”இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை”: இந்திய உயர்ஸ்தானிகர் உறுதி!
13ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றம் இல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவுக்கும் இடையிலான விசேட சந்திபொன்று இன்று காலை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், கோவிந்தம் கருணாகரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், இந்திய உதவி உயர்ஸ்தானிகர், அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பிலும் இலங்கையில் இந்தியா எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இந்தியா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இந்திய உயர்ஸ்தானிகர் கூட்டமைப்பின் எம்.பிகளுக்கு விளக்கமளித்தார்.
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடைபெற வேண்டுமென்பதில் இந்தியாவும் பிரதமர் மோடியும் உறுதியாக இருப்பதாகவும் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதில் இந்தியா காத்திரமாக செயல்படுவதாகவும் உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே இந்தச் சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.
-(3)




