செய்திகள்

”ஆவா” தொடர்பாக பாராளுமன்றத்தில் வெளியான தகவல்கள்

ஆவா குழு தொடர்பான மேலும் பல தகவல்கள் இன்று பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவாக்குழுக்கள் தொடர்பாக வெளியாகும் தகவல்களின் உண்மைத்தன்மை தொடர்பாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதிலளிக்கும் போது புதிய தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி 2011ம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இரண்டுக் குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றதாகவும், அதன்போதே ஆவாக் குழு உருவானதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த குழுவுக்கான முதலாவது வாள் பிரேசிலில் தயாரிக்கப்பட்டு, தமிழ் நாட்டின் ஊடாக அவர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த வாளை ஒத்த வாள்கள் பின்னர் யாழ்ப்பாணத்திலேயே தயாரிக்கப்பட்டதாகவும், இவ்வகையான வாளை தயாரிக்க மறுத்த சிலர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் இந்த குழுவில் மொத்தமாக 62 பேர் இருக்கின்றனர். அவர்களில் 38 பேர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஆவா குழுவுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வழங்கப்பதாகவும், அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் குற்றச் செயல்களை புரிவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து அவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். -(3)