செய்திகள்

இனங்களுக்கிடையே சூழ்ச்சிகளை ஏற்படுத்த முயற்சி : அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார் ஜனாதிபதி

நாட்டில் இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்த சூழ்ச்சிகள்  முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  இது தொடர்பாக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலம்சென்ற சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரர் மறைந்து ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று மாலை கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிங்கள, முஸ்லிம் மக்களின் ஐக்கியத்தைக் குலைத்து சாதாரண பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பில் நாட்டின் அனைத்து பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். என தெரிவித்துள்ளார்.

இதேவேளை அங்கவீனமுற்ற படைவீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற 4 மாதங்களுக்கு முன்னரே அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும், சிலரது அரசியல் தேவைகளுக்காக அந்த அப்பாவிப் படையினரை பிழையாக வழிநடத்தி குழப்ப நிலையை உருவாக்க சிலர் முயற்சித்தனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை ஒரு சிறந்த நாடாகக் கட்டியெழுப்புவதற்காக சங்கைக்குரிய சோபித தேரர் அவர்கள் துணிவோடு செயற்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சமய ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் என்றும் இந்த அர்ப்பணிப்பும் தியாகமும் பொது அபேட்சகர் தேர்தல் பிரசாரங்களுக்கும் முன்பிருந்தே அவரிடம் நீண்ட காலமாக இருந்துவந்ததாகும் என்றும் தெரிவித்துள்ளார் -(3)