செய்திகள்

ஆசிரியத்துவமே இளைய தலைமுறையை பல்வேறு துறைகளில் மாண்புறு மனித வளமாக மாற்றுகிறது

சி.இரகுலேந்திரன்

தீவக கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு சமீபத்தில் வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ் மாநாட்டில் தீவக கல்வி வலயத்தில் பணியாற்றும் 600 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தீவக கல்வி வலய பணிப்பாளர் திரு.ளு.சுந்தரசிவம் அவர்கள் தலைமையில் இடம் பெற்ற இம் மாநாட்டின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு அமைச்சர் திரு.த.குருகுலராஜா அழைக்கப்பட்டிருந்தார். சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.ரவீந்திரன் அவர்களும் வடமாகாண கல்வி பணிப்பாளர் திரு.செ.உதயகுமார் அவர்களும் கலந்து கொண்டனர்.

முதல் நாள் அமர்வில் கொடியேற்றம், வரவேற்பு நடனம், தலைமையுரை என்பன நடைபெற்ற பின்னர் ‘தீவக ஒளி’ எனும் தீவக ஆசிரியர்களின் படைப்புக்களை தாங்கிய மலர் வெளியீடும் இடம்பெற்றது. தொடர்ந்து ஆசிரியர்களால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளிற்கு துணை புரிய கூடிய பல்துறைசார் கண்காட்சி ஒன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மதிய இடைவேளையின் பின்னர் தீவக கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பலரது செயல்நிலை ஆய்வுகள் பற்றிய முன்வைப்புகள் இடம் பெற்றன. இதில் பல்துறை சார் ஆசிரியர்கள் தங்கள் தங்கள் பாடவிதானங்களை ஒட்டியும் அதில் உள்ள பிரச்சினைகள் பற்றியும், மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் எடுத்துரைத்தார்கள். முக்கியமாக பாடசாலையில் பாடங்களை கற்பிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகள் பற்றி, முக்கியமாக பௌதிகவள பற்றாக்குறை பற்றி பல கருத்துக்களை முன்வைத்தார்கள். கற்பிக்கும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மாணவர் எதிர்நோக்கும் இடர்பாடுகள், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்பன முன்வைக்கப்பட்டன. ஆசிரியர்கள் தினங்களில் ஆசிரியர்கள் மூலமாக செயல்நிலை ஆய்வு முன்வைப்புக்கள் இடம் பெறுவது இன்றியமையாதது. பொது மக்களும், நிர்வாகிகளும், அரசியல்வாதிகளும் இதற்கான தீர்வு ஒன்றை காண முடியும்.

Teachers Day Island  (2)முதல்நாள் நிகழ்வில் சிறப்புப் பேருரை ஒன்றும் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வ.பரந்தாமன் அவர்கள் ஆங்கில பாடத்தை இலகுவாக கற்பிக்கும் வழிமுறைகள் பற்றி எடுத்துக்கூறினார்.

இரண்டாம் நாள் அமர்வில் சிறப்புப் பேருரை ஒன்றும் இடம் பெற்றது. யாழ் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியும் முன்னாள் புவியியல் துறை தலைவருமான பேராசிரியர் இரா.சிவசந்திரன் ஆசிரியத்துவம் கல்வியை வழங்கி அறிவை புகட்டுவதன் மூலம் எவ்வகையில் மனிதனை வளங்களாக மாற்றுகிறது என்பது பற்றி சிறப்புரையாற்றினார்.

ஆசிரியத்துவம் அறிவை, தொழில்நுட்பத்தை, இளைஞர்களிடையே வளர்த்து மனித வளத்தைப் பெருக்கி எமது பௌதிக வளங்களை முறையாகவும், திறமையாகவும் பயன்படுத்த வழிகாட்டும் போதே நாம் அபிவிருத்தியை எய்த முடியும். நாம் உணர்ச்சி அரசியல் பேசி எதற்கும் வெளிநாட்டார் வருவர் என பொய் உரைக்காது எமது காலில் நிற்கக்கூடிய வகையில் எமது மனித வளத்தை மே;படுத்தி அபிவிருத்தி காண வேண்டும். நாம் தமிழராக தமிழ் பிரதேசங்களில் வாழ வேண்டுமானால் இது அவசியமாகும். நாம் பெற்ற பிரதேச நிர்வாக கட்டமைப்புக்களை பொருளாதார சமூக கல்வி மேம்பாட்டிற்;காக பயன்படுத்துவோமாக. இச் சிந்தனைகளை செயற்படுத்த எமது மனித வளம் எமக்கான அபிவிருத்தி பற்றி தெளிவான அறிவை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வளங்கள் பற்றி விபரிக்கும் ‘வெட்லி சிமிட்சன்’ எனும் அறிஞர் மனித அறிவே உலகில் கிடைக்கும் எல்லா மூலங்களையும் விட மிகச்சிறந்தது என்கிறார். வளம் என்பது அறிவியல் கலாசாரத்தின் செயற்பாடே என்பது இவரது முடிவு. புவியில் பரந்துள்ள இயற்கை நிலைமைகளை வளங்களாக மாற்றுவதற்கு மனித அறிவு வளர்ச்சி இன்றியமையாதது. மனித அறிவு எனும் போது கல்வி கற்ற தொழில்நுட்ப அறிவு கொண்ட சமூகத்தை குறித்து நிற்கின்றது. ஒரு நாடு அபிவிருத்தியடைய அந்நாட்டு மக்கள் இயற்கை வளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற அறிவு கொண்டவர்களாக இருத்தல் அவசியம். இல்லாது விடின் அந்நாட்டில் காணப்படும் வளங்கள் மறை வளங்கள் என்ற நிலைமையிலேயே காணப்படும்.

Teachers Day Island  (3)உதாரணமாக கி.முற்பட்ட காலத்திலேயே நில நெய் புவியின் கீழ் இருந்துள்ளது. ஆனால் தொழில்நுட்பவிருத்தியால் வடிகட்டும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் வாகனங்கள் இயக்குவதற்கு அதனை எரிபொருளாக பயன்படுத்தலாம் என்ற தொழில்நுட்ப அறிவு விருத்தியின் பின்னரே அவை வளமாக மாற்றப்பட்டன. இறப்பர் மரம் அமேசன் காடுகளில் இயற்கையாக வளரும் தாவரம். இறப்பர் மரத்திலிருந்து பால் பெற்று தொழில்நுட்ப முறைகளை புகுத்தி ரயராக ரியுப்பாக பயன்படுத்தலாம் என்ற அறிவு வளரும் வரை அவை மறை வளமாகவே இருந்துள்ளன. இவ்வாறு இன்றும் பல வளங்கள் எமது அறிவு விருத்தியின்மையால் பயன்பாட்டிற்கு உட்படாது இருத்தல் கூடும். எதிர்காலத்தி;ல் மேலும் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பங்களால் அவற்றின் பயன்பாடு கண்டுபிடிக்கப்படலாம். அது வரை அவ்வளம் ஒரு மறை வளமாக அல்லது உள்ளார்ந்த வளமாகவே இருக்கும். இதிலிருந்து மனித அறிவு, தொழில்நுட்ப விருத்தி என்பனவே முக்கியமான வளம் என்பது பெறப்படுகிறது.

மைக்கேல் ரொடாரோ எனும் பொருளியல் அறிஞர் உண்மையான அபிவிருத்தியெனில் பின்வரும் மூன்று அம்சங்களில் கவனம் கொள்ள வேண்டும் என்றார்.

1. வாழ்வின் தேவை

மனிதனுக்குச் சில அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற வேண்டும். இவை இன்றி அவன் வாழ முடியாது. அவையாவன உணவு, உடை, உறையுள், சுகநலம், பாதுகாப்பு இவை இல்லையெனில் அல்லது குறைவாக இருப்பின் அங்கு குறைவிருத்தி நிலவுகின்றதென்றே கூற வேண்டும்.

2. சுதந்திரம்
இது குறிப்பது அரசியல் கருத்துச் சுதந்திரத்தை ஆகும். சமூக நெருக்குதல், அறியாமை, நிறுவனங்களின் மேலாதிக்கமின்மை, எந்தச் சித்தார்ந்தத்தையும் பின்பற்றும் உரிமை போன்ற சுதந்திரங்கள் நாட்டிற்கும் தனி மனிதனிற்கும் இருக்க வேண்டும். இவை இல்லையாயின் அங்கு அபிவிருத்தி இல்லை.

3.சமமான வருமான பங்கீடு
மனதர்களிடையேயும் பிரதேசங்களிடையேயும் ஏற்றத்தாழ்வு அற்ற நிலையில் வருமானம் பெருமளவு சமனாக பங்கிடப்பட்டு இருத்தல் வேண்டும்.

மேற்படி அம்சங்களையும் மனித வள அபிவிருத்தி பற்றிப் பேசுவோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என மக்கேல் ரொடாரோ வலியுறுத்திக் கூறுகிறார்.

தமிழ் மக்களிடையே அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் நிலை குறைவு. உணர்ச்சி ரீதியாகச் சிந்திப்பதை விடுத்து அறிவு ரீதியாக சிந்தித்து பொருளாதார மேம்பாடு காண வேண்டும். மேலும் சுய மதிப்பு என்பது தமிழர்களுக்கு தன் மண்ணில் குறைவாகவே உள்ளது. சுய மதிப்புடனான வாழ்வை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்பதை தமிழன் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

டட்லி சீயசு எனும் பொருளியல் அறிஞர் அபிவிருத்தி பற்றி கூறும் போது பின்வரும் கேள்விகளை முன்வைக்கிறார். ஒரு தேசம் அபிவிருத்தி அடைந்ததுள்ளது என கருதுவதாயின் அங்கு வறுமையை போக்க என்ன நடந்தது? வேலை இன்மையை போக்க என்ன இடம்பெற்றது? என்ற கேள்விகளை எழுப்ப வேண்டுமென்றும் கணிசமான அளவிற்கு இவை குறைவடைந்து வந்தால் சந்தேகத்திற்கிடமின்றி அந்த நாடு அபிவிருத்தி பாதையில் செல்கின்றது என்று கூறலாம் என கூறுகின்றார். இவற்றுள் ஒன்றோ இரண்டோ பாதகமாக இருக்குமாயின் அந்த நாட்டின் தலா வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்திருந்தாலும் அந் நாடு அபிவிருத்தியடையவில்லை என்றே கூற வேண்டும் என்கிறார். இதன் மூலம் தனியே பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி அல்ல. அபிவிருத்திக்கு பல பரிமாணம் உண்டு என வலியுறுத்துகின்றார்.

PHILIP H. COOMBS என்னும் அறிஞர் மனிதவள அபிவிருத்தியை பின்வரும் நான்கு தலைப்புகளின் கீழ் ஆராய்கிறார்.

1.பொது அல்லது அடிப்படை கல்வி விருத்தி எழுத்தறிவு பெறுதல், ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வியை விருத்தி செய்தல்.

2.கல்வியால் குடும்ப மேம்பாடு காணல், குடும்ப வாழ்வின் தரத்தை உயர்த்துதல்,ஆரோக்கிய வாழ்வு, ஊட்டச்சத்து மேம்பாடு, மனைப்பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு, குடும்பத் திட்டமிடல்.

3.சுமூக மேம்பாட்டு கல்வி வளர்ச்சி, உள்ளூர், சர்வதேச நிறுவனங்களின் வளர்ச்சி, அரசாங்க அரசசார்பற்ற நிறுவனங்களின் வளர்சி, கூட்டுறவு வளர்ச்சி, சமூக மேம்பாட்டுத்திட்டங்கள்.

4.தொழில் சார் கல்வி வளர்சி, பயிற்சி அதிகரித்தல் கருத்தரங்குகள், பயிலரங்குகள், தொழில் சார் பயிற்சிகளை பல மட்டங்களில் வழங்குதல்.

மேற்படி அம்சங்களில் ஒரு நாடோ, பிரதேசமோ கவனம் செலுத்தும் போதே மனிதவள அபிவிருத்தி ஏற்பட முடியுமென PHILIP H. COOMBS வலியுறுத்துகின்றார்.

மேற்படி விடயங்களை மனங்கொண்டு ஆசிரியர்கள் மனித வள அபிவிருத்திக்கு தங்களால் ஆன அர்ப்பணிப்புடனான பங்களிப்பினை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

பேராசிரியர் சிவசந்திரனின் சிறப்புப் பேருரையைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நாட்டார் இசை, நகைச்சுவை கதைப்பிரசங்கம், தனி நடிப்பு, விவாதம், நடன நிகழ்ச்சிகள், குழு இசை என பல்வேறு கலைத்துவ வெளிப்பாடுகளை காணக் கூடியதாக இருந்தது.

தீவக வலயங்களில் கல்வி கற்பிக்கும் நுண்கலை ஆசிரியர்கள் பங்கு கொண்ட மேற்படி நிகழ்வுகள் மிகவும் தரம் வாய்ந்தனவாகவும், பலரால் பாராட்டை பெற்றுக் கொண்டனவாகவும் விளங்கின. கிராமிய பெண்களை போன்று உடையலங்காரம் செய்த இருபதிற்கும் மேற்பட்ட இசை ஆசிரியர்கள் தாளம், அங்க அசைவுடன் நாட்டார் இசை வழங்கியமை அற்புத அனுபவமாக விளங்கிற்று.

நகைச்சுவை கதாபிரசங்கம் செய்த ஆசிரியர் பாடசாலைகளில் இடம்பெறும் சம்பவங்களை நகைச்சுவையாக எடுத்துச் சொன்ன போது பலர் வாய்விட்டுச் சிரித்ததை அவதானிக்க முடிந்தது.

தனி நடிப்பு மூலம் புனர் வாழ்வு பெற்று வந்த போராளிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வெளிக் கொணரப்பட்டன. முன்னர் மதிப்புடன் வலம் வந்த முன்னாள் போராளிகள் இன்று சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதை அற்புதமாக வெளிப்படுத்தினார் ஆசிரியர் ஒருவர்.

மேலும் பரத நாட்டிய அளிக்கைகள், தனி நடனமாகவும், குழு நடனமாகவும் இடம் பெற்றன. இறுதியாக புங்குடுதீவு சித்தி விநாயகர் மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த திருமதி. வி.கிருபாலினியின் நன்றியுரையுடன் ஆசிரியர் தின விழா நிறைவு பெற்றது.