செய்திகள்

‘கும்பமேளா இராஜதந்திரம்’: இந்தியாவின் இன்னொரு ஆரம்பம்

-இளையதம்பி தம்பையா-

தமிழகத்தின் அனைத்து இந்திய திராவிட முன்னேற்ற கழகம் 131 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராகிறார். ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள், வழக்குகளுக்கு முகம் கொடுத்துள்ள ஜெயலலிதா வென்றதும் மட்டுமல்ல, கருணாநிதியும் 13 ஆவது தடவையாக வென்றுள்ளார். ஊழலுக்கு எதிராக குரல்கொடுத்த மக்கள் நலக்கூட்டணியும் அதிதீவிர தமிழ் தேசியத்தை முன்வைத்த நாம் தமிழர் கட்சியும் தோல்வியடைந்துள்ளன. அதேவேளை நாடளாவிய கட்சிகளான காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி போன்றனவற்றுக்கு தமிழகத்தில் இடமில்லாமல் போய் அ.இ.தி.மு. கழகத்திடமும் தி.மு.க. விடமும் தமிழக மக்கள் மீண்டும் கரிசனை காட்டியுள்ளதாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்கள் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கை தமிழர்கள் விடயத்தில் எல்லா தமிழக கட்சிகளும் நான் முந்தி நீ முந்தி என்ற கருத்துக்களை தெரிவித்து இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தன. தி.மு.க. மென்மையாக மிரட்டிய போதும் இலங்கை அரசை ஏறக்குறைய எல்லா தமிழக கட்சிகளும் அதிகமாவே மிரட்டின. இது வழமையான தேர்தல் பிரசாரம்தான் . நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் பிரசாரக் கூட்டங்களில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்க தலைவர் வே. பிரபாகரனின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. எனினும் தேர்தல் பிரசாரங்களில் இலங்கை தமிழர் ஒத்துழைப்பு, இலங்கை அரசிற்கு மிரட்டல் என்பன இடம்பெற்ற அளவிற்கு தேர்தல் முடிவுகளில் அவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

தமிழக கட்சிகள் எல்லாம் நேர்மையாக இலங்கைத் தமிழர் பிரச்சினையை அணுகுகின்றனவா இல்லையா என்பது ஒரு புறமிருக்க அவற்றின் ஒத்துழைப்பும் அழுத்தமும் வரையறுக்கப்பட்டனவே. அவை மத்திய அரசில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இந்திய மத்திய அரசின் வெளிவிவகார கொள்கை இலங்கை அரசை மிரட்ட வேண்டும் என்று கருதும்போது தமிழகத்தின் பக்கம் சாய்வது போல் இருக்கும். இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் இந்திய மாநில சபைகளுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தும் நிலையில் இல்லை. இலங்கையில் மாகாண சபைகள் போன்று அவை குறைவான அதிகாரங்களை கொண்டதாக இல்லை. ஆனால் மத்திய அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கையில் மாநில சபைகள் அழுத்தங்களை கொடுப்பதான தோற்றப்பாட்டை கொண்டிருந்தாலும் அவை எந்தவொரு தீர்க்கமான முடிவை நோக்கியதாக இருப்பதில்லை.

இலங்கை வாழ் மலையகத் தமிழர்களின் தலைவிதியை எதிரிடையாக மாற்றிய சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் முதல் இலங்கை அரசியல் யாப்பிற்கு 13 ஆவது திருத்தத்தை திணித்த இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தம் வரை எல்லா நகர்வுகளிலும் இந்திய மத்திய அரசு, தமிழக அரசின் அழுத்தங்களுக்கு அடிப்பணியவில்லை. இந்திய மத்திய அரசின் இலங்கை மீதான நகர்வுகள் யாவற்றிலும் இலங்கை தமிழர் பிரச்சினையும் தமிழகமும் துருப்பு சீட்டுகளே.

சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களின் போது, இலங்கை தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருப்பதாக கூறியமையும், கச்சதீவை இலங்கையிடமிருந்து இந்தியா மீளப் பெறவேண்டும் என்று கூறியமையும் அவரின் நீண்டகால பிரசார சுலோகங்களாகும். தேர்தல் முடிவடைந்தவுடன் அச்சுலோகங்களுக்கும் எவ்வித பெறுமதியும் கிடையாது.

The Prime Minister, Shri Narendra Modi at the International Convention on Universal Message of Simhastha, in Ujjain on May 14, 2016.	The President of the Democratic Socialist Republic of Sri Lanka, Mr. Maithripala Sirisena and other dignitaries are also seen.இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது எல்லா தமிழக கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேசியதுபோன்று பேசினார். அதாவது யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முதல் பிரதமர் நானே என்று கூறினார். அவரின் இவ்வகையான பேச்சுக்களினாலும் கூட பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் ஒரு ஆசனத்தை கூட பெறமுடியவில்லை. ஆனால் ‘இலவசங்கள்’ தமிழக மக்களை கட்டிப்போட்டுள்ளது. ஜெயலலிதாவின் இலவச சலுகைகள் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இல்லை.

இலங்கை விவகாரங்கள் இந்திய மத்திய அரசின் கைகளை விட்டு தூரப்போய் கொண்டிருக்கும் நிலையில் தமிழக தேர்தல் பிரசாரங்களில் இலங்கை தமிழர் விவகாரங்கள், இலங்கை அரசிற்கு எதிரான மிரட்டல்கள் எடுபடாத நிலையில் ஜெயலலிதா ஆட்சியமைக்கிறார். ஜெயலலிதாவின் ஆட்சிக்கு மத்திய அரசிற்கு கைகொடுக்கும் அளவிற்கு இலங்கை அரச விரோதத்தையும், இலங்கை தமிழர் பிரச்சினையையும் முன்நகர்த்த வேண்டிய அவசியம் இராது.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் கருதி இந்தியா ஏற்கனவே இலங்கை மீது செலுத்தி வந்த அழுத்தங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சம்பூர் அனல் மின் நிலையம் இந்தியா திணிக்கும் திட்டம். அதனை இரத்து செய்யும் நிலைமைக்கு இலங்கை அரசாங்கம் முடிவெடுக்கக்கூடும் என்பது அரசாங்க அமைச்சர்களின் அண்மைக்கால கருத்துக்களாக அமைந்துள்ளன. 13 ஆவது திருத்தச்சட்டத்தில் எழுத்தில் இருக்கும் பல விடயங்களையும் இல்லாமல் செய்ய மகிந்த அரசாங்கம் எடுத்த பல விடயங்கள் இந்தியாவின் அழுத்தத்தினால் தடுக்கப்பட்டன. ஆனால் அதில் பிரதானமாக இருந்த வடகிழக்கு இணைப்பை தொடர்ந்து பேண முடியவில்லை. இன்னும் பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை.

இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் புதிய அரசியல் யாப்பை வரைவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக இருந்தபோதும், இலங்கையில் ஆட்சிமுறைமை சமஷ்டியாகவன்றி ஒற்றையாட்சியாகவே இருக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல அரசாங்க தரப்பினர் அடித்துக் கூறிவருகின்றனர். இக்கருத்துக்கள் வடமாகாண சபையின் சமஷ்டி கோரிக்கைக்கு பதிலாக மட்டுமன்றி 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது சமஷ்டி முறையே சிறந்த ஆட்சிமுறையென இந்தியப் பிரதமர் மோடி செய்த சிபாரிசுக்குப் பதிலாக அமைகிறது.

மகிந்த ஆட்சியின் வீழ்ச்சியுடன் இலங்கையில் நிலைறுத்தியிருந்த சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கலாம் என்று இந்தியா போட்டிருந்த கணக்கு தப்பாகி கொண்டிருக்கிறது. ஏனெனில் மகிந்த காலத்தில் சீனா இங்கு தொடங்கி இருந்த துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைகமுகம், மத்தள விமான நிலையம் உட்பட பல திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க மைத்திரி ரணில் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு விஜயம் செய்து அவற்றுக்கான வாக்குறுதியை கொடுத்தது மட்டுமன்றி விஜயத்தின் முடிவில் பாதுகாப்பு, தொடர்பான விடயங்களில் சீனாவும் இலங்கையும், தொடர்ந்து கூட்டாக செயற்படும் என்று வெளிப்படுத்தும் இலங்கை சீனா கூட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இவை நிச்சயமாக இந்தியாவிற்கு எரிச்சலூட்டும் நடவடிக்கைகளே. ஆனால் சீனாவில் உலகளாவிய பொருளாதார ஆதிக்கம், இலங்கை தொடர்பான நீண்டகால திடமான, இந்தியா போன்று ஊசலாட்டமற்ற தந்திரோபாயம் சீனா இலங்கையில் நிலைகொள்வதை இந்தியாவால் மட்டுமன்றி அமெரிக்காவாலும் தடுத்து நிறுத்த முடியாது. இன்றைய உலக ஒழுங்கின் நவதாராளவாத பொருளாதார கொள்கையை முன்னெடுப்பதில் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்றன சமாந்தரமாகவே பயணம் செய்கின்றன. அதனால் இலங்கையில் சீன பொருளாதார திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது நவதாராளவாதத்திற்கு முரணாக இல்லை என்பதால் அமெரிக்காவின் உலக ஒழுங்கிற்கு பாதிப்பில்லை. அதேவேளை அமெரிக்க அக்கறைகளுக்கு மாறாக அல்லது நேரடியாக முரண்படும் அளவிற்கு இலங்கையில் சீனா நடந்து கொள்ளாது. அமெரிக்கா சீன போட்டி இருக்கும் அதேவேளை தென்னாசிய பிராந்திய கொள்கைகளில் அமெரிக்க சீன புரிந்துணர்வும் இல்லை.

சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்திருந்தாலும் அமெரிக்கா இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தில் தொடர்ந்து பயனடைவதை கைவிடாது. இதில் இந்தியாவின் செல்வாக்கு, இந்தியாவின் இலங்கை தொடர்பான திடமற்ற வெளிவிவகார கொள்கையின் விளைவால் சரிந்து செல்கிறது. இதில் இந்திய, சீன, அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கிடையேயான முரண்பாடுகளும், போட்டிகளும் இருப்பதை அவதானிக்க முடியும்.

இந்தியாவில் நடைபெற்ற கும்பமேளா களியாட்டத்திற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் இந்தியாவின் அழைப்பை ஏற்று சென்று வந்துள்ளனர். அவர்களிடம் இந்திய பிரதமரும், அதிகாரிகளும் கலந்துரையாடியுள்ளனர். அக்கலந்துரையாடல்களில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றி கவனம் செலுத்தப்படவில்லை என்று தமிழ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை கும்பமேளாவிற்கு ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் அழைத்து இலங்கையில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தும்படி இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியதாக சிங்கள தேசியவாதிகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். தேசிய இனப்பிரச்சினை, சமஷ்டி என்பன பற்றி பேசப்பட்டதோ இல்லையோ இந்தியாவின் அதிகரித்த தலையீடுகளின் அவசியம்பற்றி மோடி வலியுறுத்தியிருக்கலாம்.

தமிழக மக்கள் இலங்கை தமிழ் மக்களுக்காக வெளிப்படுத்திவரும் ஒத்துழைப்பு, இலங்கை நாட்டிற்கு எதிரானதல்ல. இந்திய, சீனா, அமெரிக்க அரசுகள் இலங்கை மீது கொண்ட கரிசனைகள் அவற்றின் ஏகாதிபத்திய நலன்சார்ந்ததாகும். அதிலே தேசிய இனப்பிரச்சினையும், நடைபெற்ற யுத்தமும் முக்கிய அம்சங்களாகியுள்ளன. அவை இலங்கை தமிழ் மக்களினது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அடிப்படையிலான கரிசனைகளல்ல. இலங்கை தேசிய இனங்களின் அபிலாஷைகளை குறைந்த பட்சம் கூட அங்கீகரிக்காத அரசாகவிருப்பதால் அதனுடன் இந்திய, அமெரிக்க அரசுகள் முரண்படுகின்ற வேளைகளில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி பேசப்படும். இவ்விடங்களில் இலங்கை தமிழ் தரப்பிற்கு இருக்க வேண்டிய தமிழ் மக்கள் நலன்கருதி முரண்பாடுகளை கையாளவேண்டிய பொறுப்பு நிராகரிக்கப்பட முடியாது.

இலங்கையின் ஆளும் வர்க்கங்களின் அணுகுமுறைகளாலேயே இந்திய, சீன, அமெரிக்க செல்வாக்குகள் தலைதூக்கின. அத்தலையீடுகள் இலங்கையின் அனைத்து மக்களுக்குமே ஆரோக்கியமானவை அல்ல. எனினும் அந்நாடுகளுக்கும் இலங்கை அரசிற்குமிடையிலான முரண்பாடுகளை முடிந்தளவு ஆரோக்கியமாக கையாள வேண்டும். இன்றைய நிலையில் இலங்கையில் இழக்கும் நிலையிலிருக்கும் இந்தியாவின் செல்வாக்கை மீள நிலை நிறுத்த பலவித நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும். அதில் கும்பமேளா இராஜதந்திரம் தொடக்கமாக இருக்கலாம்.