செய்திகள்

அய்யோ, மெர்சலுக்கு எத்தனை சோதனை! : தீபாவளிக்கு படம் வருமா?

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து சென்னையில் விலங்குகள் நல வாரியம் இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளது.
நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இந்த படத்தை ரூ.140 கோடி செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. அட்லி இயக்கி உள்ளார்.
இதில் விஜய் 3 வேடங்களில் நடித்து உள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகை அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே மெர்சல் தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர்கடந்த 6-ஆம் தேதி அந்தத் தலைப்பை பயன்படுத்தத் தடை இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கேளிக்கை வரி பிரச்சினையும் தீர்க்கப்பட்டு தீபாவளிக்கு மெர்சல் படம் திரைக்கு வரும் என்று பட அதிபர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
இந்த படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு சான்றிதழ் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்காததால் தீபாவளிக்கு இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மெர்சல் படத்தில் பயன்படுத்தப்பட்ட புறா கிராபிக்ஸ் என கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரம் ஏதும் படக்குழுவினரால் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும் இந்த படத்தில் இடம்பெறும் பாம்பு ராஜநாகம் என்பதற்குப் பதிலாக நாகப்பாம்பு என குறிப்பிடப்பட்டது. இதனால் அந்த வாரியம் தடையில்லா சான்று வழங்கவில்லை.
இந்நிலையில் மெர்சல் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 2 தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதையடுத்து நேற்று நடிகர் விஜய்யும், இயக்குநர் அட்லியும் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு மெர்சல் படத்துக்கு தடையில்லா சான்று வழங்குவது தொடர்பாக சென்னை திருவான்மியூரில் உள்ள விலங்குகள் நல வாரியத்தில் அவசர ஆலோசனை நடத்தப்படவுள்ளது. ஆகையால் தீபாவளிக்கு மெர்சல் ரிலீஸாகுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். -(3)