செய்திகள்

பெங்களூரில் ஏன் ‘நீருக்கான யுத்தம்’ வெடித்தது?

இந்தியாவின் தொழில்நுட்ப நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரில் தமிழ் நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்துவரும் காவிரி நீர் பிரச்சசினை காரணமாக வன்முறை வெடித்துள்ளது. அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் காவிரி நீரை பகிரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சில கர்நாடக அமைப்புக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் பெங்களூரின் தென் பகுதியின் பனசங்கரி என்ற இடத்தில் ஒரு பாடசாலை பேருந்து ஒன்று இடைமறிக்கப்பட்டது. குடிபோதையில் இருந்த மூன்று பேர் பேருந்துக்குள் ஏறி ‘ இங்கு யாழ் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் யார் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று சத்தமிட்டார்கள். அந்த பேருந்தினுள் இருந்த 10 முதல் 14 வயதுடைய 15 வரையான மாணவர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெங்களூரின் பல பாகங்களில் வன்முறை வெடித்திருந்த்தால் பாடசாலை முன்னதாகவே மூடப்பட்டு அந்த மாணவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

நல்ல வேளை. அந்த பேருந்தின் சாரதி நிலைமையை புரிந்துகொண்ட சாதுரியமாக நடந்துகொண்டார். அந்த பேருந்தில் இருந்த எல்லோருமே கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் குடும்பங்கள் காவிரி நீர் விடயத்தில் கர்நாடகாவையே ஆதரித்திருந்தார்கள் என்றும் கூறினார்.

water war in India  2

நீருக்கான யுத்தம்

பெங்களூரின் ஆகாயத்தை கருமையான தூசி நிறைந்த புகை நிரப்பி இருந்தது. ஆர்ப்பாட்ட காரர்களினால் 35 வரையான பேருந்து வண்டிகள் தீக்கிரை ஆக்கப்பட்டிருந்தன. இதற்கு காரணம், இந்த பேருந்து வண்டிகளின் உரிமையாளர் ஒரு தமிழராவார்.

காவேரி அணையில் இருந்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை செக்கன் ஒன்றுக்கு 12,000 கன அடி நீரை கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்று இந்த மாத ஆரம்பத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இரு மாநிலங்களும் தமக்கு இந்த நீர் விவசாயத்துக்காக வேண்டும் அதனை பெறுவதற்காக பல தசாப்தங்களாக போராடி வருகிறார்கள்.

water war in India  3

காவேரி நீருக்கான யுத்தம் தொடர்பான சில தகவல்கள்

கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி நீர் தமிழ்நாடு வழியாக பாய்ந்து வங்காள குடாவில் சங்கமிக்கிறது.

19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது அப்போதைய சென்னை நிர்வாக அலகுக்கும் ( தற்போதைய தமிழ்நாடு) மைசூர் மாகாணத்துக்கும் ( தற்போதைய கர்நாடகா ) இடையில் இந்த காவிரி நீர் சர்ச்சை ஆரம்பமானது.

தமது பகுதிகளில் இலட்சக் கணக்கான விவசாயிகளுக்கு காவிரி நீர் தேவை என்று இரு மாநிலங்களும் தொடர்ந்து வாதிட்டுவந்தன.

இரு மாநிலங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததால் 1990 இல் ‘காவிரி நீர் ஆணையம் ‘ உருவாக்கப்பட்டது.

நூற்றாண்டு கால இந்த பிணக்கை தீர்க்கும்பொருட்டு பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.

2007இல் காவிரி நீர் ஆணையம் தமிழ்நாடு வருடம் ஒன்றில் 419 பில்லியன் கன அடி நீரையும் கர்நாடகா 270 பில்லியன் கன அடி நீரையும் பெரும் என்று தீர்ப்பளித்தது.

water war in India  4

நீதிமன்ற உத்தரவு

போதிய மழை இன்மையால் காவிரி அணையில் நீர்த்தேக்கம் குறைந்துவிட்டது என்றும் தனது மாநிலத்தில் உள்ள 3598 நீர்ப்பாசன அணைகளில் 42 சதவீதமானவை வற்றிவிட்டன என்றும் அதனால் தமிழ்நாட்டுடன் காவிரி நீரை பகிர முடியாது என்றும் கூறுகிறது. இதனால் உச்ச நீதிமன்றம் சென்ற தமிழ்நாடு அரசு செக்கன் ஒன்றுக்கு 50,000 கன அடி நீர் தனக்கு வேண்டும் என்று வாதிட்டது.

கடந்த 2 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசியம் ‘ வாழு வாழ விடு ‘ என்று கேட்டதற்கு இணங்க ஐந்து நாட்களுக்கு தினமும் 10,000 கன அடி நீரை செக்கன் ஒன்றுக்கு தமிழ்நாட்டுக்கு திறந்துவிட முன்வந்தது.

ஆனால் கடந்த 5 ஆம் திகதி அளித்த தீர்ப்பில் , 10 நாட்களுக்கு 15,000 கன ஆதி நீரை செக்கன் ஒன்றுக்கு தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இது செக்கன் ஒன்றில் 12,000 கன அடி நீரை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை திறந்துவிட வேண்டும் என்று மாற்றி அமைக்கப்பட்டது. இதன் பிரகாரம் காவிரி அணையில் தற்போது உள்ள நீரில் கால்வாசி நீர் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்.

ஆனால் இந்த நீர் யானைப்பசிக்கு சோழன் பொரி போட்டது போல என்று தமிழ்நாட்டு விவசாயிகள் கூறுகிறார்கள். தனது விவசாய நீர்பாசனத்துக்கு காவிரி நீர் அவசியமாக தேவைப்படுகிறது என்று தமிழ்நாட்டு அரசு கூறுகிறது. ஆனால் கர்நாடக அரசோ, தனது மாநிலம் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெங்களூர் மாற்று ம் ஏனைய நகரங்களுக்கு குடிநீருக்கு காவிரி நீர் வேண்டும் என்று வாதிடுகிறது.

water war in India 2

அதிகரிக்கும் வன்முறை

இந்தநிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு கர்நாடகாவில் கொதிநிலையை ஏற்படுத்தி உள்ளது. வன்முறை காரணமாக பெங்களூரின் அலுவலகங்கள் மூடப்பட்டு போக்குவரத்து இஸ்தம்பிதம் அடைந்துள்ளது. பொலிஸார் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் ஆயிரக்கணக்கில் காவல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். திங்கள் அன்று போலீசார் ஆர்ப்பாட்ட காரர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகி உள்ளார். தமிழ்நாட்டு இலக்க தகடுகளுடன் வரும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவை எரியூட்டப்பட்டுள்ளன. பாடசாலைகள் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

கர்நாடக திரைப்பட நடிகர் நடிகைகள் கடந்த வெள்ளிக்கிழமை பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு அளித்தமையை தனது முகநூலில் கண்டித்த ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் கருநாடக ஆதரவு அமைப்பினரால் தாக்கப்பட்டு பலவந்தமாக மன்னிப்பு கோர செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ்நாட்டின் எல்லை பகுதியில் கர்நாடகர் ஒருவருக்கு சொந்தமான உணவகம் ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கர்நாடக இலக்க தகடுகளுடன் செல்லும் வாகனங்கள் சில சென்னையில் மறுக்கப்பட்டு தாக்கப்பட்டு வாகன சாரதிகள் ‘ காவேரி தமிழ் நாட்டுக்கு சொந்தம்’ என்று கூற பலவந்தப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அண்மைய இந்த கலவரம் 1991 இல் இதே காரணத்துக்காக பெங்களூரில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளை ஞாபகப்படுத்துகின்றன. இதன் காரணமாக சுமார் 2 இலட்சம் தமிழர்களை பெங்களூரை விட்டு வெளியேறினார்கள்.

இரு மாநிலங்களில் இருந்தும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைத்து காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் இரு மாநில எ அரசாங்கங்களும் இது தொடர்பில் அக்கறையுடன் செயற்படவில்லை. டில்லி அரசு கூட இந்த விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க தயங்கிய ஒரு போக்கை கொண்டிருந்ததால், இந்த பிணக்கை தீர்க்கும் பொறுப்பு உச்ச நீதிமன்றத்தின் மீது விழுந்தது.

பி.பி சி யில் 13/09/2016 அன்று வெளியான செய்திக்கட்டுரையின் தமிழாக்கம்.

water war in India  5