செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் தூதுவராக ஸ்கந்தகுமாரை நியமிக்க தீர்மானம்

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் தூதுவராக George Stuarts நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சோமசுந்தரம் ஸ்கந்தகுமாரை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்கந்தகுமார், இலங்கையின் பழமைவாய்ந்த முன்னணி வர்த்தக நிறுவனமான George Stuarts நிறுவனத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றியதுடன், அதன் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உள்ள இவர், தமிழ் யுனியன் கிரிக்கெட் அணியின் தலைவராகவும், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராகவும் பணியாற்றியவர். இக்காலப்பகுதியில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டவர். பிரபல சமூகப்பணியாளருமான இவரை, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது.

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததும் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.