இது வெறுமனே சட்டம், ஒழுங்குப் பிரச்சினையல்ல… !
வீரகத்தி தனபாலசிங்கம்
நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களின் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் எதிராக அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைத் தாக்குதல்களையடுத்து தோன்றியிருக்கும் நிலைவரம் குறித்து கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை ஆராய்ந்தது. இதைத் தொடர்ந்து அமைச்சரவை பொலிஸ் மா அதிபருக்கு விடுத்த அறிவுறுத்தலில் சகல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் தங்களது கண்காணிப்புக்குட்பட்ட பகுதிகளில் இன அமைதி பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்று பணிப்புரை வழங்குமாறு அவரைக் கேட்டுக்கொண்டது. தங்கள் பகுதிகளில் இன அமைதி பேணப்படுவதை உறுதி செய்யாவிட்டால் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கடமை தவறிய குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்றும் அரசாங்கம் அறிவித்தது. இன அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சம்பவத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால் அதற்கு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளே பொறுப்பையேற்க வேண்டியிருக்கும் என்பதே இதன் மூலமாக அரசாங்கம் தெரியப்படுத்திய செய்தியாகும்.
அமைதியைச் சீர்குலைத்து இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்து பவர்களுக்கு எதிராக உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்தது. விரக்தியுற்ற அரசியல்வாதிகள் ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப் போன்ற இன மோதல்களை மீண்டும் ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை தடுக்க வேண்டிய அவசியத்தையும் இனங்களுக்கிடையில் அமைதியைப் பேண வேண்டிய அவசியத்தையும் ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வலியுறுத்தியிருக்கிறார்கள். நாட்டை ஐக்கியப்படுத்துவதிலும் கடந்த அரசாங்கத்தின் தவறான நிருவாகத்தின் விளைவாக பெரிதும் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலுமே கவனத்தைச் செலுத்தவேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் இனவெறியையும் தீவிரவாதத்தையும் நாடுவதன் மூலமாக ஆட்சியதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கின்றார்கள். ஆனால் நாட்டின் ஐக்கியத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் இத்தகைய ஆபத்தான வழிமுறைகளைத் தோற்கடிக்க மக்கள் ஐக்கியப்பட வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தியதாகவும் அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனா போன்ற தீவிரவாத சிங்கள பௌத்த அமைப்புக்கள் அண்மைக்காலமாக தீவிரப்படுத்தியிருந்த இனவெறிப் பிரசாரங்களையும் வன்முறைகளையும் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் ராஜபக் ஷ ஆட்சியைப் போன்றே இன்றைய தேசிய ஐக்கிய அரசாங்கமும் மெத்தனமாக இருக்கிறது என்று சிறுபான்மையின சமூகங்கள் மத்தியில் பெரும் விரக்தி நிலை தோன்றியிருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தவர்களின் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களில் தீவிரவாதப் போக்குடைய பிக்குமார் நேரடியாக தலையீடு செய்வதைக் கண்டும் கூட பொலிஸார் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஞானசார தேரர் உயர் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையிலேயே அரசாங்கத் தலைவர்களை குறிப்பாக ஜனாதிபதியையும் பிரதமரையும் கூட அவமதித்துப் பேசுவதையும் பொலிஸாரால் தடுக்க முடியாமல் இருக்கிறது. பொலிஸாரின் இந்தச் செயலின்மை இந்தத் தீவிரவாத பிக்குமார் தாங்கள் நாட்டின் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று ஏற்கனவே வளர்த்துக் கொண்டிருக்கும் தவறான எண்ணத்திற்கு மேலும் வலுவூட்டுவதாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பின்னணியிலேயே இன அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயற்பாட்டையும் தடுத்து நிறுத்தவதற்கு பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் இடம்பெறக்கூடிய இனமோதல் சம்பவங்களுக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் அரசாங்கம் கூறியிருப்பதை நோக்க வேண்டும்.
இன அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களுக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளைப் பொறுப்பாளிகளாக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தீவிரவாத சிங்கள பௌத்த அமைப்புகளின் அடாவடித்தனமான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருக்கும் போக்கை இல்லாமல் செய்வதற்கான நோக்கத்தைக் கொண்டது என்பதைப் புரிந்துக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஆனால், இந்தத் தீவிரவாத அமைப்புக்களின் இன, மத வெறித்தனமான செயற்பாடுகளின் விளைவாகத் தோன்றுகின்ற அமைதியின்மையை வெறுமனே ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகவும் பொலிஸார் தங்களது கடமையை ஒழுங்காகச் செய்தால் தீர்த்து வைக்கப்படக்கூடியது என்றும் அரசாங்கம் குறுக்கி நோக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இது உண்மையில் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் எதிரான பாரம்பரியமான பெரும்பான்மையினவாத அரசியல் கலாசாரத்தின் விளைவான பிரச்சினை என்ற வகையில் நோக்கப்பட வேண்டியதாகும். சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான அரசியலை தென்னிலங்கையில் எந்த இடத்திலும் எவரும் எந்த விதமான இடையூறுமின்றி செய்யக்கூடியதாக இருக்கின்றதொரு சூழ்நிலையை இல்லாமல் செய்யக்கூடிய வகையிலான அரசியல் கலாசாரம் ஒன்று தோற்றுவிக்கப்படாத பட்சத்தில் தீவிரவாதப் போக்குடைய பிக்குமாரின் தலைமையிலான குழுக்களின் செயற்பாடுகளைத் தடுப்பதென்பது இயலாத காரியமேயாகும்.
இத்தகைய பிக்குமாரின் அமைப்புக்கள் சிங்கள பௌத்த சமூகத்தின் நலன்களை பாதுகாப்பதற்காகவே தாங்கள் குரல் கொடுப்பதாகக் கூறுகின்றன. ஆனால் அவை அந்தச் சமூகத்தின் நலன்களைப் பற்றிப் பேசுவதாகக் கூறிக்கொண்டு முன்னெடுப்பதெல்லாம் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் எதிரான பிரசாரங்களும் செயற்பாடுகளுமாகவே இருக்கின்றன. இன அமைதியைக் குலைக்கின்ற இத்தகைய செயற்பாடுகள் பெரும்பான்மையினத்தின் மத்தியில் இருக்கக்கூடிய ஒரு சிறிய எண்ணிக்கையினராலேயே முன்னெடுக்கப்படுகின்றன என்று தென்னிலங்கையின் அரசியல் கட்சிகள் கூறுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அப்படியானால் இன அமைதியைப் பேணுவதில் அக்கறைகொண்ட பெரும்பான்மையினத்தவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்துக்கள் பொது வெளியில் ஏன் உரத்து ஒலிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. பெரும்பான்மையினத்தவர்களின் பொதுப்படையான அரசியல் சிந்தனைப் போக்குகளில் சிறுபான்மையினத்தவர்களின் நியாயபூர்வமான அரசியல் உரிமைகள் மற்றும் அபிலாசைகளுக்கு எதிரான நிலைப்பாடுகள் பெருமளவுக்கு ஆதிக்கம் செலுத்துவதே இதற்குக் காரணமாகும். அத்தகைய நிலைப்பாடுகளின் ஆதிக்க நிலையை தளர்த்துவதற்குப் பதிலாக மேலும் வலுப்படுத்தக்கூடிய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலேயே தென்னிலங்கையின் பிரதான போக்கு அரசியல் கட்சிகளும் காலங்காலமாக அக்கறை காட்டி வந்திருக்கின்றன. மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போர் இந்த நிலைவரத்தை மேலும் படுமோசமானதாக்கியிருக்கிறது.
உள்நாட்டுப் போரின் முடிவு இனங்களுக்கிடையிலான உறவுகளையும் அந்தப் போருக்கு வழிவகுத்த காரணிகளை இல்லாமல் செய்யவேண்டிய அவசியத்தையும் பொறுத்தவரையில் பெரும்பான்மையினத்தவர்களின் உணர்வு நிலையில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தியதாக இல்லை.இலங்கைச் சமுதாயத்தின் இனப்பிளவு தளர்வடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
ராஜபக்ஷ அரசாங்கம் போர் வெற்றிக் குதூகலத்தில் சிங்கள மக்களை மிதக்கவிட்டு இராணுவவாத அரசியலை முழுமூச்சாகமுன்னெடுத்தது. விடுதலைப்புலிகள் இறுதிப்போரில் தோற்கடிக்கப்பட்ட முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலில் இனப்பிரச்சினையும் புதைக்கப்பட்டுவிட்டது என்ற உணர்வுடனேயே அந்த அரசாங்கம் செயற்பட்டது.போரின் வெற்றிக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண்பதற்கு சிங்கள மக்களின் ஆதரவைப் பெறக்கூடிய தகுநிலையில் இருந்ததாக வெளியுலகம் நம்பிக்கை கொண்டிருந்த அதேவேளை அவரோ நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பான அரசியல் சூழ்நிலை உருவாகாதிருப்பதை உறுதிசெய்யக்கூடிய அரசியல் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் முன்னெடுப்பதிலேயே அக்கறையாக இருந்தார்.தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பதாகக் கூறிக்கொண்ட அவர் நல்லிணக்கச் செயன்முறைகள்தொடர்பில் சர்வதேச சமூகம் முன்வைத்த யோசனைகளையும கோரிக்கைகளையும் இலங்கையின் சுயாதிபத்தியத்தின் மீதான அத்துமீறல் என்று தென்னிலங்கை மக்களுக்குப் பயம்காட்டி தனது அதிகாரத்தை வலுப்படுத்துவதலேயே குறியாக இருந்தார். அவரின் ஆட்சியின் இறுதிக்கட்டங்களில் பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பிரசாரங்களையும் வன்செயல் நடவடிக்கைகளையும் கட்டவிழ்த்துவிடத் தொடங்கின.ராஜபக் ஷ அரசாங்கம் அந்த அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது மாத்திரமல்ல அனுசரணையாகவும் செயற்பட்டது.ஒட்டு மொத்தத்தில் ராஜபக் ஷ மூன்றாவது பதவிக் காலத்துக்கு மக்களின் ஆணையைப்பெறுவதற்கு தேர்தலை அறிவித்த வேளையில் நாட்டில் இனஉறவுநிலை படுமோசமானதாக இருந்தது.
தமிழர்கள், முஸ்லிம்கள் மாத்திரமல்ல சிங்களவர்கள் மத்தியில் உள்ள கிறிஸ்தவர்கள் உட்பட சகல சிறுபான்மையினத்தவர்களினதும் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்ட நிலையிலேயே ராஜபக் ஷ 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலைச் சந்தித்தார். அந்தச் சிறுபான்மையினத்தவர்களின் அமோக ஆதரவைப்பெற்று தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவும் அவரால் பிரதமராக நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் புதியதொரு அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்கப் போவதாக நாட்டுமக்களுக்கு வாக்குறுதியளித்தார்கள்.புதிய அரசியல் கலாரசாரம் எனபது ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம், குடும்ப அரசியல் ஆதிக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவு ஆகியவை இல்லாத அரசாங்க நிருவாகம் என்பதாக மாத்திரம் அர்த்தப்பட்டுவிடாது. இலங்கையின் பன்முகத்தன்மையை அங்கீகரித்து சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளையும் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலையை தோற்றுவிப்பதாகவும் அது அமையவேண்டும்.குறிப்பாக சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான இன, மதவெறித்தனமான பிரசாரங்களையும் செயற்பாடுகளையும் கட்டவிழ்த்துவிடுகின்ற சக்திகள் சட்டத்தில் இருந்து விடுபாட்டுரிமை பெற்றவை போன்று இயங்கக்கூடியதாக இருக்கின்ற போக்கிற்கு முடிவுகட்டுவதாகவும் அந்த புதிய கலாசாரம் இருக்கவேண்டும்.

அந்த அடிப்படையில் நோக்குகையில், ஜனாதிபதி சிறிசேனவினதும் பிரதமர் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கம் கடந்த இரண்டரை வருட காலத்தில் தோற்றுவித்த அரசியல் கலாசாரத்தின் இலட்சணம் பற்றிய கேள்வி எழுகிறது. ஞானசார தேரர் போன்ற தீவிரவாத பிக்குகள் தலைமையிலான சிங்கள பௌத்த அமைப்புகள் ஆட்சி மாற்றத்துக்குப்பிறகு சிறிது காலம் உறங்கு நிலைக்குச் சென்றிருந்தன. அண்மைக்காலமாக மீண்டும் அவற்றின் சிறுபான்மையின விரோதச் செயற்பாடுகள் தீவிரமடைய ஆரம்பித்திருந்ததையடுத்து தோன்றியிருக்கும் நிலைவரம் குறித்து இரு வாரங்களுக்கு முன்னர் இந்தப் பத்தியில் ஆராயப்பட்டிருந்தது. அந்த அமைப்புக்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காமல் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்துவந்தமை குறித்து கடுமையான விமர்சனங்கள் கிளம்பியிருந்தன. அதற்குப் பிறகே அதுவும் இன்றைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவது குறித்து ஞானசார தேரர் பேசியதையடுத்தே இன அமைதியைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பேரில் தீவிரவாத பிக்குமாரைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது. அந்தப் பின்புலத்திலேயே மீண்டும் அது குறித்து இன்றும் எழுதவேண்டியேற்பட்டது.
தேசிய ஐக்கிய அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதிச் செயன்முறைகளை முன்னெடுப்பது குறித்து சர்வதேச சமூகத்துக்கு ‘படம் காட்டுவதற்காக’ பேசிக்கொண்டிருந்ததே தவிர, போருக்கு வழிவகுத்த காரணிகளை படிப்படியாக இல்லாமல் செய்வதற்கு அந்தச் செயன்முறைகள் அத்தியாவசியமானவை என்ற அரசியல் செய்தியை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் நோக்கில் எந்த நடவடிக்கையையும் எடுப்பதில் அக்கறை காட்டவில்லை. இதன் விளைவாக நல்லிணக்கத்துக்கும் இன நெருக்டிக்கான தீர்வு உட்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கும் எதிரான அரசியல் சக்திகள் தங்களை வலுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தோன்றிய ஒப்பீட்டளவிலான ஜனநாயக வெளியை இந்தச் சக்திகள் உச்சபட்சத்துக்கு பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இனவெறுப்பு அரசியல் சக்திகள் இந்தச் சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றன. அவற்றின் செயற்பாடுகளை முறியடிக்கக்கூடிய உருப்படியான அரசியல் கொள்கைகளோ அணுகு முறைகளோ அரசாங்கத்திடம் இல்லை. அதன் காரணத்தினால்தான் பொலிஸார் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்தால் இன அமைதியைச் சீர்குலைக்கும் சக்திகளை கட்டுப்படுத்த முடியும் என்ற பேச்சு அரசாங்க தலைவர்களிடமிருந்து வருகிறது. உண்மையில் இது வெறுமனே சட்டம், ஒழுங்குப் பிரச்சினை இல்லை. சிறுபான்மையின விரோதச் சிந்தனைப் போக்குகளின் ஆதிக்கத்திலான அரசியல் கலாசாரத்தின் பொல்லாங்கேயாகும்.




