செய்திகள்

இந்தியக் குழுவுடனான பேச்சுக்களின் பின்னரே ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம்: ரணில் அறிவிப்பு

இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தம் இந்த வருட நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படஇருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதில் வெளிநாட்டவர் தொழில்புரிய இடமளிக்கும் சேவைத்துறை விடயம் நீக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மார்ச் 4ஆம் திகதி இங்குவரும் இந்திய தூதுக்குழுவுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதி வரைபு தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இரகசியமாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்த அவர் இறுதி ஒப்பந்த வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சகல தரப்பினரினதும் கருத்துக்கள் பெறப்படும் எனவும் குறிப்பிட்டார். இந்தியாவுடனான ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிவிப்பொன்றை வெ ளியிட்ட அவர், மேலும் குறிப்பிட்டதாவது,

“பத்து இலட்சம் தொழிவாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக எமது சந்தை வாய்ப்புக்களை விஸ்தரிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள மத்திய தரப்பினரை இலக்குவைத்து எமது உற்பத்தி சந்தையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். ஐரோப்பா, இந்தியா, சீனா, சிங்கப்பூர், துருக்கி போன்ற நாடுகளில் உள்ள சுமார் ஒரு பில்லியன் கொண்ட மத்தியதரப்பினருக்கு எமது உற்பத்திகள் சென்றடைய திட்டமிட்டிருக்கிறோம். இதற்காக உலகில் உள்ள பல்வேறு நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக, தொழில்நுட்ப துறைசார் ஒப்பந்தங்களை மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம்.

ஜீ.எஸ்.பி பிளஸ் ஊடாக ஐரோப்பாவில் உள்ள 50 கோடி சனத்தொகை மத்தியில் எமது வர்த்தக சந்தையை விஸ்தரிக்க அவகாசம் ஏற்பட்டது. மோசடி ராஜபக்ஷ ஆட்சியினால் இந்த நிவாரணத்தை இழக்க நேரிட்டது. மீன்பிடித் ஏற்றுமதி தொடர்பிலும் தடைவிதிக்கப்பட்டது. இந்த நிவாரணங்களை மீளப்பெற நாம் நடவடிக்கை எடுத்துவருகிறோம். எமது கொள்கைகளை முன்னெடுப்பதற்கு மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது.

அதனால் எவருக்கும் இந்த மக்கள் ஆணைக்கு எதிராக செயற்பட முடியாது. துரோகிகளே இதற்கு எதிராக செயற்படுவார்கள். எமக்கு கிடைத்த மக்கள் ஆணையின் பிரகாரம் ஐரோப்பிய சந்தைக்குள் நுழையவும் இந்தியாவுடன் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம்.”
R-06