ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: இந்தியா – வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.அதில் இருந்து 2 ஆண்டுக்கு ஒருமுறை இந்தப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 12 முறை போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை அணிகள் தலா 5 முறையும், பாகிஸ்தான் 2 தடவையும் கோப்பையை கைப்பற்றி உள்ளன.ஒருநாள் போட்டியாக நடத்தப்பட இந்த போட்டி முறை முதல் முறையாக 20 ஓவர் ஆட்டமாக நடத்தப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை நடைபெறுவதால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கடந்த ஆண்டு இந்த முடிவை எடுத்தது. இனி வரும் காலகட்டங்களில் ஒருநாள் போட்டி, 20 ஓவர் என்று சுழற்சி முறையில் நடைபெறும்.முதலாவது 20 ஓவர் ஆசிய கோப்பை போட்டி வங்காள சேதத்தில் நாளை (24–ந்தேதி) தொடங்குகிறது. மார்ச். 6–ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது.இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, போட்டியை நடத்தும் வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி மட்டும் தகுதி சுற்று மூலம் நுழைந்து உள்ளது. அந்த அணி தகுதி சுற்றில் தான் மோதிய 3 ஆட்டங்களிலும் (ஆப்கானிஸ்தான், ஆங்காங், ஓமன்) வென்று இருந்தது.இந்தப்போட்டி ரவுண்டு ராபின் முறையில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 20 ஓவர் உலக கோப்பை நடைபெற இன்னும் 2 வாரங்கள் இருப்பதால் இந்தப் போட்டி இந்திய உள்பட ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் பெற்றது.நாளைய தொடக்க ஆட்டத்தில் இந்தியா– வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.டோனி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா, இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் வென்று இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. வங்காளதேசத்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலாக அமையலாம்.ஏற்கனவே அந்த அணியிடம் இந்தியா அதன் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்து இருந்தது. இதனால் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயமும் இந்திய அணிக்கு இருக்கிறது.பயிற்சியின் போது இந்திய அணி கேப்டன் டோனிக்கு முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.இதை தொடர்ந்து மாற்று விக்கெட் கீப்பராக பார்த்தீவ் பட்டேல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். பார்த்தீவ் பட்டேல் இந்திய அணியில் விளையாடி 4 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2012–ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார்.இலங்கை தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட வீராட்கோலி அணிக்கு திரும்பி உள்ளார். இதனால் அவர் இடத்தில் 3–வது வரிசையில் ஆடுவதால் ரகானேக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினமேசுழற்சி முறையில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பேன் என்று டோனி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதனால் ஏதாவது ஒரு ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும்.பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ஷிகார் தவான், வீராட்கோலி, ரெய்னா ஆகியோரும், பந்துவீச்சில் அஸ்வின், பும்ரா, ஆசிஷ் நெக்ரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளார்.இதனால் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மொர்தாசா தலைமையிலான வங்காளதேச அணியில் சகீப்–அல்–ஹசன், முஷ்பிகுர் ரகீம், மகமதுல்லா, இம்ருல்கய்ஸ், நாசிர் உசேன், சபீர் ரகுமான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.




