செய்திகள்

அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுமா? – பிரதமர் பதவியில் மாற்றம் வருமா? : ஜனாதிபதியின் பதில்கள் (நேர்காணல்)

அரசாங்கத்தில் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுமா? இல்லையா? என்ற கேள்விகளுக்கு 10ஆம் திகதிக்கு பின்னர் பதில் கிடைக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியுடனான பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பத்திரிகையாளர்களினால் தற்கால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரிடம் பத்திரிகையாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும் வருமாறு.

கேள்வி : உங்களின் மேடையிலும் ஊழல் மோசடிக்காரர்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது. அது தொடர்பாக என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றீர்கள்?

பதில் : எனது மேடையில் மட்டுமல்ல எனது வீட்டில் இருந்தாலும் ஊழல்வாதியென்றால் தண்டனை வழங்கியே தீருவேன். எனது சகோதரன் அண்மையில் வாகன விபத்தொன்றில் சிக்கியிருந்த போது அவரை விளக்க மறியலில் போடச் செய்தேன். எனக்கு அங்கு வேறு சாரதியை போட்டு அது தொடர்பான நடவடிக்கைகளை மாற்றியமைத்திருக்கலாம். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. எனது சகோதரனாக இருந்தாலும் நான் சிறையில் போட்டேன். எனக்கு எனது கட்சியினரா? உறவினரா? நண்பரா? என எந்த வேறுபாடும் கிடையாது. குற்றம் செய்தால் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கேள்வி : உங்களை போன்று மற்றைய அரசியல்வாதிகள் இதுபோன்று நடந்துக்கொள்வதில்லை. அதுதான் இவ்வாறான பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றது. இதன்படி பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. உங்களை சூழவுள்ளவர்கள் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ளார்களே.

பதில் : இதுதான் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சாபம். இதனால்தான் கட்சி பேதமின்றி ஊழல் இல்லாத அரச நிர்வாகம் ஒன்றுக்காக இணைய வேண்டுமென கூறுகின்றேன். அங்கு ஐ.தே.கவா , ஶ்ரீ.ல.சு.கவா என்ற பிரச்சினைகள் கிடையாது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் ஊழலுக்கு எதிராக , நியாயமாக செயற்படக்கூடியவர்கள் வேண்டும். சிங்கப்பூர் , வியட்நாம் போன்ற நாடுகள் எப்படி வளர்ச்சியடைந்துள்ளன. அவர்கள் அங்கு நியாயமாக செயற்பட்டுள்ளனர். இங்கு அரசியல் கலாச்சாரத்தில் ஊழல்கள் இருக்கின்றன. நான் மிகவும் கடினமான வேலைகளையே செய்கின்றேன். நான் மக்கள் மீது நம்பிக்கை வைத்தே செயற்படுகின்றேன். அரசியல்வாதிகள் மீது அல்ல. மக்கள் என்னுடன் இருக்கின்றார்கள். என்பதனை நான் நம்புகின்றேன். ஆனால் அரசியலில் நல்லவர்களும் இருக்கின்றார்கள். நான் இதற்கு முன்னர் இருந்த இடத்தில் இருந்தவர்கள் ஊழல் மோசடிக்காரர்கள் என்ற காரணத்தினாலேயே அங்கிருந்து இங்கே வந்தேன். ஆனால் இங்கும் சிலர் அப்படிநடந்துக்கொண்டால் அது பொறுத்தமற்றதே. இது எனது கொள்கை ரீதியிலான பிரச்சினையே.

இந்நிலையில் எமது கொள்கையுடன் யாரேனும் மோதுவார்களாக இருந்தால் நாம் எமது கொள்கையுடன் இணங்கும் பிரிவினருடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும். சிலர் கூறுகின்றனர் 10ஆம் திகதிக்கு பின்னர் நாங்கள் பாலும் தேனும் போல் இருப்போம் என கூறுகின்றார்கள். அப்படியொன்றும் கிடையாது. நானும் சந்தர்ப்பத்தை பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அரசாங்கம் அமைத்ததும் 2 வருடங்களில் அரசாங்கத்தை உடைக்க முடியாது. நாடு தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும். நான் இப்படி பேசுவதும் வெடிக்கச் செய்வதற்காக அல்ல. ஆனால் நாட்டை நேசிக்கும் நபர்கள் வரவேண்டும். இந்த கட்சிதான் என கூற மாட்டேன். எந்தக் கட்சியினராக இருந்தாலும் முதலில் ஊழல் இல்லாத அரசிலுக்காக இணைவோம். கடந்த காலங்களில் அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட நேர்மையில்லாத செயற்பாடுகள் காரணமாகவே நாட்டை கட்டியெழுப்ப முடியாது போயுள்ளது.

கேள்வி : நீங்கள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கு அரசாங்கத்தை அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தீர்கள். ஏன்?

பதில் : நான் எனது கொள்கைகளுக்கு இணங்குவர்களுக்கே அந்த அழைப்பை விடுத்தேன். அங்கு இருப்பவர்களில் அதிகமானவர்கள் ஊழல்வாதிகளே. ஜீ.எல்.பீரிஸின் கட்சி ஊழல்வாதிகளை பாதுகாப்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. இதனால் அங்கு அதிகமான ஊழல்வாதிகள் இருக்கின்றனர். ஆனபோதும் அங்கு ஊழல் மோசடிகள் இல்லாத அவர்களின் தொடர்புகளை கைவிட முடியாத சிறியளவிலான பிரிவினரும் இருக்கின்றனர். அவர்கள் இப்போதும் என்னுடன் கதைப்பார்கள். இதன்படி 96பேரும் முடிந்தால் ஒன்றாக அமருங்கள் என கூறியது எனது கொள்கைகளுக்கு இணங்கினால் வாருங்கள் என்றே கூறினேன். ஆனால் அவர்கள் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் எப்படி ஆட்சியை கைப்பற்ற முடியும் எனவும் சிந்திப்பதினால் அங்கு இருக்கின்றனர்.

கேள்வி : பெப்ரவரி 10ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படலாம் என கருத்துக்கள் வெளியாகின்றன. அப்படி மாறினால் பிரதமரை மாற்ற நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?

பதில் : அப்படியில்லை. அந்த நபரா? அவரின் பதவியா? என்பது இங்கு பிரச்சினையில்லை. சரியான அரசியல் பயணத்திற்கு தூய்மையான அரசியல்வாதிகள் இணைய வேண்டும். என்பதே இங்கு பிரச்சினையாக இருக்கின்றது. இதனால் அது தொடர்பாக நான் 10ஆம் திகதிக்கு பின்னர் சகல தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்துவேன். தவறுகள் செய்யாத , தவறுகளுடன் தொடர்புபடாத பயணத்தை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது தொடர்பாக அரசாங்கத்துடனும் , எதிர்க்கட்சியுடனும் பேச்சுக்களை மேற்கொண்டு மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய வேலைத்திட்டமொன்றை நான் தயாரிப்பேன். நாம் அரசாங்கத்தை அமைக்கும் போது அதன் பொறுப்புகளை புரிந்துக்கொள்ள வேண்டும். நாங்கள் தற்போது அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடுவில் இருக்கின்றோம். இப்போது தவறு எங்கே இருக்கின்றது. சரியான பயணம் எது என்பதனை புரிந்துக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. சரியானதை செய்வதும் , தவாறனதை நிறுத்தவும் அவசியமாகும்.

கேள்வி : இந்த மாற்றத்தின் போது அரசாங்கத்தின் பிரதான கதாபாத்திரத்தில் மாற்றம் ஏற்படுமா?

பதில் : அது தொடர்பாக நாளைய நாளில் பார்ப்போம். இன்றைய தினத்திலேயே எல்லாவற்றையும் கூறமுடியாது தானே.
கேள்வி : தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தம் காலவதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை மேலும் நீடித்து செல்லுமா? இத்துடன் முடிவடையுமா? என்ற பிரச்சினைகள் இருக்கின்றது.

பதில் : நாங்கள் கையொப்பமிட்ட ஒப்பந்தம் எதுவும் கிடையாதே. ஆவணங்களை விடவும் மனசாட்சியே முக்கியமானது. அதற்கே எதுவும் புரியும். சரியான வேலைத்திட்டம் சிந்தனையிலிருந்து வர வேண்டும். அதற்காகவே நாங்கள் நடந்துக்கொள்ள வேண்டும். என்ன பிரச்சினையாக இருந்தாலும் நான் ஜனாதிபதியென்ற வகையில் நாட்டை நடத்தி செல்வதற்காக அரசாங்கம் ஒன்று அவசியம்தானே. அந்த அரசாங்கம் எனக்கு பொறுத்தமான அரசாங்கம் இருக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு பொறுத்தமானதாக இருக்க வேண்டும்.

கேள்வி : 96 பேரும் இணைந்தால் அரசாங்கத்தை அமைக்க தயார் என நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 ஆசனங்கள் இருக்கின்றன. இப்படியிருக்கையில் எப்படி 96 பேருடன் அரசாங்கத்தை அமைக்க முடியும்.

பதில் : அப்படியென்றால் 106 பேரை கொண்டும் அரசாங்கத்தை அமைக்க முடியாது தானே. அப்படி செய்ய முடியாத காரணத்தினால்தான் இரு கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை அமைத்துள்ளன. இணக்கப்பாட்டு அரசாங்கம் ஏற்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் கடந்த பொதுத் தேர்தல் பெறுபேறுகளுக்கமைய எந்த கட்சிக்கும் அரசாங்கத்தை அமைப்பதற்காக போதுமான ஆசனங்கள் இல்லாத காரணத்தினால் ஜனாதிபதியினால் அரசாங்கத்தை அமைக்க வேண்டி வந்திருக்கும். இதனால் தூய்மையான ஊழல் அற்றவர்களை இணைத்துக்கொண்டு புதிய வேலைத்திட்டங்களுக்கு செல்ல வேண்டும்.

கேள்வி : ஊழல் மோசடிகளுக்கு எதிராக உங்களின் பதவிக்காலத்திற்குள் நடவடிக்கைகளை எடுத்து முடித்துவிட முடியுமென கருதுகின்றீர்களா?

பதில் : என்னை பலப்படுத்தினால் நான் செய்ய வேண்டியதை செய்வேன். இதற்காக இந்த தேர்தலில் என்னை பலப்படுத்த வேண்டும். இதில் என்னை பலவீனப்படுத்தினால் ஊழல் மோசடிகள் தலைதூக்கும். என்னை பலப்படுத்தினால் எதிர்வரும் காலங்களில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ய திட்டமிடப்படுகின்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது. அது தொடர்பாக.

பதில் : நான் என்றால் அது தொடர்பான கருத்துக்களுக்கு எனது தொடர்புகள் கிடையாது. நான் நபர்கள் தொடர்பாக அன்றி எனது கொள்கையிலிருந்தே கருத்துக்களை வெளியிடுவேன். ஆனால் யார் குற்றவாளி , யாருக்கு தண்டனை வழங்க வேண்டும். என்பதற்காக நிறுவனங்கள் இருக்கின்றன. பொலிஸார் , நீதிமன்றம் , இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு என்பன இருக்கின்ற. அந்த நிறுவனங்களே அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அவற்றின் நடவடிக்கைகளில் தலையிடுவது பொறுத்தமற்றதே. அதற்கு எமக்கு உரிமையும் கிடையாது.

கேள்வி : தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பேன் என கூறியுள்ளீர்கள். இதன்படி என்ன அர்த்தத்தில் கூறினீர்கள்.

பதில் : இது பதவி தொடர்பான விடயமல்ல. எனது கொள்கைப்படியான ஒன்றையே கூறினேன். பதவிகளில் ஒருவரின் அரசியல் மட்டுப்படுவதில்லையே. பதவிக்கு முன்னரும் அரசியலில் இருக்கின்றோம்தானே. அதேபோன்று பதவிகளின் பின்னரும் இருக்கலாம். அமெரிக்கவரின் முன்னாள் ஜனாதிபதிகள் அவ்வாறு இருக்கின்றார்கள்தானே. நான் எனது கொள்கைப்படி அரசியலில் இருப்பேன். -(3)
மூலம் – தினக்குரல் பத்திரிகை