செய்திகள்
அரசிடம் கைவசமுள்ள திட்டம் என்ன?
காணாமல்போன தமது உறவினர்கள் தொடர்பாக குடும்பத்தினர் ஆணைக்குழுக்களின் முன்னிலையில் சாட்சியமளித்துள்ள நிலையில் அந்த சாட்சியங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தம்வசம் இருக்கும் திட்டம் என்னவென்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் ஒப்புதலளித்துவிட்டு அச்சட்டத்தின் கீழ் எப்படி நபர்களை தடுத்து வைத்திருக்கவோ அல்லது தண்டிக்கவோ முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
பலவந்தமான காணõமல் போதல்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை பாராளுமன்றத்தில் நேற்று விவாதத்துக்கென சமர்ப்பித்து உரையாற்றும்போதே இந்த விடயங்களைக் குறிப்பிட்ட சம்பந்தன், சரியான விடயங்களைச் செய்ய அரசாங்கம் தயங்கக் கூடாது என்றும் இதன்போது வலியுறுத்தினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
பாரிய மனிதாபிமானப் பிரச்சினையான காணாமல்போதல்களைத் தடுக்கவும் காணாமல் போனோர் பற்றிய விடயங்களை தீர்க்கவும் அரசாங்கம் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினையானது இயல்பு நிலை திரும்புவதற்கும் நல்லிணக்கத்துக்கும் சிக்கலாக இருக்கிறது. ஆகையால் நாட்டினதும் பாதிக்கப்பட்ட மக்களினதும் நலனுக்காக இந்தப் பிரச்சினை துரிதமாக தீர்க்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் அரசினால் இது தொடர்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்போது விசாரணைகள் நடைபெற்றபோதிலும் முடிவுகள் எதுவும் எட்டப்பட்டிருக்கவில்லை. யுத்தம் முடிவடைந்து
6 வருடங்களாகிவிட்ட போதிலும் இந்த விடயத்தில் இன்னும் நிச்சயமற்ற தன்மையே காணப்பட்டு வருகிறது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பலவந்தமான காணாமல் போதல்களுக்கான போதிய சாட்சியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது யாதுமொரு நபர் அரச அதிகாரியினால் கைது செய்யப்பட்டாலோ அல்லது சரணடைந்தாலோ அந்த நபரின் பாதுகாப்பு பொறுப்பு அரசுக்குரியது என்றும் அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காணாமல்போனோர் எங்கு இருக்கின்றனர்? மற்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை உறவினர்களுக்கு இருப்பதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட இந்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தமது அறிக்கையைச் சமர்ப்பித்து 4 வருடங்களாகிவிட்ட போதிலும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
அதேபோல் பரணகம ஆணைக்குழுவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரையில் காணாமல்போனோர் தொடர்பில் 17, 329 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
ஆனால் குற்றமிழைந்தவர்களோ சட்டத்தினால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் தண்டனை விலக்கு உரிமையுடன் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பெரும்பாலும் என்ன நடந்தது என்று எமக்குத் தெரியும். ஆகையால் புதிய அரசாங்கமாவது இந்தப் பிரச்சினையைத் தீர்க்க செயற்பட வேண்டும்.
காணாமல்போனோரின் குடும்பங்கள் முன்வைத்துள்ள முறைப்பாடுகள் நியாயமானவை என்பது சகலருக்கும் தெரியும். ஆணைக்குழுக்கள் முன்னிலையில் மக்கள் சாட்சியமளித்துள்ளனர். இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க கடந்த அரசாங்கம் அக்கறைப்படவில்லை.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகியுள்ளது. ஆகவே வழங்கப்பட்ட சாட்சியங்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திடம் இருக்கும் திட்டம் என்னவென்பது மக்களுக்கு தெரியவேண்டும்.
மக்களால் வழங்கப்பட்ட
சாட்சியங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மக்களுக்கு தெரிய வேண்டும். ஆனால் இதுவரை அது செயற்படவில்லை. இந்த விடயங்களை அவசரமாக தீர்ப்பதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.
இதேநேரம் கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் உண்மை, நீதி, நல்லிணக்கம், மீள் நிகழாமை மற்றும் இழப்பீடு ஆகிய விடயங்களை நிறைவேற்ற இலங்கை உறுதியளித்துள்ளது. இது தொடர்பில் செய்யப்பட்டுள்ள விடயங்கள் என்ன வென்பது பற்றி தெரியப்படுத்த வேண்டும்.
அத்துடன் காணாமல் போனோர் தொடர்பில் காணாத சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காணாத
சான்றிதழ் என்பது மரணச் சான்றிதழில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாகும். காணாத
சான்றிதழை வழங்குவதன் மூலம் நட்ட ஈடுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரித்துடைய ஏனைய விடயங்களைப் பெற்றுக் கொள்ள அவற்றை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.
தெற்கில் இளைஞர்கள் காணாமல்போன போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜெனீவா சென்று இலங்கை விடயத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கோரியிருந்தார். மகிந்த ராஜபக்ஷ அச்சந்தர்ப்பத்தில் விடுத்த கோரிக்கையைத் தான் ஐ.நா. இப்போது செய்கிறது.
ஆகவே காணாமல் போனோர் தொடர்பிலான தமது திட்டம் என்னவென்பதை அரசு தெரிவிக்க வேண்டும். அது அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமையக்கூடும்.
இவ்விடயத்தில் அரசாங்கம் சரியான நோக்கமொன்றுடன் தயக்கமின்றி செயற்பட வேண்டும். காணாமல் போனோரின் குடும்பங்கள் திருப்தியடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது வலிமிக்க நடவடிக்கையாக இருந்தாலும் கூட அதுதான் அவசியம் என்றால் அதை நிறைவேற்ற வேண்டும்.
அரசியல் கைதிகள்
இதேநேரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சமூக குற்றச்சாட்டு கொண்டவர்கள் கிடையாது. அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் தெற்கில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தமிழ் அரசியல் கைதிகள்
நீண்டகாலமாக சிறையில் இருக்கிறபோதிலும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இதில் 90 சதவீதமானோர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படாதவர்களாகவே இருக்கின்றனர். இதில்கூட தமிழ்க் கைதிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவது ஏன்? இவ்வாறான நிலையில் எப்படி நல்லிணக்கம் ஏற்படும்?
அது மட்டுமல்லாது பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அச்சட்டத்தின் கீழ் எப்படி தடுத்து வைக்க முடியும்?, எப்படித் தண்டிக்க முடியும்? உண்மையில் அதைச் செய்ய முடியாது.
கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் 12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டனர். சொந்த காரணங்களுக்காகவே இந்த விடுதலை இடம்பெற்றபோதும் அதை செய்தார்கள்.
இவ்வாறான நிலையில் அரசியல் கைதிகளை விடுவிக்க ஏன் தயங்க வேண்டும்? இதற்குப் பதிலில்லை. சரியான விடயங்களைச் செய்ய அரசாங்கம் தயங்கக் கூடாது. அதற்குத் தான் அரசாங்கம் மாறியது. பயங்கரவாத சட்டத்தை ,ரத்துச் செய்வதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்துவிட்டு 5 மாதங்களாகிவிட்டபோதிலும் அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது என்பது அரசு தனது கடப்பாட்டுக்கு முரணாக செயற்படுவதாகவே உள்ளது என்றார்.
n10




