செய்திகள்

அரசியல்கைதிகளை விடுதலை செய்வதால் எந்த ஆபத்தும் ஏற்படப்போவதில்லை-அருட்தந்தை சக்திவேல்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையுடன் தொடர்புபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனையை அனுபவிக்கும் முதியவரிற்கு விடுதலை லிகளுடன் எந்த தொடர்பும் இல்லை, அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கொலை முயற்சிக்காக 290 வருட தண்டனை விதிக்கப்பட்டவர் தனது வாழ்நாளில் வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு வந்திராதவர் என  அரசியல்கைதிகள் விடுதலைக்கான  தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

Fr-Sathivail

கேள்வி- அரசியல்கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய இயக்கத்தின் நோக்கம் என்ன?

பதில்- 30 வருட உள்நாட்டு யுத்தம் காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அரசியல்கைதிகளில் சுமார் 170 பேர் இன்னமும் தடுப்பில் வாடுகின்றனர். இவர்களை விடுவிப்பதற்காகவே நாங்கள் தேசிய இயக்கமாக பரிணமித்துள்ளோம். இந்த அரசியல்கைதிகள் தங்கள் விடுதலைக்காக பலமுறை உண்ணாரவிதப்போராட்டங்கள் போன்ற சாத்வீக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் இதனை வடக்கு மக்களின் பிரச்சினையாகவும், பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட பிரச்சினையாகவும் பார்க்கும் நிலை காணப்படுகின்றது.ஆனால் இது நாட்டின் தேசிய பிரச்சினை,அரசியல் தீர்வுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள பிரச்சினையிது என நாங்கள் கருதுகின்றோம்.

அரசாங்கம் தேசிய பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்க விரும்புகின்றது என்றால் முதலில் அரசியல்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

கேள்வி- நீங்கள் அரசியல்கைதிகளின் விடுதலையை மாத்திரம் கோருவதாக தெரிவிக்கின்றீர்கள்?அரசியல்கைதிகள் பற்றி பேசும்போது குமார் குணரட்ணத்தின் பெயரும் அடிபடுகின்றதே? 

பதில்-ஆம் குமார் குணரட்ணம் ஓரு அரசியல்கைதி, சரத்பொன்சேகாவும் ஓரு அரசியல்கைதிகயாகயிருந்தவர்.குமார் குணரட்ணம் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும்,குமார் குணரட்ணத்தின் பிரச்சினையை நாங்கள் ஓரு ஜனநாயக பிரச்சினையாக பார்க்கின்றோம்,

அனைவரும் தங்கள் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஜனநாயக சூழல் இந்தநாட்டில் நிலவவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு,குமார் குணரட்ணம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், ஏனைய அரசியல்கைதிகள் நீண்டகாலமாக சிறையின் பின்னாள் துயருவதும் கடும் கவலையையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் அரசியல்உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன,

கேள்வி- பல தரப்புகள் இந்த விடயத்திற்கு பலவிதமான தீர்வுகளை முன்வைக்கின்றன?சிலர் சட்ட நடவடிக்கை தொடரவேண்டும் என்கின்றனர், உங்கள்தீர்வு என்ன?

பதில்- தற்போதைய அரசாங்கம் இந்த விவகாரத்தை கையாள விசேட நீதிமன்றங்களை அமைத்துள்ளது, முன்னர் மன்னார் அனுராதபுரம் பகுதிகளிலும் விசேட நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன, தற்போது மன்னாரில் அது இயங்குவதில்லை, அனுராபுரம் விசேட நீதிமன்றில் 10 அரசியல்கைதிகள் உள்ளனர்.தற்போது அந்த நீதிமன்றம் சிறுவர் துஸ்பிரயோகங்களை கையாள்கின்றது, சுமார் 400 வழக்குகள் உள்ளன.

அரசியல்கைதிகள் மிகநீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்,விசேட நீதிமன்றம் கொழும்பில் உள்ள விசேட பொது நீதிமன்றங்கள் போன்று இயங்குகின்றது,இதனால்நீண்ட கால தாமதமும் பணச்செலவும் ஏற்படுகின்றது.இதுதவிர சட்டமா அதிபர் திணைக்களத்தின் செல்வாக்கும் குறிப்பிட்டு சொல்லவேண்டியவிடயம்.

இலங்கையில் காணப்படும் நீதிகட்டமைப்பு இதுவே இதனை மாற்றியமைக்க அரசாங்கம் விரும்பவில்லை,ஆகவே நாங்கள் இது அரசியல்விவகாரம்,அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யுங்கள் என்கின்றோம்.

கேள்வி- உங்கள் கருத்திற்கு எதிராக- விடுதலைப்புலிகளை விடுதலை செய்வதற்கு எதிராக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளனவே?

பதில்-இலங்கையில் இதற்கு முன்னர் தமிழ் இளைஞர்கள் இவ்வாறு விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.1987 இல் அவர்கள் விடுதலைசெய்யப்பட்டனர், சமீபத்தில் ராஜபக்ச அரசாங்கம் 12000 பேரை புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்தது, பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் உள்ளனர்,நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் விடுதலை செய்யப்பட்டவர்கள்உள்ளனர்.2011 இல் ஜனாதிபதி செயலகத்தினால் 800 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கதிர்காமத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டனர்.இது பாராட்டப்பட்டது.

இன்று  அரசியல்கைதிகளை விடுதலைசெய்வதை தடுப்பதற்காக விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் விடுதலை என்றபிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது, இதனை அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி முன்னெடுக்கின்றார்.

விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 15000 பேர் சமூகத்துடன் இணைந்துள்ளனர். தற்போது அரசியல்கைதிகயாக 170 பேர் மாத்திரமே உள்ளனர். இவர்கள் விடுதலைதொடர்பில் தேவையற்ற இனவாத கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

இது தவிரவும் விடுதலைபபுலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலர் அரசியல்காரணங்களிற்காக, அரசியல்நோக்கங்களிற்காக புனர்வாழ்வின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி- ஆனால் இந்த அரசியல்கைதிகள் பாரிய பயங்கரவாதசெயல்களுடன் தொடர்புடையவர்கள் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதே?

பதில்- இவர்கள் மீது எவ்வாறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்பது முக்கியமான விடயம், அவர்களிற்கு விளங்காதமொழியில் எழுதப்பட்ட விடயங்களை ஏற்றுக்கொண்டு கைச்சாத்திடுமாறு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்,இவ்வாறு சித்திரவதையின் பின்னர் எடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அடிப்படையாகவைத்தே இவர்கள் ஆபத்தான பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

என்னால் இரு உதாரணங்களை  முன்வைக்க முடியும்

உதாரணத்திற்கு லக்ஸ்மன் கதிர்காமர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  முதியவர் அப்பாவி என்பது எங்களிற்கு தெரியும்அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொலைமுயற்சியில் 290 வருடம் தண்டனைவிதிக்கப்பட்டவர் சம்பவம் இடம்பெற்றவேளை அந்த பகுதியிலேயே இருக்கவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது அரசியல்நோக்கங்களுடன் கொண்டுவரப்பட்டது.

கேள்வி- அனைத்து அரசியல்கைதிககளையும் விடுதலைசெய்தால்  அவர்கள் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை உருவாக்குவார்கள் என்ற கருத்து காணப்படுகின்றத?

பதில்-நான் முன்னர் தெரிவித்தது போன்று 16000 முன்னாள் பேராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர் அவர்களால்செய்ய முடியாததை  160 பேரால் செய்யமுடியுமா?

160 பேரும் விடுதலைசெய்யப்பட்டவுடன் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும், குறிப்பாக குடும்ப பிரச்சினை, மேலும் சமூகபிரச்சினை, பொருளாதார பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்,உடல் ரீதியான பாதிப்புகளை கூட அவர்கள் எதிர்கொள்ளகூடும்,சிறை என்பது ஓரு மனிதனை பலவீனப்படுத்த கூடியது,விடுதலைசெய்யப்பட்டாலும் பலவருடங்களின் பின்னர் சமூகத்துடன் இணைவது என்பது மிகவும் கடினமான விடயம்.

இவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது அவர்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்பார்கள் என்ற கூற்று வேடிக்கையானது. மேலும் அவர்களால் இயக்கமொன்றில் பணியாற்றுவதற்கான உடல்திறனும் இருக்காது.

கேள்வி – அரசியல்கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

பதில்-எங்களிற்கு அரசியல்கைதிகளின் குடும்பத்தவர்களுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ளவேண்டிய தேவையுள்ளது,அவர்களுடன் தொடர்புகொள்ள தொடங்கியதன் மூலம் அவர்கள் தங்கள் மனஉளைச்சலை பகிர்ந்துகொள்வதற்கான தளத்தை உருவாக்கியுள்ளோம்,பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதால் அரசியல்கைதிகள் அரசியல்வாதிகளை நம்புவதில்லை,அவர்கள் தங்களிற்காக சுயாதீன அமைப்பொன்று குரல்கொடுக்கின்றது என்ற நம்பிக்கையில் உள்ளனர்.சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டங்களின்போது நாங்கள் அது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளோம்,

கேள்வி- இவர்கள் விடுதலைசெய்யப்பட்டால் இராணுவத்தினரும் யுத்தகுற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலைசெய்யப்படவேண்டும் அல்லவா,இருவரும் ஓரு நாணயத்தின் இரு பக்கங்கள் தானே?

பதில்-30 வருட யுத்தத்தில் பலர் கைதுசெய்யப்பட்டனர், அவர்கள் தற்போது 160பேரே அரசியல்கைதிகள் என்ற அடிப்படையில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்,கைதுசெய்யப்பட்ட தருணத்திலிருந்து அவர்கள் பல வழிகளில் விசாரிக்கப்பட்டுள்ளனர், நீதியற்ற விதத்தில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்,தேசிய இயக்கம் அவர்களின் விடுதலை குறித்து பேசுகின்றது, அவர்களின் சுதந்திரம் குறித்து பேசுகின்றது.

இதுவரையில் எந்த படைவீரரும் யுத்த குற்றங்களிற்காக கைதுசெய்யப்படவில்லை,அவ்வாறு தெரிவிக்கப்படுவது ஓரு வதந்தி, அரசாங்கம் படைவீரர்களை பாதுகாக்க முயல்கின்றது,சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட படையினர்களில் எவரும் யுத்த குற்றச்சாட்டுகளிற்காக கைதுசெய்யப்படவில்லை.