செய்திகள்

அரச வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்….!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டு அவர்களுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

மீள்குடியேற்ற மற்றும் புனர்நிர்மான அமைச்சின் செயலாளர் சிவஞானஜோதிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் உள்ள அமைச்சின் செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளில் மீள் குடியேற்ற அமைச்சு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், இடம்பெயர்ந்து இந்தியா சென்ற நிலையில் மீண்டும் தாயகம் திரும்புகின்ற போது காணிகள் இல்லாதவர்களுக்கு காணிகளை வழங்கி வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுத்து அம்மக்களுக்கு 6 மாதங்களுக்கான உலர் உணவு வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை மற்றும் அவர்களின் கல்வித்தகமைகளுக்கு அமைவாக அரச வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N5