ஆடும் மயிலில் ஆறுமுகம் இயற்கை மெய்நுகர்வியல் இசைக்கும் திருப்புகழ்
சைவசித்தாந்த மெய்யறிவினை நாம் அநுபவரீதியான சிவத்தியானத்தில் உணரலாம். இதனை உணர்ந்த மெய்ஞானிகள் அவற்றினை அடியார்களுக்கு வாழும் நெறியாக உரைத்துள்ளனர். குருசீடப் பரம்பரையாகச் சென்ற மெய்யறிவு பின்னர் ஏடுகளிலும் நூல்களாகவும் அமைந்துள்ளன. பன்னிரு திருமுறைகளிலும் சைவசித்தாந்தசாரம் சிறப்பாகப் பொதிந்துள்ளது. பகவத்கீதை தன்னிலும் அவ்வாறே. இன்றைய விஞ்ஞான விரைவு உலகில் சைவசித்தாந்த இயற்பியல் கருத்துக்களை நவீன பௌதீக ஆய்வுகளுடன் ஒப்பிட்டு நோக்கக்கூடியதாக உள்ளது. உயிரியல், இயற்பியல், மெய்யியல் என்பன ஒருங்கிய மெய்யியல் அறிவியலாக பரிணமித்துள்ளது. அந்தவகையில் திருப்புகழில் உள்ள ஒருங்கிய மெய்யியல் அறிவியலின் ஆழம் எம்மால் அளந்திடவே முடியாது. இருந்தபோதிலும் சில மேற்கோள்கள் எமது இளம் சந்ததியினரால் சைவ மெய்யியலை பாதுகாக்க உதவும். இயற்பியலுக்குச் சமாந்தரமாக சிவஞான மெய்யறிவு விளங்குகின்றது. அதாவது இயற்கை நுகர்வியலே மெய்யியலாக விளங்குகின்றது.
நவீன இயற்பியல் அறிவில் ஒளியலைகளின் துவித நிலையான சக்திநிலையான மின்காந்த அலையாகவும், திணிசு நிலையாகவும் உள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. இவை இலத்திரன் சக்தி அலைவுகளின் நனோ தொழில்நுட்ப பிரயோகம் மூலம் கண்டறியப்பட்டன. அடுத்து திணிசுகளுக்குச் சமனானதும், எதிரானதுமான மாற்றுத் திணிசுகளின் (Antimatter) பௌதீகத் தன்மைகளும் கண்டறியப்பட்டுள்ளன. அடுத்து பிரபஞ்சத்தில் ஈர்ப்பு அலைகளின் உருவாக்கங்களும், அவற்றின் வியாபகங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இவை விஞ்ஞானரீதியில் விழிநிலை தொடர்பான கருதுகோள்களுக்கு அடிப்படையாக அமைகின்றன. குறித்த அலைநீளம் உள்ள சக்தித் திணிசுகள் பிரபஞ்சம் எங்கும் வியாபிக்கும் வல்லமை வாய்ந்தவை என்ற இயற்பியல் கண்டறிவு மந்திர உச்சாடனத்தின் வல்லமையினை உறுதிப்படுத்துகின்றது.
பூமியில் உயிரின் தோற்றம் தொடர்பாக நவீன இயற்பியல் ஆதாரங்கள் சைவசித்தாந்தத்துடன் இயைந்து போவதனை உய்த்துணரக்கூடியதாக உள்ளது.
மேரு மலையினைச் சிவமாகவும், ஏனைய மலைகளை முருகனாகவும் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், சங்கராச்சாரியார் அருளிய செந்திலாதிபன் தோத்திரம் என்பவற்றில் விபரிக்கப்பட்டுள்ளன. மலைகளிலேயே முருகன் உறைந்து அருளுதல், குன்று தோறாடும் குமரன், கதிர்காமன் என வழங்கப்படுகின்றது. முருகனின் சக்தி வேலாகக் கூறப்படுகின்றது. அதுவே சூக்குமமாக எல்லா உயிர்களையும் இயக்குகின்றது.
அருணகிரிநாதர் திருப்புகழில் குன்றுகளிலும், கோபுரத்திலும் உறைந்து அருளும் முருகன் என தெய்வீகசக்தி மலைகளிலும், கோபுரத்திலும் அமையப் பெற்றமையைப் புலப்படுத்துகின்றன. இவை இன்றைய இயற்பியல் விஞ்ஞானத்தில் பிரபஞ்ச ஈர்ப்பு அலைகள் பூமியில் எவ்வாறு உயரிய மலைகளிலும், கோபுரங்களிலும் ஒடுங்குகின்றன என்பதனை இயற்கையாகவே வாழ்வியலில் எடுத்துக் காட்டுகின்றதனை உவமிக்கலாம்.

ஆறுமுகமான பொருளை அருணகிரிநாதருக்கு அருளிய பாடல்.
“வாறினை யடர்ந் வேல்விழியன் தங்கள்
மாய மொழிந்து தெளியோனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபா மணிந்து பணியேனே
ஆதியொரு மந்தமாகிய நலங்கள்
ஆறுமுக மென்று தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாருமயிலென்ப தறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானில மலைந்து திரிவேனே
நாகமணி கின்ற நாதனிலை கண்டு
நாடியதில் நின்று தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வு சிவமென்ற
சோகமது தந்து எனையாழ்வாய்
சூலர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற பெருமாளே.
“ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்” என அருணகிரிநாதர் பக்தி நிலைக்கு ஆதிசங்கரரின் விளக்கங்கள்.
பொன்னொளி பரப்பும் கைலைமலை புங்கவானம் பேரொளிப் பிழம்பான சிவபெருமானிடம் வாழிடம். மண்ணில் வாழும் மலைகளும், குன்றுகளும் குமரன் வாழிடம் என்கின்றார்.
ஆதிசங்கரப் பெருமான் முருகனைப் பாடியருளிய ‘சுப்பிரமண்ய புஜங்கம்’ என்ற வடமொழிச் செய்யுளின் செந்தமிழ்க் கவியாக்கத்தைப் புலவர் சுப. துளசி அவர்கள் செந்திலாதிபன் தோத்திரம் என அருளியுள்ளார். செந்திலாதிபன் தோத்திரத்தில் ஆறுமுகத்தின் பெருமையினைப் போற்றுவது,
“பொன்மேரு கைலையே புண்ணியச் சிவநாதன்
போற்றி வாழ் மலையாகுமே
நண்ணினான் மலையெலாம் நாயகிச் சிவபாலன்
நடராசன் போற்றி செயவே
கண்ணுதல் ஐம்முகன் ஐந்தெழுத் தட்சரன்
கந்தனோ ஆறுமுகனாம்
எண்ணரும் இருமூன்று அட்சரப் பொருளாக
இணைந்தனர் உயிராகவே
தன்னுடைத் தாதையின் ஐம்முகத் தோடுதன்
தாய் முகம் தான் கொண்டனாம்
மன்னிய முகமாறு மாதவச் சக்திகள்
மான்பென உரைப்பதுண்டே.
எண்ணிடும் சரவண பவாவெனும் தத்துவம்
ஏற்றமே அளிக்கும் மந்த்ரம்
கண்ணனின் முகமொன்று கந்தனின் அதோமுகம்
கணிப்பினில் பிளையுமுளதோ”.
ஆறு திருமுகங்களும் ஆதிசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, பராசக்தி, ஞானசக்தி, குடிலாசக்தி என்றும் கருதுவர். மேலும் அ, உ, ம், நாதம், விந்து, சக்தி என்பன ஆறுமுகங்கள் என்றும் ஈசன் திருமுகம் ஒன்றுடன் தேவி திருமுகம் ஒன்றும் சேர்ந்து ஆறுமுகங்கள் என்றும் விளக்குவர். ஆடுமயிலில் ஆறுமுகம் ஓங்காரத்தை அதாவது பிரணவப் பொருளை உணர்த்துகின்றது. இதுவே பிரபஞ்ச நியதி. மேலும் ஆறுதலைத்தமும் முகமாக ஆறுமுகம் விளிக்கப்படுகின்றது. மேலும் கங்கையினை சடையில் வைத்த சிவபெருமானின் ரூபமாகவும், ஆறுமுகம் விநாயகரின் ரூபமாகவும் ஆன பொருள் அமைகின்றது.
“பிறைச் செக்கர்ப் புரைக்கொத்துச் சடைப்பச்சைக் கொடிக்கிச்சைப்
பிறக்குற்றத் திருப்பக்கச் சிவநாதர்
பெருக்கப்புத் தடக்கை கற்பகத் தொப்பை” – திருப்புகழ்
என அருணகிரிநாதர் விநாயகருக்கும் சிவபிரான் போல சிரசிற் சடை, கங்கை, திங்கள், கொன்றை, பாம்பு, முக்கண் என ஆறும் உண்டு. இவையே ஆறுமுகமான பொருள் என அருணாசலஈசர் அருளியுள்ளார்.
மருத்துவர் சி. யமுனாநந்தா


