அரசியல் மாற்றத்துக்கான சூழலை சந்திரிகாவே உருவாக்கினார்: நிட்டம்புவ கூட்டத்தில் மைத்திரி
ஜனவரி எட்டாம் திகதி இந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றத்துக்கான சூழலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே உருவாக்கினார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நான் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முன்னர் ஒரு தடவை கூட ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசியதில்லை. வெளியேறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நான் ஐந்து நிமிடங்கள் தொலைபேசியில் பேசினேன். அவ்வளவுதான் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி மைததிரிபால சிறிசேனவுக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் பொதுக் கூட்டம் ஒன்று நேற்று நிட்டம்புவவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்ட்வாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் நடந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் முக்கியமாகக் கூறியதாவது:
ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திரக் கட்சியும் இன்று பாரிய வேலைத்திட்டம் ஒன்றை செய்ய தயாராக இருக்கின்றன. புதிய அதரசியல் கலாசாரத்தை மு்னனெடுக்க தயாராக இருக்கின்றோம். இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நான் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியின் மேடையில் நிற்பேன் என்று கேள்வியெழுப்புகின்றனர்.
ஆனால் நான் ஒருவிடயத்தை கூறுகின்றேன். அதாவது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் எந்த அரசியல் கட்சியின் மேடையில் நிற்கப்போகின்றேன் என்பது முககியமா? அல்லது ஜனவரி எட்டாம் திகதி ஜனாதிபதி தேர்தலின்போது நாங்கள் முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது முக்கியமா? இதனையே நான் அவர்களுக்கு பதிலாக கூறுகின்றேன்.
அதாவது நாளைய சவால்களுக்காக இன்றைய செயற்பாடுகளை தடையாகக்கொள்ளக்கூடாது. மேலும் இன்றைய செயற்பாடுகளை நாளைய சவால்களுக்கான தடையாகவும் முன்னெடுக்கக்கூடாது. மாற்றத்தை செய்வது எவ்வாறு என்று பார்ப்போம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எவ்வாறான அர்ப்பணிப்பை வழங்கினார் என்பது இரகசியமல்ல. கடந்த வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நான் அரசாங்கத்தை விட்டு விலகும் முன்னர் ஒரு தடவைக் கூட ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியதில்லை. விலகுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவுடன் நான் ஐந்து நிமிடங்கள் தொலைபேசியில் பேசினேன்.
அந்தவகையில் கடந்த ஜனவரி எட்டாம் திகதி இந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றத்துக்கான சூழலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே உருவாக்கினார். எனவே புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தை முன்னெடுக்க நாட்டு மக்கள் சகோதரத்துவத்துடன் முன்வரவேண்டும். புதிய நாட்டை கட்டியெழுப்பி சமூக மாற்றத்தை நாம் ஏற்படுத்துவோம்.
நல்ல மனிதர்கள் மௌனமாக இருப்பதே சிறந்த மாற்றம் உருவாகாமல் இருப்பதற்கு பாரிய காரணமாக உள்ளதாக அமெரிக்க நிறவெறிக்கு எதிராக போராடிய தலைவர் கூறியுள்ளார். கடந்த எட்டாம் திகதி தேர்தலில் இந்த நாட்டின் நல்ல மனிதர்கள் எழுந்தனர். கடந்த அரசாங்கத்துடன் மோதும் சக்தி எமக்கு இருக்கவில்லை. என்றுமில்லாதவாறு அரச ஊடகங்கள் பக்கச்சார்பாக செயற்பட்டன. மிகவும் அசுத்தமான தேர்தலாக எட்டாம் திகதி தேர்தலை குறிப்பிடலாம். ஆனால் எமது தேர்தல் பிரசாரத்தை மக்களே செய்தனர். இளைஞர் யுவதிகளே மாற்றத்துக்கான அடித்தளத்தை இட்டனர். வெற்றியின் நம்பிக்கை மக்களுக்கு இருந்தது.









