இந்திரஜித் குமாரசுவாமியின் நியமனத்தால் தவிர்க்கப்பட்ட பாரிய அரசியல் நெருக்கடி
மத்திய வங்கியின் ஆளுநராகபணியாற்றியவேளை பல சர்ச்சைகளை எதிர்கொண்ட முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூரிற்கு எமிரேட்ஸ் விமானத்தில் பயணமானார்.
அவர் தொடர்ந்தும் இலங்கை மத்தியவங்கியின் ஆளுநராகபதவி வகிக்காத போதிலும் அவரது பதவிக்காலத்தின் இறுதியில் ஏற்பட்ட நெருக்கடிகளால் நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்காலத்திற்கு ஏற்படவிருந்த ஆபத்து புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தவிர்க்கப்பட்டது.
இந்த விடயத்தில் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசனை செய்த பின்னர் நான் புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமியை நியமித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்தார்.
ஆசியாவுடனான பொருளாதார உறவுகள் குறித்து ஆராய்வதற்கான குழுவில் பிரதமர் கடந்த வாரம் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமியையும் இணைத்திருந்ததை கருத்தில்கொள்ளும்போது. தற்போதைய நியமனம் காரணமாக பிரதமர் பெரும் மகிழ்ச்சியடைந்திருந்தார் என கருதலாம்.
அதேவேளை ஆசியாவுடனான பொருளாதார உறவுகள் குறித்து ஆராய்வதற்கான குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் இன்னொரு முக்கியமான நபர் சரித்தரத்வத்த- பிரதமர் இவரையே மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்குமாறு வற்புறுத்தியிருந்தார்.மேலும் முன்னாள் ஆளுநர் மகேந்திரனின் நெருங்கிய நண்பர் என கருதப்படும் இலங்கையின் தலைசிறந்த பொருளாதார நிபுணர் என கருதப்படும் பாஸ்கரலிங்கமும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை பிரதமர் இந்த விடயத்தில் தனது பிடிவாதத்தை மாற்றிக்கொள்வதற்கும் தயாராகயிருந்தார். எனினும் ஜனாதிபதி புதிய ஆளுநராக குறிப்பிட்ட ஓரு நபரையே நியமிக்கவேண்டும் என பிடிவாதமாக காணப்பட்டார்- அந்த நபர் மத்தியவங்கியின் சிரேஸ்ட பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்க.
குமாரசுவாமியின் தொழிற்சார் நிபுணத்துவம் குறித்து எந்தவித சந்தேகங்களும் இல்லை. அதேவேளை அவர் பல இலங்கையர்கள் தற்போது கடுமையாக எதிர்க்கும் ஓரு விடயத்திற்கு சார்பாக தனது நிலைப்பாட்டை கொண்டுள்ளார் . அந்த விடயம் இந்தியாவுடன் எட்கா ஓப்பந்தத்தை செய்துகொள்வது தொடர்பானது- புதிய ஆளுநர் குறிப்பிட்ட ஓப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திடவேண்டும் என நிலைப்பாட்டை கொண்டுள்ளார். அது குறித்த பேச்சுக்களை மேற்கொள்ளும் குழுவிலும் காணப்படுகின்றார்.
பிரதமர் – ஜனாதிபதி மத்தியில் காணப்பட்ட இழுபறி நிலை
இலங்கையின் புதிய மத்தியவங்கி ஆளுநராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமரிற்கும் இடையில் காணப்பட்ட இழுபறிநிலை தேசிய அரசாங்கம் வீழ்ச்சியடையும் நிலையை உருவாக்கியிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வரை பிரதமரும் ஜனாதிபதியும் யாரை நியமிப்பது என்பது தொடர்பில் தமக்குள் இணக்கப்பாட்டை எட்டாத நிலையே நிலவியது. பிரதமர் சரித்த ரத்வத்தையை நியமிக்கவேண்டும் என பிடிவாதமாக காணப்பட்டார். அவர் தனது வேண்டுகோளை எழுத்துவடிவில் வழங்கியிருந்தார். அதேவேளை ஜனாதிபதி மத்தியவங்கியின் சிரேஸ்ட பிரதிஆளுநர் நந்தலால் வீரசிங்கவையே நியமிக்கவேண்டும் என்பதில் உறுதியாக காணப்பட்டார்.
முன்னதாக கடும் எதிர்ப்பு நிலவியபோதிலும் பிரதமர் முன்னாள் ஆளுநரிற்கு பதவிநீடிப்பை வழங்கியிருந்தார்- இது 30 திகதி இடம்பெற்றது. இதேவேளை செவ்வாய்கிழமை இடம்பெற்ற நாணயசபையின் கூட்டத்தில் மகேந்திரனின் விசுவாசியான பிரதி ஆளுநர் மகேந்திரனை நியமிப்பது செல்லுபடியாகும் என்ற கடிதத்தை தீடிர் என சமர்ப்பித்தார். பின்னர் மகேந்திரன் சமரசிறியை தற்காலிக ஆளுநராக நியமிப்பதாக தெரிவித்தார், எனினும் திறைசேரி செயலாளர் இதனை கடுமையாக எதிர்த்தார்.
அதேநாளில் பிரதமரும் அமைச்சர் மலிக்சமரவீரவும் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டனர்.
அன்றைய தினம் அடுத்த சில மணித்தியாலங்களில் புதிய மத்தியவங்கி ஆளுநர் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி டிவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் யாப்பா அனுபவமுள்ள ஒருவர் நியமிக்கப்படுவார் என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அவர் மறைமுகமாக நந்தலால் வீரசிங்கவையே குறிப்பிட்டிருந்தார்.
தான் மத்தியவங்கிக்கு அன்று மாலை செல்லப்போவதாகவும் அங்குள்ள மூத்த அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்ட பின்னர் நந்தலாலை நியமிக்கப்போவதாகவும் ஜனாதிபதி தனது நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பின்னர் பிரதமரும், ஜனாதிபதியும் மத்தியவங்கிக்கு சென்ற பின்னர்,ஜனாதிபதியின் சகாக்கள் பலர் அவசர தொலைபேசி அழைப்புகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. ஏதோ தவறு நடந்துவிட்டது என அவர்கள் அச்சம் கொண்டிருந்தனர். இதேவேளை மத்தியவங்கிக்கு வருமாறு ஜனாதிபதி பிரதமரிற்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும், ஜனாதிபதிக்கும் ஆளுநர்களிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பின் இடையில் பிரதமர் அவசரஅவசரமாக உள்ளே நுழைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பில் பிரதமர் மகேந்திரனின் பதவிக்காலத்தை நீடிக்ககூடாது அதேவேளை சரித்தரத்வத்தையை நியமிக்கவேண்டும் என வற்புறுத்தியுள்ளார். எனினும் ஜனாதிபதி இதனை நிராகரித்த பின்னர் பிரதமர் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகப்போவதாக எச்சரித்துள்ளார்.
ரணில் ஏன் சரித்த ரத்வத்தை வேண்டும் என பிடிவாதம் பிடித்தார்
சரித்தரத்வத்தை பல தசாப்தகாலமாக பிரதமருடன் பணியாற்றுபவர். 1970 முதல் என்பது முக்கியமானது. அவரது பணியாற்றல் என்பது மிகவும் பாரட்டப்பெற்றவொன்று. தான் ஆட்சிக்கு வந்தவேளைகளில் எல்லாம் பிரதமர் சரித்த ரத்வத்தையை முக்கிய பொறுப்புகளிற்கு நியமித்துள்ளார் . தற்போது பிரதமரின் நெருங்கிய ஆலோசகராக காணப்படுகின்றார்.
அரசியல் விளைவுகள்
கலாநிதி குமாரசுவாமியின் நியமனம் தேசிய அரசாங்கம் வீழ்ச்சியை சந்திக்ககூடிய விதத்தில் உருவான அரசியல் நெருக்கடியை தவிர்த்துள்ளது. எனினும் கடந்த வாரம் ஜனாதிபதிக்கும் பிரமருக்கும் இடையில் காணப்பட்ட அந்த இழுபறிநிலை ஐக்கியமுன்னணி அரசாங்கத்திற்கான பிழையான சகுனமாகவே கருதப்படுகின்றது. இந்த இழுபறி நிலை ஜனாதிபதியின் பொறுமையை கடுமையாக சோதித்தது.





