ஆனையிறவு உப்பு உற்பத்தி ஆரம்பம்: ரஜ உப்பு என்று பெயரிடப்பட்டது!
ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப் போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன் ஊடாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளையோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பும் அதிகரிக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில், மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று (29) இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரன் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு ஆனையிறவில் நடைபெற்றது.
தொழிற்சாலையை விருந்தினர்கள் இணைந்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்த பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன.
தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தனது வரவேற்புரையில், மன்னாரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டாலும் அதனை விட ஆனையிறவு உப்பே தரமானது எனக் குறிப்பிட்டார்.
தற்போது பொருத்தப்பட்டுள்ள நவீன இயந்திரங்கள் மூலம் மணித்தியாலத்துக்கு 5 மெட்ரிக் தொன் மேசை உப்பை உற்பத்தி செய்யமுடியும் எனவும் தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டிலிருந்து உப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.




