செய்திகள்

அரசியலமைப்பு உருவாக்கம்; சொற்களை வைத்து விளையாட வேண்டாம்

வீரகத்தி தனபாலசிங்கம் 

அரசியலமைப்பு  சபையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அரசியலமைப்பு சட்ட நிபுணர் கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்னவை கடந்த வாரம்  நேர்காணல் செய்த தமிழ்ப்பத்திரிகையாளர்  ஒருவர் இந்த சொல் விளையாட்டு பற்றி அவரின் கவனத்துக்கு கொண்டுவந்த போது ‘ஒருமித்த நாடு’ என்பதற்கு  பதிலாக  மேலும் கூடுதலான அளவுக்கு பொருத்தமான சொல் இருந்தால் கூறுங்கள் பயன்படுத்தலாம் என்று சொன்னாராம்.

அரசியலமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இருவாரங்கள் கடந்துவிட்டன. அரசியலமைப்பு வரைவுடன் தொடர்புடைய 6 முக்கிய விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக அரசியலமைப்பு சபையினால்  நியமிக்கப்பட்டிருந்த உபகுழுக்கள் அவற்றின் அறிக்கைகளை கடந்த வருடம் நவம்பரில் சமர்ப்பித்தபோது சிங்கள அரசியல் சமுதாயத்தின் தேசியவாத பிரிவினரால் கிளப்பப்பட்டதைப் போன்ற சர்ச்சை இப்போது இந்த இடைக்கால அறிக்கை தொடர்பிலும் கிளப்பப்பட்டு வாதப்பிரதிவாதங்கள் மூண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இந்த தேசியவாத சக்திகள் சிறுபான்மையினத்தவர்களின் நியாயபூர்வமான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்பதில் எப்போதுமே முன்னரங்கத்தில் நிற்பவை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அரசியமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகள் ஆரம்பிக்கப்பட்ட கட்டத்தில் இருந்தே இந்த தேசியவாத சக்திகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் ஆதரவுடன் பெரும்பான்மைச் சமூகத்தை  மேலும் தவறாக வழி நடத்துவதற்கான தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றன.

இவர்கள் தற்போதைய அரசாங்கம் மேற்குலக நாடுகளையும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையும் திருப்திப்படுத்தும் முயற்சியாக நாளடைவில் நாட்டைப் பிளவுபடுத்தக்கூடிய புதிய அரசியலமைப்பொன்றை மக்கள் மீது திணிப்பதில் நாட்டம் கொண்டு செயற்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

mahinda-trinco-2

இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட கையோடு இந்த தேசியவாத சக்திகள் அரசாங்கம் இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையை மாற்றுவதற்கும் தற்போதைய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அதி முதன்மையான அந்தஸ்தை இல்லாமல் செய்வதற்குமான கைங்கரியங்களில் இறங்கியிருப்பதாக சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கியிருக்கின்றன. ஒற்றையாட்சி வரையறைக்குள் தங்களது நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தக்கூடிய பயனுறுதியுடைய அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காணமுடியும் என்றோ அல்லது தற்போது  அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அந்தஸ்தைக் குறைக்கக்கூடிய எந்தவொரு முயற்சியிலும் அரசாங்கம் இறங்கத் துணிச்சல் கொள்ளுமென்றோ தமிழ் மக்கள் நம்பவில்லை.

ஆனால் , தமிழ்ச் சமூகத்தைப் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற மிதவாத அரசியல் சக்திகள் குறிப்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது மக்களின் நம்பிக்கையை இழக்கக்கூடிய ஆபத்தான சூழ்நிலை தோன்றக்கூடிய சாத்தியப்பாடுகளுக்கு மத்தியிலும் நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வொன்றைக்காணும் எதிர்ப்பார்ப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாராளுமன்றத்தில் சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகல கட்சிகளுமே ஏனைய மதங்கள் பாரபட்சத்துக்குட்படுத்தப்படாமல் சுதந்திரத்தை அனுபவிப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் தற்போதைய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு இருக்கும் அதிமுதன்மை அந்தஸ்து தொடருவதற்கு இணங்கிக் கொண்டுள்ளன.

ஆனால், கூட்டு எதிரணியும் அதன் சிங்கள பௌத்த தேசியவாத நேச சக்திகளும் தங்களது மதமும் கலாசாரப் பாரம்பரியமும் ஆபத்துக்குள்ளாகப் போகின்றன என்று அரசியலமைப்பு சீர்திருத்தச் செயன்முறைகள் முழுவதையும் சீர்குலைக்கும் நோக்கில் புரளியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. மதச்சார்பற்ற நாடாகப் பிரகடனப்படுத்துவதிலிருந்து ‘தாய்நாட்டைக்’ காப்பாற்றுவதற்கு தலையீடு செய்யுமாறு பௌத்த உயர் பீடங்களின்மகாநாயக்க தேரர்களை வேண்டிக் கொள்வதற்காக இவர்கள் கண்டிக்கு மாறிமாறி ‘யாத்திரை’ மேற்கொண்ட வண்ணமிருக்கின்றார்கள்.

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் அறவே தேவையில்லை என்று கூறுகின்ற அரசியல் சக்திகளுடன் தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக்கொண்டு நிற்கின்ற அதேவேளை, மல்வத்தை மகாநாயக்கர் அதிவண. திப்பிட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கள தேரர் பௌத்த மதத்துக்கு தற்போது இருக்கின்ற அரசியமைப்பு ரீதியான அந்தஸ்தில் எந்த மாற்றமும் செய்யப்படப்போவதில்லை என்றும் அதனால் அச்சமடைவதற்கு காரணம் ஏதுமில்லை என்றும் தனக்கு ஜனாதிபதியும் பிரதமரும் பலதடவைகள் உறுதியளித்திருப்பதாக கூறுகின்றார். ஆனால் , அவரின் உத்தரவாதத்தையும் பொருட்படுத்தாமல் தேசியவாத சக்திகள் விசமத்தனமான பிரசாரங்களைத் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன.

Ranil and maithri

பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணியின் தலைவராக இருக்கும் தினேஷ் குணவர்த்தன சில தினங்களுக்கு முன்னர் மல்வத்தை மாநாயக்க தேரரைச் சந்தித்து நாடு இனரீதியில் பிளவுபடக்கூடியதாக சமஷ்டி அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது என்று முறையிட்டு அதைத்தடுத்து நிறுத்த உடனடியாகத் தலையிடுமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தார்.

மூத்த பாராளுமன்ற உறுப்பினரான குணவர்தன சிறுபான்மையினங்களுக்கு குறைந்தபட்சமேனும் திருப்தி தரக் கூடியவகையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நோக்கில் முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு முயற்சியையும் மூர்க்கத்தனமாக எதிர்ப்பதில் பெயரெடுத்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். நாடு பிளவுபடுத்தப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று அரசாங்கத் தலைவர்கள் தன்னிடம் தொடர்ச்சியாக உறுதியளித்துக்கொண்டேயிருக்கிறார்கள் என்றும் இலங்கை தொடர்ந்தும் ஒற்றையாட்சி அரசைக்கொண்டதாகவே இருக்கும் என்றும் குணவர்த்தனவிடம் மாநாயக்க தேரர் கூறினார். அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை முன்னெடுக்கும் குழுவில் நீங்களும் இருக்கின்றீர்கள். நாட்டின் நலன்களுக்கு பாதகமாக அங்கு எந்தவிதமான யோசனையோ ஏற்பாடோ வந்தால் உங்களுக்கு முன்கூட்டியே தெரியவரும்தானே. நாடு பிளவடைய ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று அரசாங்கம் கூறுகிறது. நீங்களோ நாடு பிளவுபடப்போகின்றது என்று கூறுகின்றீர்கள். யாரை நம்புவதுதென்று எங்களுக்குத் தெரியவில்லை என்றும் மாநாயக்கர் குணவர்த்தனவிடம் அலுத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு எதிரான அரசியல் சக்திகள்  தங்களை அணிதிரட்டிக் கொண்டு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுத்து உரத்துப் பிரசாரங்களைச் செய்யக் கூடியவையாக இருக்கின்ற அதேவேளை, அரசாங்கமோ அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் தொடர்பிலான அதன் நிலைப்பாடுகளை தன்முனைப்புடன் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இயலாததாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

அரசாங்கத் தலைவர்கள் எப்போதும் ஒருவித ‘தற்காப்பு’ நிலையிலேயே இருந்து வருகின்ற அதேவேளை, கூட்டு எதிரணி அரசியல்வாதிகள் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷவும் அவரது தேசியவாத நேச சக்திகளும் அரசியல் முனையில்  ”வலிந்து தாக்குதல்’ தொடுக்கக் கூடிய நிலையில் இருக்கின்றனர். ராஜபக் ஷவும் அவருடன் கூட நிற்கும் சக்திகளும் எடுக்கின்ற நிலைப்பாடுகளே நாட்டின் அரசியல் விவாதத்தின் திசைமார்க்கத்தை நிர்ணயித்துக் கொண்டிருக்கின்றன.

அரசாங்கத் தலைவர்களும் அமைச்சர்களும் கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்படுகின்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் புரளிகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருப்பதன் மூலமாக அரசியல் சீர்திருத்தங்களுக்கு எதிரான சக்திகளுக்கு வாய்ப்பாக அமையக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் வகையில் நடத்து கொள்கிறார்கள். அரசியலமைப்பு உருவாக்கச் செயன் முறைகள் தொடர்பில் இந்தச் சக்திகள் போலிப் பிரசாரங்களைச் செய்யும்போது ஜனாதிபதியும் பிரதமரும் அவற்றை செயலுருமிக்க வகையில் எதிர்த்து நின்று உண்மை நிலையை மக்களுக்கு விளக்கிக் கூறுகிறார்களில்லை.

பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை வென்ெறடுத்து அரசாங்கத்தின் முன்முயற்சிகளுக்கும் செயற்றிட்டங்களுக்கும் அவர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறுவதற்கான உருப்படியான அணுகுமுறை எதுவும் அரசாங்கத் தலைவர்களிடம் இல்லை. இதுவே சகல முனைகளிலும் ஒருவித குழப்பகரமான நிலை காணப்படுவதற்கு பிரதான காரணமாக இருந்து வருகின்றது .

கடும்போக்கு தேசியவாத சக்திகளின் அர்த்தமில்லாத விமர்சனங்களுக்கு வேறுயாருமல்ல ஜனாதிபதியும் பிரதமரும் கூட உடனடியாகவே பதிலளித்து விடுகிறார்கள். அதனால் அந்த விமர்சனங்களுக்கு எதையும் ஐயுறாத சாதாரண மக்கள் மத்தியில் அநாவசியமாக ஒரு நம்பகத்தன்மை கிடைக்கக்கூடியதாக துரதிர்ஷ்ட வசமான நிலை இருக்கின்றது.

இதேவேளை, அரசியலமைப்பு ஏற்பாடுகளின் ஊடாக அரசியல் தீர்வொன்றைக்காணும் மெய்யான நம்பிக்கையில் ஒத்துழைத்துச் செயற்படுகின்ற மிதவாத தமிழ் அரசியல் சக்திகள் அவை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் தக்க வைத்துக்கொள்வதற்கு உதவக் கூடியவையாக அரசாங்கத் தலைவர்களின் செயற்பாடுகளும் பேச்சுகளும் இல்லை.

இன்று காணப்படக் கூடியதாக இருக்கின்ற போரில்லாத அமைதிச் சூழ்நிலையின் பயன்களை என்றென்றைக்கும் தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமானால், சிறுபான்மைச் சமூகங்களின் நியாய பூர்வமான அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக அரசியல் தீர்வொன்று காணப்படவேண்டியது மிக மிக அவசியம் என்ற யதார்த்தம் சிங்கள மக்களுக்கு உறுதியான முறையில் உணர்த்தப்படவேண்டும். அதற்காக அரசாங்கமும் தென்னிலங்கையில் உள்ள நியாய சிந்தைபடைத்த அரசியல் சக்திகளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகளை மேற்கொள்ளாத பட்சத்தில் அரசியலமைப்பு சீர்திருத்த செயன்முறைகள் வெற்றி பெறுவது ஒரு போதும் சாத்தியமாகாது.

அரசியலமைப்புச் சபையின் வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பெருமளவுக்கு இன அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை உள்ளடக்கிய ஒரு ஆவணமாகவே இருக்கின்றது.

அந்த அடிப்படையில் நோக்குகையில் இலங்கையில் இன்று அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் எனப்படுபவை தேசியப்பிரச்சினையை அல்லது இனப்பிரச்சினையை கையாளுவதுடன் சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றனவே தவிர, வேறு எதுவுமாக இல்லை.

அறிக்கையின் உள்ளடக்கத்தின் பிரகாரம் கூறுவதென்றால் இயற்றப்படப்போவது உண்மையில் ‘புதியதொரு’ அரசியலமைப்பாக அமையப்போவதில்லை. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் தொடருவதற்கான யோசனைகளை அறிக்கை முன்வைக்கின்றது.  பிரதான அரசியல் கட்சிகள், குழுக்கள் சகலதுமே அநேகமாக மாகாண மட்டத்திலான அதிகாரப் பரவலாக்கல் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன.

இலங்கை அரசின் தன்மையென்று வரும்போது ‘ஏக்கிய ராஜ்ஜிய’ (இப்போது இலங்கை இவ்வாறுதான் அழைக்கப்படுகின்றது) என்ற சிங்களப்பதம் தொடருவதை அறிக்கை பிரேரிக்கின்ற அதேவேளை, தமிழில் தற்போதைய ‘ஒற்றையாட்சி’ என்ற பதத்துக்குப் பதிலாக ‘ஒருமித்தநாடு’ என்ற பதம் பயன்படுத்தப்படலாம் என்று அது கூறுகின்றது. எந்த விதமான நிருவாக மாற்றத்துக்கும் உள்ளாகாமலேயே நாடு இப்போதுள்ளவாறே தொடருகின்ற அதேவேளை ‘Unitary State’ என்ற ஆங்கிலப்பதத்தை நீங்குவது குறித்து அறிக்கையில் யோசனை கூறப்பட்டுள்ளது.

இது நாடு எதிர்நோக்குகின்ற பிரச்சினையின் பாரதூரத்தன்மையைப் பற்றி அக்கறையுடனான எந்தச் சிந்தனையும் இல்லாமல் சொற்களுடனான ஒரு விளையாட்டேயன்றி வேறு ஒன்றுமில்லை.

இந்த வகையான சொல் விளையாட்டு இலங்கை மக்களின் விவேகத்தை நிந்தனை செய்வதாக இருக்கின்றது. வெறுமனே சொற்பதங்களின் மாற்றம் பிரச்சினைக்கு எந்தவிதமான தீர்வையும் உறுதி செய்யப்போவதில்லை. பலதசாப்தகால பாரபட்சம், அடக்குமுறை, போர்க்கொடுமைகள், இழப்புக்கள், அழிவுகளுக்குப் பிறகு சொல் விளையாட்டுக்கு தமிழ் மக்கள் ஏமாந்துவிடவா போகிறார்கள்?

federalism

அரசியலமைப்பு  சபையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அரசியலமைப்பு சட்ட நிபுணர் கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்னவை கடந்த வாரம்  நேர்காணல் செய்த தமிழ்ப்பத்திரிகையாளர்  ஒருவர் இந்த சொல் விளையாட்டு பற்றி அவரின் கவனத்துக்கு கொண்டுவந்த போது ‘ஒருமித்த நாடு’ என்பதற்கு  பதிலாக  மேலும் கூடுதலான அளவுக்கு பொருத்தமான சொல் இருந்தால் கூறுங்கள் பயன்படுத்தலாம் என்று சொன்னாராம்.

இடைக்கால அறிக்கை அதன் விதப்புரைகளை தெரிவுகளின் வடிவில் முன்வைக்கின்றது என்று கூறப்படுகின்றது. ஆனால், கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் ஆட்சேபனை தெரிவித்து, உடனடியாகவே ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் அரசின் ஒற்றையாட்சித் தன்மையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படப்போவதில்லை என்று முண்டியடித்துக்கொண்டு உறுதிப்படுத்துகிறார்கள். அதனால் இடைக்கால அறிக்கை தொடர்பில் அறிவு பூர்வமானதும், ஆக்கப்பூர்வமானதுமான விவாதத்துக்கும், கலந்துரையாடலுக்கும் எங்கே இடம் இருக்கின்றது? எங்கே வாய்ப்பிருக்கின்றது?

தமிழர்கள் தங்களின் நிலைப் பாடுகளில் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றதே தவிர, சிங்கள சமுதாயமும் அரசியல் சக்திகளும் அவர்களின்  பிடிவாதமான நிலைப்பாடுகளில் எந்தவிதமான  நெகிழ்ச்சிப் போக்கையும்  காண்பிக்கத்  தயாரில்லை என்பதே இன்றுள்ள யதார்த்தம்.

அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகள்  முழுவதையும் சீர்குலைப்பதற்கு  கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்ற இனவாதச் சக்திகளை சாந்தப்படுத்தக்கூடிய  அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதை கை விட்டு சிங்கள சமுதாயத்தின் பிரதான அரசியல் கட்சிகளும் குழுக்களும் இனிமேலாவது மானசீகமான அக்கறையுடன் கூடிய அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் அரசியல் துணிச்சலுடன் முன்னெடுக்க வேண்டியதே இன்று அவசியமானதாகும். தற்போது  கிடைத்திருக்கும் வாய்ப்பு தவறவிடப்படுமேயானால், , அரசியலமைப்பு மாற்றம் குறித்து பேசுவதற்கோ அல்லது சிந்திப்பதற்கோ கூட அண்மைய எதிர்காலத்தில் இலங்கையர்களாகிய எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை.