செய்திகள்

ஆயுதங்கள் பெற்றோல் குண்டுகளுடன் கைதான 11 பேருக்குப் பிணை வழங்க மறுப்பு

அபாயகரமான ஆயுதங்கள் மற்றும் பெற்றோல் குண்டுகளுடன் கைதான சந்தேகநபர்கள் 11 பேருக்குப் பிணை வழங்க மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளதுடன் சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடித்தும் உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் சுன்னாகம் மயிலணிப் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலுக்குக் காரணமான அளவெட்டி மற்றும் மல்லாகம் பகுதிகளைச் சேர்ந்த 11 பேரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர்.அத்துடன் சந்தேகநபர்களிடமிருந்து 4 வாள்கள்,2 பெற்றோல் குண்டுகள்,3 கொட்டன்கள் என்பவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்திருந்தனர்.சந்தேகநபர்கள் மீதான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் பிணை வழங்குமாறு கோரியிருந்தனர்.

இதன் போது சந்தேகநபர்களுக்கெதிராக வழக்குத் தொடுநர் சார்பில் ஆஜரான சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.வீ.எல்.துஸ்மந்த சந்தேகநபர்களைப் பிணையில் விடுவிப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த நீதவான் பொதுச் சமாதானத்திற்கு இடையூறு விளைவித்தமை,கலகத்தில் ஈடுபட முயன்றமை,அபாயகரமான ஆயுதங்கள்,வெடிகுண்டுகள் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.இவ்வாறான குற்றங்களுக்குப் பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளதால் மேல்நீதிமன்றத்தில் பிணை கோரி விண்ணப்பிக்குமாறும் தெரிவித்தார். யாழ்.நகர் நிருபர்-