செய்திகள்

இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சி? – தேர்தல் முடிவுகள்!

இந்தியாவின் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் கடந்த முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் நாடு முழுவதும் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முடிவடைந்துவிட்டதால், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

எந்த கட்சியும் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 543 மக்களவை தொகுதிகளில், 272 தொகுதிகளில் வெற்றிபெறவேண்டும்.

வெளியாகியுள்ள முடிவுகளின்படி, நண்பகல் ஒரு மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 296 இடங்களிலும், இந்தியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

இந்தப் போக்கு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாக்கி வந்தாலும், கடும் நெருக்குதலுடன் கூடிய வெற்றியையே பெறும் என்பது தெரிகிறது.

-(3)