செய்திகள்

முதலமைச்சர்  விக்னேஸ்வரனும் மகாநாயக்கர்களும்

 

வீரகத்தி தனபாலசிங்கம் 

கடந்தவார இறுதியில் கண்டி நகருக்குச் சென்று இலங்கையின் பௌத்த மதத் தலைவர்களான மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரையும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரையும் சந்தித்துப் பேசிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அந்தச் சந்திப்புகள் குறித்த தனது மன உணர்வுகளை அடுத்த இரு தினங்களுக்குள்ளாகவே பகிரங்கமாக வெளிப்படுத்தத் தயங்கவில்லை. அவர் அதற்குத் தெரிவு செய்ததைப் போன்று பொருத்தமான வேறு அரங்கு இருக்கமுடியாது.

மூத்த ஊடகவியலாளரும் சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான குசல் பெரேராவின் இரு நூல்களின் வெளியீட்டு வைபவம் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. Rajapaksa, The Sinhala Selfie என்ற ஆங்கில நூலும் ’83 தறுவோ’ என்ற தலைப்பிலான சிங்களக் கட்டுரைகளின் தொகுப்புமே அவையாகும். அவ்வைபவத்தில் விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். சபையோரில் மிகவும் அதிகப் பெரும்பாலானவர்கள் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் முன்னிலையில்தான் மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பு தொடர்பிலான தனது உணர்வுகளை அவர் உரையின் இறுதியில் பகிர்ந்துகொண்டார்.

‘எனது உரையை முடித்துக்கொள்வதற்கு முன்னதாக கடந்தவார இறுதியில் மல்வத்த மகாநாயக்க தேரருடனும் அஸ்கிரிய மகாநாயக்க தேரருடனும் எனது சந்திப்புகள் குறித்து கூறவிரும்புகிறேன். இரு மகாநாயக்கர்களுமே முரண் நிலையான குணவியல்புகளை உருவகப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ மல்வத்த மகாநாயக்க தேரரையும் விட அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் உணர்வுகளுக்கு நெருக்கமானவராக இருக்கிறார் என்பது நிச்சயம்.

‘மல்வத்த மகாநாயக்கர் எம்மை நேசவுணர்வுடன் மகிழ்ச்சியாக வரவேற்ற அதேவேளை அஸ்கிரிய மகாநாயக்கர் அதிகாரத் தன்மையுடன் நடந்து கொண்டார். அவரின் சுதந்திரத்தை காரக சபா (செயற்குழு) கட்டுப்படுத்துகிறதோ எமக்குத் தெரியவில்லை. மல்வத்த மகாநாயக்கர் மனிதாபிமானம் மிக்கவராகவும் மக்களின் இன்னல்களைப் போக்குவதில் அக்கறைகொண்டவராகவும் விளங்குகிறார். அஸ்கிரிய காரக சபாவின் உறுப்பினர்கள் தங்களின் மகாநாயக்கருடன் தனியாகச் சந்திப்பதற்கு என்னை அனுமதிக்கவில்லை. அவர்கள் சகலரும் ஒரு உயர்ந்த பீடத்தில் அமர்ந்துகொண்டு எம்மை ஒருபடி குறைந்த தளத்தில் வைக்கப்பட்டிருந்த மெத்தைகளிலே அமர வைத்தார்கள். அவ்வாறு செய்ததன் மூலமாக தங்களது சிங்கள பௌத்த உணர்வுகளை முனைப்புறுத்திக் காட்டுவதில் அவர்கள் அக்கறை கொண்டிருந்தார்கள். அவர்கள் இறுமாப்புக் கொண்டவர்களாகவும் பெரும்பாலும் அவமதிக்கும் சுபாவத்தைக்கொண்டவர்களாகவும் தெரிந்தார்கள்.

‘சமஷ்டி முறை என்பது பிரிவினைவாதமே என்ற சிந்தனையை அவர்கள் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் உயர்நீதிமன்றம் சமஷ்டிமுறை பிரிவினை வாதமல்ல என்று அதன் அண்மைய தீர்ப்பொன்றில் உறுதி செய்திருக்கிறது என்று அவர்களுக்கு நான் சுட்டிக்காட்டினேன்.

மாறுபட்ட அலகுகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு வழியே சமஷ்டி என்றும் சொன்னேன். 1930 – 1940 கால கட்டத்தில் பிரித்தானிய ஆணையாளர்கள் முன்னிலையில் சமஷ்டியை முதலில் கோரியவர்கள் கண்டிய பிரதானிகளே என்பதையும் நினைவுபடுத்தினேன். சமஷ்டி முறையின் மூலமாக தங்களது தனித்துவத்தைப் பாதுகாக்க விரும்புவதாக கண்டியர்கள் கூறினார்கள். அதை அஸ்கிரிய மகாநாயக்கர் நம்பியதாக எனக்குத் தெரியவில்லை. அஸ்கிரிய மதகுருமார்களின்  கடும்போக்குக் கர்வத்தை கடந்துபோக எம்மால் இயலுமாக இருந்தால், இந்த நாட்டின் அரசியல் பிரச்சினைகளை விரைவாகவே தீர்த்துக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். அஸ்கிரிய பீடத்தவர்கள் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குக் கொண்டவர்கள் போலத் தோன்றுகிறது.

‘சிங்கள பௌத்தர்கள் மத்தியில் உள்ள கடும்போக்காளர்கள் என்று சொல்லப்படுபவர்களைச் சந்திக்க விரும்புகிறேன் என்று எப்போதும் நான் கூறி வந்திருக்கிறேன். அஸ்கிரிய காரக சபா உறுப்பினர்கள் மத்தியில் அத்தகைய கடும் போக்காளர்கள் சிலரைக் காணக்கூடியதாக இருந்தது. எமக்கு நேரம் கிடைக்குமாக இருந்தால் கடும்போக்கு நிலைப்பாட்டிலிருந்து அவர்களை மாற்றி மல்வத்த மகாநாயக்கர் போன்று மனிதாபிமானமானமுடையவர்களாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.’

‘எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களது கர்வம் கற்பனைத் தன்மையானதாகும். அது தவறான நம்பிக்கைகள், திரிபுபடுத்தப்பட்ட நோக்குகள் மற்றும் தவறான ஊகங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். உண்மைகள் உறுதியான முறையில் எடுத்துரைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுமேயானால் அன்பையும் புரிந்துணர்வையும் ஆதாரமாகக் கொண்ட பௌத்தத்தின் அடிப்படைப் பண்புகளுக்கு அவர்கள் திரும்புவார்கள்’ என்று முதலமைச்சர் கூறினார்.

தனது இரு அமைச்சர்கள் சகிதம் விக்னேஸ்வரன் மகாநாயக்கர்களுடன் நடத்திய இச்சந்திப்புகளின்போது குசல் பெரேராவும் கூட இருந்தார். கடந்தவார முற்பகுதியில் யாழ்நகர் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அரசியல் தீர்வொன்றை எதிர்கொள்ளல்’ என்ற தலைப்பிலான புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அவர் கொழும்பில் இருந்து சென்றிருந்தார். அந்தக் கூட்டத்திற்கு முன்னதாகவே மகாநாயக்கர்களுடனான சந்திப்புகளுக்கான ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்துவிட்ட முதலமைச்சர் தங்களுடன் கண்டிக்கு வந்து அனுசரணையாக இருக்குமாறு குசல் பெரேராவை யாழ்ப்பாணத்தில் வைத்துக் கேட்டுக்கொண்டதாகத் தெரியவருகிறது.

முதலில் கடந்த சனிக்கிழமை காலை மல்வத்த மகாநாயக்கருடனான சந்திப்பு இடம்பெற்றது. முதலமைச்சர் குழுவினரை அன்பாதரவாக வரவேற்ற மகாநாயக்கர் தனியாக அவருடன் பேசுவதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களை அங்கிருந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். விக்னேஸ்வரன் அரசியல் விவகாரங்கள் தொடர்பாக விளக்கமளிக்க முற்பட்டபோது அவற்றில் அக்கறை காட்டாத மகாநாயக்கர் போரின் முடிவுக்குப் பின்னர் பல வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் வடக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற மனிதாபிமானப் பிரச்சினைகளைக் கேட்டறிவதிலேயே கவனத்தைச் செலுத்தினார். வடக்கில் இராணுவத்தினரின் மிகையான பிரசன்னத்தினால் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள், போர்க் காலத்தில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட குடிமக்களின் பெருமளவு நிலப்பரப்புகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருப்பதால் எதிர்நோக்கப்படுகின்ற இன்னல்கள், போரில் கணவன்மார்களை இழந்து ஜீவாதாரத்துக்கு உகந்த மார்க்கங்களின்றி அவலப்படுகின்ற விதவைப் பெண்களின் பிரச்சினைகள் என்று பெருவாரியான நெருக்கடிகள் குறித்து அவருக்கு முதலமைச்சர் விளக்கமாகக் கூறினார். அந்த நெருக்கடிகளுக்கு விரைவாகத் தீர்வு காண வேண்டிய அவசியத்தை புரிந்துகொண்டவராக மகாநாயக்கரும் அவற்றை அரசாங்கத் தலைவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவதாகத் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான சரியான மார்க்கங்கள் என்று தான் நம்புகின்றவை குறித்துப் பேசிய விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்குத் திருப்தி தரக்கூடிய ஏற்பாடுகளை ஒற்றையாட்சிக்குள் நடைமுறைப்படுவது சாத்தியமானதல்ல என்றும் சமஷ்டி முறையே உகந்த தீர்வு என்றும் கூறியபோது, மகாநாயக்கர் அந்த யோசனைகளையும் அதிகாரப்பரவலாக்கலுடன் தொடர்புடைய அரசியல் விவகாரங்களையும் அரசாங்கத் தலைவர்களுடனும் ஏனைய அரசியல் தலைவர்களுடனும் பேசுமாறு கேட்டுக்கொண்டார். என்றாலும் பெரும்பான்மையினத்தவர்களின் நிலைப்பாடுகளையும் கருத்திலெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூற அவர் தவறவில்லை. மல்வத்த மகாநாயக்கர் தன்னைச் சந்திக்கின்ற அரசியல்வாதிகளுடன் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசாதவரல்ல. ஆனால், தன்னைச் சந்திக்க வந்திருக்கின்ற தமிழ் அரசியல் தலைவருடன் முரண்பட்டுக்கொள்வதைத் தவிர்க்க அவர் விரும்பியிருக்கக்கூடும். அவரின் அணுகுமுறை விக்னேஸ்வரனைக் கவரவும் தவறவில்லை. வடக்கிற்கு விஜயம் செய்யுமாறு மல்வத்த மகாநாயக்கருக்கு அவர்  அழைப்பும் விடுத்தார்.

wigneswaran and malvatha 1

ஆனால், அஸ்கிரிய மகாநாயக்கருடனான முதலமைச்சரின் சந்திப்பு முற்றிலும் வேறுபட்ட உணர்வு நிலைக்கு மத்தியிலேயே நடைபெற்றது. மகாநாயக்கர்களைச் சந்திப்பதற்குக் கண்டிக்குச் செல்கின்ற அரசியல் தலைவர்கள் அனேகமாக ஒரே தினத்திலேயே இருவரையும் சந்திக்கக்கூடியதாக இருப்பதைக் கண்டிருக்கின்றோம். சனிக்கிழமை காலை மல்வத்த மகாநாயக்கரைச் சந்தித்த விக்னேஸ்வரனால் அன்றைய தினமே அஸ்கிரிய மகாநாயக்கரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமையே அவரைச் சந்திக்கக் கூடியதாகவிருந்தது. அஸ்கிரிய பீடத்தவர்கள் முதலமைச்சர் குழுவினரை நடத்திய முறையை நோக்கும்போது அதை தற்செயலான ஒன்றாக நம்பமுடியவில்லை. அவருக்கு ஒரு வித்தியாசமான செய்தியொன்றைக் கொடுக்கவேண்டுமென்ற நோக்கில் அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.

மல்வத்த மகாநாயக்கர் தனியாக விக்னேஸ்வரனைச் சந்தித்தது போன்று அஸ்கிரிய மகாநாயக்கர் சந்திக்க விரும்பவில்லை. அந்தப் பீடத்தின் காரக சபாவைச் சேர்ந்த பத்துக்கும் அதிகமான மூத்த பிக்குமார் சகிதமே அவர் வடக்கு முதலமைச்சரைச் சந்தித்தார். முதலில் காரக சபாவினர் முதலமைச்சருக்கும் கூட வந்தவர்களுக்கும் நீண்டதொரு ‘அரசியல் வகுப்பை’ நடத்தினார்கள். சமஷ்டி முறை என்பது பிரிவினைவாதமே. இலங்கை எப்போதும் ஒற்றையாட்சி அரசாகவே இருக்கவேண்டும்.

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர்கள் ‘பாடம்’ சொல்லிக்கொடுத்த பின்னரே விக்னேஸ்வரன் தனது கருத்துக்களை அஸ்கிரிய மகாநாயக்கருக்கு கூறக்கூடியதாக இருந்தது. சமஷ்டி முறை பற்றிய அவரின் நியாயப்படுத்தல்களைச் செவிமடுப்பதில் அவர்கள் அக்கறை காட்டியிருக்கமாட்டார்கள்.

கடந்த மாதம் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருந்ததாக அஸ்கிரிய மகாநாயக்கர் முதலமைச்சருக்கு கூறினார். யாழ்ப்பாண விஜயத்தில் அரசியல்வாதிகள் எவரையும் மகாநாயக்கர் சந்திக்கவில்லை. ஆனால், இராணுவத்தினரையும் அங்குள்ள ஏனைய மதத் தலைவர்களையும் சந்தித்துப் பேசியிருந்தார். இந்து,கிறிஸ்தவ,மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்கள் அனைவரும் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தன்னிடம் ஏற்றுக்கொண்டதாக அவர் விக்னேஸ்வரனிடம் கூறினார் என்று அறியவருகிறது. அஸ்கிரிய பீடத்தவர்கள் அதிகாரத்தன்மையுடனும் இறுமாப்புடனும் தங்களுடன் நடந்துகொண்டமை விக்னேஸ்வரனின் மனதைப் புண்படுத்தியிருக்கிறது என்பது வெளிப்படையானது. அஸ்கிரிய மகாநாயக்கர் வடபகுதி மக்கள் எதிர்நோக்குகின்ற மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பில் வெளிக்காட்டியதாகக் கூறப்படுகின்ற அனுதாப அணுகு  முறையை அனுகூலமான சமிக்ஞையாக வரவேற்கக்கூடிய மனநிலையில் விக்னேஸ்வரன் இருந்திருப்பார் என்று நம்ப முடியாது. அத்தகைய உணர்வு நிலையிலேயே அந்தச்சந்திப்பு நடந்து முடிந்திருக்கின்றது

முதலமைச்சர் குழுவினரை இரு மகாநாயக்க தேரர்களும் வரவேற்ற முறையில் காணப்பட்ட எதிரெதிரான உணர்வு நிலைகள் குறித்து  அவர்களுடன் கூடச் சென்ற குசல் பெரேரா இக்கட்டுரையாளருடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டபோது ‘மல்வத்த மகாநாயக்கர் இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என்று கூறுவதைக்கூட அன்றைய சந்திப்பில் தவிர்த்துக் கொண்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது’ என்று குறிப்பிட்டார். ஆனால் அரசியல் தீர்வு குறித்து விரிவாக கலந்தாலோசிப்பதற்கு வாய்ப்பொன்று கிடைக்கும் போது மல்வத்த மகாநாயக்கர்  இதே மாதிரியான உணர்வை வெளிக்காட்டுவார் என்று கூற முடியாது.

உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வடமாகாண சபையில் தீர்மானத்தை நிறைவேற்றியது மாத்திரமல்ல, தொடர்ச்சியாக இந்தக் கோரிக்கையை உரத்து வலியுறுத்தி வருகின்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன் போர்க்குற்றங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து இரு மகாநாயக்கர்களுடனும் பேசுவதை  மிகுந்த சாதுரியத்துடன் தவிர்த்துக் கொண்டார் என்று குசல் பெரேரா கூறினார்.

கண்டிக்குச் செல்வதற்கு முன்னதாக தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றியபோது விக்னேஸ்வரன் முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜெயசூரியா குற்றச் செயல்களை செய்ததாக தற்போதைய அமைச்சரும் இன்னொரு முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா கூறியதைச் சுட்டிக்காட்டி, அவ்வாறு கூறியதற்காக தென்னிலங்கையில் பொன்சேகாவின் கொடும்பாவியை எரிக்கிறார்கள் என்றால் வடக்கில் அவரின் படத்துக்கு மாலைபோட வேண்டுமென்று தெரிவித்தார். அவ்வாறு அவர் கூறியதை மகாநாயக்கர்கள் அறிந்திருந்தார்களோ இல்லையோ தெரியவில்லை.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டங்கள் மற்றும்  அவர்களின்  நியாயபூர்வமான  அரசியல்  அபிலாசைகள்  தொடர்பில்  சிங்கள  மக்கள்  மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தி  அரசியல்  இணக்கத்  தீர்வொன்றைக்  காண்பதற்கான  முயற்சிகளுக்கு  அவர்களின்  நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய  உருப்படியான  அணுகுமுறைகளையும்  நடவடிக்கைகளையும்  முன்னெடுப்பதில்  தமிழ்த் தலைவர்கள் அக்கறை  காட்டுவதில்லை என்ற குறைபாடு குறித்து  நீண்டகாலமாக பேசப்பட்டு வந்திருக்கிறது. இத்தகையதொரு  பின்புலத்திலே  முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்கள  மக்கள் மத்தியில் அதுவும்  குறிப்பாக  இலங்கை சனத்தொகையில் அதிகப் பெரும்பான்மையானவர்களான சிங்கள பௌத்தர்கள் மத்தியில் மிகையான  செல்வாக்குக் கொண்ட பௌத்த உயர்பீடங்களின் தலைவர்களைச்  சந்தித்து தமிழ் மக்களின்  பிரச்சினைகள் குறித்து நேரடியாக விளக்கமளித்து, அரசியல்  தீர்வு காண்பதற்கு  அவர்களின்  ஆதரவையும்  ஒத்துழைப்பையும்  பெறுவதற்கு மனங்கொண்டமை வரவேற்கப்பட வேண்டியதேயாகும். வடமாகாண முதலமைச்சராக பதவியேற்ற  நாள்  தொடக்கம்  அவரைப்பற்றி தென்னிலங்கையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற படிமத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில்,  தன்னால்  வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற  நிலைப்பாடுகள்  தொடர்பில் தென்னிலங்கை சிங்களவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு  முதலில் மகாநாயக்கர்களையே அவர் தேர்ந்தெடுத்தது  ஒரு  துணிச்சலான  நடவடிக்கையேயாகும்.  கோட்பாட்டுப் பிடிவாதமுடைய  ஒரு தமிழ்த் தேசியவாதியாக  தன்னைக் காட்டிக் கொள்கின்ற விக்னேஸ்வரனின் அரசியல்  அணுகுமுறைகள் தொடர்பான விமர்சனங்கள் இங்கு  பொருத்தமுடையவையல்ல.

மகாநாயக்க தேரர்களுடன் முதலமைச்சர் நடத்திய சந்திப்புகள் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் வெளிக்கிளம்பியிருக்கக்கூடிய அபிப்பிராயங்கள் எத்தகையவை என்பதும்   அந்தப் சந்திப்புகள் தொடர்பில் தென்னிலங்கை அரசியல் சமுதாயமும் சிங்கள,  ஆங்கில ஊடகங்களும் மக்களுக்கு எத்தகைய செய்தியைக் கூறியிருக்கின்றன என்பதுமே  முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டியவையாகும்.  சிங்கள  ஊடகங்களைப் பொறுத்தவரை, அதுவும் குறிப்பாக  பத்திரிகைகள் விக்னேஸ்வரன் ஒரு  கடும்போக்கு தமிழ்த் தேசியவாதி என்ற வகையிலான  தோற்றப்பாட்டை சிங்கள மக்கள்  மத்தியில் மேலும் வலுப்படுத்துவதற்கே அவரின்  கண்டி சந்திப்புகள் தொடர்பான செய்திகளைப் பயன்படுத்தியிருக்கின்றன என்று தான்  சொல்ல வேண்டியிருக்கிறது.  ஒரு வார காலமாகியும்கூட அந்தச் சந்திப்புகள் குறித்து சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்களை எழுதியதையும் காணக்கூடியதாயில்லை.  தென்னிலங்கையின் சில  அரசியல் அவதானிகள் பத்திரிகைகளில் கட்டுரைகளை  எழுதியிருந்தாலும்  சிங்கள மக்களுக்கு ஒரு நேர்மறையான செய்தியைச் சொல்லக் கூடியதான அபிப்பிராயங்களை அவர்கள் வெளிப்படுத்தியதாக இல்லை.

wigneswaran and malvatha

அரசாங்கத் தலைவர்களைப் பொறுத்தவரை, எவருமே  முதலமைச்சருக்கும் மகாநாயக்கர்களுக்கும்  இடையிலான  சந்திப்புக்கள் பற்றி பேசியதையும் காணவில்லை.  முன்னாள்  ஜனாதிபதி  மஹிந்த  ராஜபக் ஷ  விக்னேஸ்வரன் கண்டி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகளை சந்தித்ததை மாத்திரம் சுட்டிக்காட்டி ‘விடுதலை புலிகளுக்காகவே அவர்கள் பேசுகிறார்கள். அதனால்தான் அவர் கைதிகளைப் பார்வையிட்டார். அவர்களுக்கு அதுதான்  முக்கியமானது’ என்று  ஊடகவியலாளர்கள் மத்தியில் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இலங்கையின் பௌத்த உயர் பீடங்கள் இரண்டின் தலைவர்களை வடமாகாண முதலமைச்சர் சந்தித்து தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து கூறியதெல்லாம் இந்த நாட்டின் முன்னாள்  தலைவருக்குத் தெரியவில்லை.

அதெல்லாம் போகட்டும்,  முக்கியமான தமிழ்க் கட்சிகளிடமிருந்து  அதுவும் குறிப்பாக,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து  பிரதிபலிப்பு எதுவும் வரவில்லை. விக்னேஸ்வரன் சுமார் இரு வருடங்களாக தன்னை நெருக்கமாக அடையாளப்படுத்தி வருகின்ற தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் கூட எதுவும் பேசவில்லையே!