ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சில் 50 பேர் பலி: மாறி மாறி பழிபோடும் அமெரிக்கா, ரஷியா
சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ மற்றும் இட்லிப் பகுதியில் உள்ள 5 மருத்துவ முகாம்கள் மற்றும் இரண்டு பள்ளிகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் அப்பட்டமான சர்வதேச விதிமுறைகளை மீறிய செயல் என்று ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு ரஷிய விமானப் படைகள்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷியா பழியை அமெரிக்கா மீது திருப்பிப் போடுகிறது.
இதுதொடர்பாக, ரஷிய அரசின் ஊடகமான ‘ரோஸியா24’ என்ற தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரஷியாவுக்கான சிரியா நாட்டின் தூதர் ரியாட் ஹட்டாட், ‘அலெப்போ மற்றும் இட்லிப் நகர ஆஸ்பத்திரிகளின்ன் மீது அமெரிக்க போர் விமானங்கள்தான் தாக்குதல் நடத்தின. அந்த சம்பவத்துக்கும் ரஷியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஆரம்பகாலத்தில் இருந்தே சிரியா விவகாரத்தில் ரஷியா மீது பழிபோட்டு அமெரிக்கா நடத்திவரும் பிரச்சாரப் போரின் ஒருகட்டமாகவே அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டையும் நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.




