செய்திகள்

அரசாங்கத்துடன் உடன்படிக்கைக்கு வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வெற்றியடையச் செய்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ள முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி,ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

வழமையான அரசியலில் செயற்பட்டு சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை எதிர்த்து, அதனை சீர்குலைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, நாடு 2022ல் இருந்த நிலைமைக்குத் திரும்ப இடமளிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தின் போது புதிதாக பணத்தை அச்சிட முடியாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அரச வங்கிகளில் கடன் வாங்கவும் முடியாதென அறிவிக்கப்பட்டது. அரசு வருமானம் ஈட்ட வேண்டும் என்றும் தெரிவித்தனர். ரூபாயை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கஷ்டமாக இருந்தாலும் அதற்கான முடிவுகளை எடுத்தோம். மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தியும் அப்போது என்ன சொன்னார்கள்? ஆனால் இன்று நாட்டின் நிலைமை என்ன? இன்று ரூபாயின் பெறுமதி பலப்படுத்தப்பட்டுள்ளது. டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி 280 ஆக உள்ளது. ரூபாய் பெறுமதி வலுவடைந்திருப்பதால் மக்கள் கையிலிருக்கும் பணத்தின் மதிப்பு அதிகரிக்கிறது.

தற்போது, பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகின்றனர். மேலும், கடந்த பெரும்போகத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. மேலும் தொழில்கள் மீண்டும் உயிர்பெறுகின்றன. சிறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்கும் வகையில் பராட்டே சட்டத்தை ஒரு வருடத்திற்கு அமுல்படுத்தாதிருக்க நடவடிக்கை எடுத்தோம். மேற்படித் துறைகளை பாதுகாப்பதற்காக தனிப் பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

அதனால் மிகவும் சிரமப்பட்டே இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தினால் அந்த பாதுகாப்பு கிடைத்துள்ளது. இந்த நிலைமையை பாதுகாத்து முன்னேறிச் செல்வதா? அல்லது நாட்டை 2022 இல் இருந்த நிலைக்கு கொண்டுச் செல்வதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிராக செயற்படக்கூடாதென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், நாட்டில் வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதற்கான திட்டத்தை முன்வைக்கிறேன்.எனவே, பாரம்பரிய அரசியலை கைவிட்டு எம்மோடு இணையுமாறு மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் அழைப்பு விடுக்கிறேன். அதேபோல், நாட்டிலிருக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாத்து புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஆதரவளிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
-(3)