்த நாடுகளுக்கு ஆதரவு வழங்கவே இந்நிதியம் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு 300 கோடி டொலர்களை வழங்குவதாக ஒபாமா நிருவாகம் உறுதியளித்திருந்தது . ஏற்கனவே100 கோடி டொலர்கள் வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால், டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்தை உலக நாடுகள் மாத்திரமல்ல, அமெரிக்காவின் பல மாநிலங்களும் பெருவாரியான நகரங்களும் பல பெரு முதலாளித்துவ வணிக நிறுவனங்களும் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கின்றன. பாரிஸ் உடன்படிக்கையின் கீழான கடப்பாடுகளை நிறைவேற்றக்கூடிய முறையில் தொடர்ந்து செயற்படப்போவதாக அவை அறிவித்திருக்கின்றன. வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் (நேட்டோ) அமைப்பின் உச்சி மாநாட்டிலும் உலகின் 7 முன்னணி கைத்தொழில்மய நாடுகளின் (ஜி–7) உச்சிமாநாட்டிலும் கலந்துகொள்வதற்காக ஐரோப்பாவுக்குச் சென்று திரும்பிய ஒருவார காலத்தில் பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து வெளியேறும் அறிவிப்பை டொனால்ட் ட்ரம்ப செய்தார் என்பது கவனிக்கத்தக்து. அந்த உடன்படிக்கையில் தொடர்ந்தும் பங்கேற்றுமாறு அவரை இணங்கச் செய்வதற்கு ஐரோப்பிய நேச நாடுகளின் தலைவர்களினால் முடியாமல் போய்விட்டது.

ஜனரஞ்சக மற்றும் தேசியவாத உணர்வு அரசியல் அலையில் தேர்தலில் வெற்றிபெற்ற அமெரிக்க ஜனாதிபதியை கையாளுவதென்பது ஐரோப்பியத் தலைவர்களுக்கு பெரும் அசௌகரியமான காரியமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இரு உச்சிமாநாடுகளையும் முடித்துக்கொண்ட பிறகு ட்ரம்ப் வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸையும் சந்தித்தார். பாரிஸ் உடன்படிக்கையில் அமெரிக்கா தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிக்காட்டும் ஒரு சூசகமான செயலாக பாப்பரசர் மனித செயற்பாடுகளினால் விளைகின்ற கால நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டிய அவசியம் குறித்து தான் எழுதிய கட்டுரைகள் மற்றும் உரைகளின் தொகுப்பு நூல் ஒன்றின் பிரதியை ட்ரம்பிடம் கையளித்தார். அதை ட்ரம்ப் திறந்து பார்த்திருப்பார் என்பதே சந்தேகம். பாரிஸ் உடன்படிக்கை தொடர்பான தனது அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி செய்யவிருக்கிறார் என்று தெரியவந்ததும் அதற்கு முதல் நாள் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்றெரஸ் ருவிட்டர் சமூக ஊடகத்தில் செய்த பதிவொன்றில் ‘கால நிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்புக்கள் ஈடிணையற்றவை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
வரலாற்று ரீதியாக நோக்குகையில் கரியமில வாயுவை கூடுதலான அளவில் வெளியிடும் நாடாக அமெரிக்காவே விளங்கிவந்திருக்கிறது. இப்போது அது சீனாவுக்கு அடுத்தபடியாக கரியமிலவாயுவை கூடுதலாக வெளியிடும் இரண்டாவது நாடாக மாறியிருக்கிறது. வளிமண்டலம் மாசடைவதை தடுப்பதற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்யக்கூடிய நிலையில் இருக்கும் அமெரிக்கா அதன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
21 ஆம் நூற்றாண்டில் உலகைப் பெரிதும் அழுத்துகின்ற முக்கியமான நெருக்கடிகளில் ஒன்றைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளைப் பொறுத்தவரை உலகின் ஏனைய நாடுகளில் இருந்து அமெரிக்கா தன்னைத் தனிமைப்படுத்துகிறது. முழுஉலகிடமிருந்தும் தூரவிலகிக்கொண்டு அமெரிக்கா பாரிஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திடாத சிரியா, நிக்கரகுவா ஆகிய நாடுகள் வரிசையில் தன்னை இணைத்துக்கொள்ளும் விசித்திரத்தைக் காண்கின்றோம். இந்த தனிமைப்பாட்டின் மூலமாக ட்ரம்பின் அமெரிக்கா உலக விவகாரங்களில் சீனா மேலும் முக்கியத்துவம் பெறுவதற்கான வாய்ப்புக்கு தானாகவே வழி சமைக்கிறது. ஒபாமா நிர்வாகத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த சமந்தா பவர் ‘அமெரிக்க நூற்றாண்டின் முடிவு’ என்று டுவிட்டரில் மிக எளிதில் விளங்கக் கூடியதாக பதிவு செய்திருக்கிறார்.
பாரிஸ் உடன்படிக்கையின் விதிகளின்படி 2020 நவம்பருக்கு முன்னதாக அமெரிக்கா அதிலிருந்து விலக முடியாது என்பதே உண்மை. அந்த உடன்படிக்கை நடைமுறைக்கு வந்து மூன்று வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னதாக எந்தவொரு நாடும் அதிலிருந்து விலகுவதாக முறைப்படியான அறிவித்தலைக் கொடுக்க முடியாது. அவ்வாறு மூன்று ஆண்டுகள் பூர்த்தியானதன் பிறகு விலகும் அறிவிப்பைக் கொடுப்பதாக இருந்தாலும் அது தொடர்பான செயன்முறைகள் நிறைவடைய ஒருவருடம் காத்திருக்க வேண்டும். இதன் அர்த்தம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு மறுநாள்வரை (2020 நவம்பர் 5) பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலக முடியாது என்பதேயாகும். அந்தத் தேர்தலில் ட்ரம்ப்பைத் தோற்கடித்து புதியதொரு ஜனாதிபதி பதவிக்கு வந்தால் அவர் என்ன முடிவெடுப்பாரோ?




