அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை: முதல்வர் எடுத்த முடிவு சரியானதா?
-நரேன்-
1988 ஆம் ஆண்டு நடைபெற்ற இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின் வடக்கு, கிழக்கு மாகாணம் தனித்தனியாக பிரிக்கப்பட்ட பின்னர் முதலாவது வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று மூன்று வருடங்கள் கடந்து விட்டது. இவ்வாறானநிலையில் இந்த வடமாகாண சபை எதை சாதித்திருக்கின்றது என்ற கேள்வி எல்லோர் மனங்களிலும் எழுந்துள்ளது. கடந்த மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் சர்வதேச அழுத்தம் காரணமாகவே வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்றிருந்தது. அந்த மாகாணசபையை கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக அப்போதைய அரசாங்கம் கடும் பிரயத்தனமும் செய்திருந்தது. தாயகம், தேசியம், சுயநிர்ணயக் கோட்பாட்டை முன்னிறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது பலத்தை மீண்டும் ஒரு தடவை காட்டவும், இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், பேர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக் கோரிக்கையை வலுப்படுத்தவும் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கபட்டது.
எதிர்பார்த்தைவிட அதிகமாகவே மக்கள் வாக்களித்து தமது ஆணையை வழங்கினர். பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் தெற்கில் வசித்து வந்த முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அழைத்து வந்து யாழில் போட்டியிட வைத்தார். மக்களும் அதிகமாகவே அவருக்கு வாக்களித்தனர். இவ்வாறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த மாகாண சபை இன்று எதைச் சாதித்துள்ளது…? மாதாந்த கூட்டம் நடைபெறுகின்ற இடமாகவும், 5 மாவட்ட பிரதிநிதிகளும் தமக்குள் கதைத்துப் பேசி இளைபாறும் இடமாகவும் மட்டுமே தொழில்படுகின்றதா என்ற கேள்வி எழுகிறது.
கடந்த அரசாங்கம் மாகாணசபையை செயற்படவிடல்லை. ஆளுனர் முட்டுக்கட்டை போடுகிறார் எனக் கூறப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றத்தின் பின் அந்த நிலை மாறியிருக்கிறது. இப்போது மாகாணசபை ஆளுக்கட்சி உறுப்பினர்களுக்குள் இடம்பெறும் கும்பிடிச் சண்டைகளும், ஊழல் மோசடிகள் பற்றிய செய்திகளுமே ஊடகங்களின் பக்கங்களை அலங்கரிக்கின்றன. வடமாகாணசபையில் 08 உறுப்பினர்களைக் கொண்ட எதிர்கட்சி ஒன்று உள்ள போதும் அதற்கு அங்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. அதையும் ஆளுக்கட்சியே பார்த்துக் கொள்கிறது. ஆளுங்கட்சியால் கொண்டுவரப்படும் பிரேரணையை எதிர்கட்சி ஆதரிக்கிறது. ஆளுங்கட்சி சில உறுப்பினர்களே அதை எதிர்க்கின்றனர். இவ்வாறான குத்துவெட்டுக்களுக்கு மத்தியிலேயே பல பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுக்கின்றன. அவற்றில் எத்தனை பிரேரணைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றால் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியும் உள்ளது. வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களை கூட சரியாக தீர்மானம் எடுத்து நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் தான் மாகாணசபை இயங்குகிறது. முதலமைச்சருக்கு எதிராக ஒரு அணி அவர் கொண்டுவரும் திட்டங்களை எதிர்ப்பதிலேயே குறியாய் இருக்கிறது. இந்தக் குழப்பங்கள் ஒருபுறமிருக்க, தற்போது வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை செய்ய குழு ஒன்றை நியமிக்கவும் முதலமைச்சர் கடந்த 09 ஆம் திகதி செவ்வாய் கிழமை இடம்பெற்ற சபை அமர்வில் அனுமதி கோரி பிரேரணை ஒன்றை கொண்டுவந்துள்ளார். ஆடிச் செவ்வாய் விரதத்தை கூறி அந்த பிரேரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பத்திரிகையில் வந்த செய்தி ஒன்றுக்காக இந்தச் சபை ஒரு நாளையே வீணாக்கியிருந்தது. அதன்பின் நடந்த அமர்வில் சில திருத்தங்களுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊழல் தொடர்பான விசாரணை செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு மட்டும் ஒரு சாட்டுப் போக்கு. மாகாணசபை என்பது ஒரு சிறுவர் பாடசாலை அல்ல. அது ஒரு மாகாணத்தின் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்வாகத்திற்கான ஒரு அலகு என்பதை மறந்துவிடமுடியாது.
வடமாகாண சபைக்கு ஒதுக்கப்டபட்ட பெருமளவு நிதி அபிவிருத்திட்டங்கள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் திரும்பிச் சென்றுள்ளதாக கடந்த வருடம் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. தற்போது நிதியை திரும்பிச் செல்லாத வகையில் வேலைகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் உண்மையை கண்டறிய வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். சில மாகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். ஆனால், அபிவிருத்தி வேலையே நடைபெறாது பெருமளவு நிதி திரும்பியுள்ள நிலையில் செலவழிக்கப்பட்ட குறைந்தளவிலான நிதியில் ஊழல் இடம்பெற்றிருக்கின்றதா…? அப்படியாயின் அந்தநிதியில் மக்களுக்கு அபிவிருத்திக்காக கிடைத்தது போதுமானத என்ற கேள்வி உள்ளது. மறுபுறம் புலம்பெயர் உறவுகளால் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு உதவுவதற்காக நிதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிதிகள் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மூலமாக வந்திருக்கின்றது. அது முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி கூட தற்போது எழுந்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சபையே வடமாகாணசபை. இது உரிமைப்போராட்டம் நடத்திய மக்களால் உருவாக்கப்பட்ட சபை. இங்கு முன்னாள் போராளிகள், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டடோர், அபயங்களை இழந்தோர், விதவைகள், மனைவியை இழந்தோர், தாய் தந்தையை இழந்த சிறுவர்கள், ஒரு நேர சாப்பாட்டுக்காக போராடும் குடும்பங்கள், காணாமல் போனவர்களின் உறவுகள் அத்துடன் இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் உரிமைகளுக்காக ஏங்குகின்ற ஓரு தேசிய இனம் வாழுகின்ற மாகாணம். அந்த இனத்தின் பிரதிநிதிகள் ஊழல் செய்வது என்பது எற்றுக் கொள்ளவே முடியாதது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் தென்னிலங்கையில் முன்னாள் ஜனாதிபதி, சில பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கூட லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பிரசன்னம் ஆகி வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் வடக்கு அமைச்சர்கள் மோசடி செய்திருந்தால் அது விசாரிக்கப்படுவதில் தவறில்லை. அதன் உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு தடைபோடுவது அல்லது அவர் விசாரிக்க முடியாது, இவர் தான் விசாரிக்க வேண்டும் என கூறுவதென்பது ஊழலுக்கு துணைபோவதாகவே அமையும். இங்கு கையாடல் செய்யப்பட்டிருப்பது ஒரு சபையின் நிதிமட்டுமல்ல. அது போரால் பாதிக்கபட்டு உரிமைக்காக போராடும் வடக்கு மக்களுக்கான நிதி என்பதை புரிந்து கொள்ளவேண்டும். குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் அனைவரும் ஊழல் செய்தவர்கள் தான் என்று கருதிவிடவும்முடியாது. விசாரணைகள் இடம்பெறவேண்டும். உண்மை மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். விசாரணைகள் இடம்பெறாதவரை ஊழலே செய்யாத அமைச்சரையும் ஊழல் செய்ததாகவே மக்கள் கருதவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலமையை அது உருவாக்கும்.
ஆகவே, இந்த விடயத்தில் வடமாகாணசபை உறுப்பினர்கள் உண்மையை கண்டறிய விசாரணை நடத்த முன்வரவேண்டும். அதன் மூலம் அமைச்சர் ஒருவர் ஊழல் செய்யவில்லை என கண்டறியபடுமிடத்து அதனை மக்களுக்கு தெளிவுபடுத்தி அந்த அமைச்சர் மீது மக்கள் கொண்டுள்ள ஐயத்தை போக்கி அவரது சேவை தொடர்ந்தும் மக்களுக்கு கிடைக்க வழியை ஏற்படுத்த வேண்டும். மாறாக 30 வருட போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கட்டுமானம் என்பவற்றுக்கான நிதியில் ஊழல் என நிரூப்பிக்கப்பட்டால் அது பகிரங்கப்படுத்தப்பட்டு அதற்கான உச்சகட்ட தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதுவே இந்த உறுப்பினர்கள் தமது மக்களுக்கு செய்யும் உதவியாகவும் அமையும்.
N5




